தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU Courses- பாண்டியர் செய்த போர்கள்

  • 4.3 பாண்டியர் செய்த போர்கள்

    முற்காலப் பாண்டியர் எனக் கூறப்படும் 14 மன்னர்களும் அண்டை நாட்டாருடன் போர் புரிவதைத் தொழிலாக கொண்டிருந்தனர். இவர்கள் தங்களது பேரரசினை விரிவுபடுத்தவும், தங்களது ஆதிக்கத்தை அண்டை நாடுகளின் மீது செலுத்துவதற்காகவும் ஓயாமல் போரில் ஈடுபட்டிருந்தனர்.

    4.3.1 பல்லவருடன் போர்

    பாண்டியர்களுக்கு முக்கியமான பகைவராக இருந்தது பல்லவர் என்பது அவர்கள் செய்த போர்களின் மூலம் அறிய முடிகிறது.

    பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணு (கி.பி. 575-615) பாண்டியனை வென்றதாக அவன் காலத்துக் காசாக்குடிப் பட்டயத்தின் மூலம் தெரியவருகிறது. அன்று முதல் பல்லவருக்கும் பாண்டியருக்கும் பகைமை ஆரம்பம் ஆனது எனலாம். அச்சமயம் முற்காலப் பாண்டியருள் ஒருவனான மாறவர்மன் அவனி சூளாமணி ஆட்சி புரிந்து வந்தான்.

    மாறவர்மன் அரிகேசரி பல வெற்றிகளை அடைந்திருந்ததால் அவன் புகழ் ஓங்கியிருந்தது. இப்பாண்டிய மன்னன் பல்லவ நாட்டினுள் படையுடன் புகுந்து சங்கர மங்கை என்னும் இடத்தில் பல்லவர்களை வெற்றி கொண்டான்.

    இரண்டாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் காலத்தில் அவனுடன் புதுகோட்டை மாவட்டத்தில் போர் புரிந்தான். இப்போரில் நந்திவர்மன் சிறைபிடிக்கப்பட்டான்.

    நெடுஞ்சடையன் பராந்தகன் தஞ்சைக்கு அருகில் உள்ள பெண்ணாகடத்தில் பல்லவரை எதிர்த்துப் போரிட்டான்.

    முதலாம் வரகுணபாண்டியன் பலம் குன்றிய பல்லவ மன்னன் தந்திவர்மனைப் புறங்கண்டான்.

    சீமாறன் சீவல்லபன், பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனுடன் போர் புரிந்து தெள்ளாறு என்னுமிடத்தில் அவனிடம் தோல்வியுற்றான்.

    முற்காலப் பாண்டிய மன்னர்களுள் பெரும்பாலோர் பல்லவ நாட்டாருடன் போர் புரிந்து வந்தனர் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

    4.3.2 சோழருடன் போர்

    மாறவர்மன் அரிகேசரி ஒரே நாளில் சோழரை வெற்றி கொண்டு அவர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டான். இதன் மூலம் சோழ வேந்தனின் மகளை மணம் செய்து கொண்டான்.

    கோச்சடையன் ரணதீரன் அரசியலில் இறைமை பெற விரும்பிச் சோழருடன் போர் புரிந்து வெற்றி பெற்றான்.

    முதலாம் வரகுண பாண்டியனின் கல்வெட்டுகள் சோழநாடு முழுவதும் கிடைக்கப் பெற்றுள்ளதால் பாண்டியரது ஆதிக்கம் சோழ நாட்டிலும் பரவியது தெரிய வருகிறது.

    இரண்டாம் வரகுண பாண்டியன் சோழ நாட்டையும், தொண்டை நாட்டையும் கைப்பற்ற வேண்டும் என்று எண்ணிச் சோழ நாட்டின் மீது படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றான். காவிரியாற்றுக்கு வடக்கேயுள்ள இடவை என்னும் நகரை அவன் கைப்பற்றிக் கொண்டான். அவ்வமயம் சோழ மன்னன் ஆதித்த சோழன் அவனுடன் போர் புரிந்தான்.

    முற்காலப் பாண்டியருள் கடைசி மன்னர்களான மூன்றாம் இராசசிம்மன் மற்றும் வீரபாண்டியன் போன்றோர் சோழருடன் போர் புரிந்தனர் இருப்பினும் சுந்தரசோழன் மகன் ஆதித்த கரிகாலனிடம் வீரபாண்டியன் வீழ்ந்ததற்குப் பின்னர், பாண்டிய நாடு சோழர் வசம் மாறியது.

    4.3.3 சேரருடன் போர்

    மாறவர்மன் அரிகேசரி நெல்வேலி என்னுமிடத்தில் சேரர்களுடன் போரிட்டு வெற்றி கண்டான். அத்துடன் நில்லாமல் சேரருடன் துணை நின்ற குறுநில மன்னர்களையும் அடக்கினான். இதனால் சேரர்களும் குறுநில மன்னர்களும் மாறவர்மனுக்குத் திறை செலுத்தினர்.

    கோச்சடையன் ரணதீரன் சேரருடன் போர் புரிந்தவன் ஆவான்.

    சீமாறன் சீவல்லபன் விழிஞத்தில் சேர மன்னனை வென்றதாகச் சின்னமனூர்ச் செப்பேடுகள் கூறுகின்றன.

    4.3.4 ஈழத்துடன் போர்

    சீமாறன் சீவல்லபன் ஈழத்திற்குப் படையெடுத்துச் சென்றதாக மகாவம்சம் கூறும் தகவலைச் சின்னமனூர்ச் செப்பேடுகள் உறுதிப்படுத்துகின்றன. இவன் ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்று அங்குள்ள புத்த விகாரங்களிலிருந்த பொன் படிமங்களையும், பிற பொருள்களையும் சூறையாடினான்.

    சீமாறன் சீவல்லபன் வடக்குப் பகுதியில் இடைவிடாது போர் புரிந்து கொண்டிருந்ததால், அச்சூழ்நிலையைப் பயன்படுத்திப் பாண்டிய அரியணையைக் கைப்பற்றுவதற்காக மாயப்பாண்டியன் என்பவன் இலங்கை வேந்தன் இரண்டாம் சேனனை அணுகி மதுரை மீது படையெடுக்குமாறு தூண்டினான். இப்போரில் சீமாறன் சீவல்லபன் மதுரையிலிருந்து விரட்டியடிக்கப்பட்டான்.

    மூன்றாம் இராசசிம்மன் இலங்கைவேந்தன் ஐந்தாம் காசிபன் என்பவனின் உதவியைப் பெற்றுச் சோழருடன் போர் புரிந்தான். இப்போரில் சோழர் வெற்றி பெற்றனர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:30:26(இந்திய நேரம்)