தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- சமயக் கொள்கை

  • 4.4 சமயக் கொள்கை

    முற்காலப் பாண்டியர்கள் சைவ சமயத்தைத் தழுவியவர்களாக இருந்தனர். மாறவர்மன் அரிகேசரி முதலில் சமண சமயத்தைத் தழுவியிருந்தான். இவனது மனைவி மங்கையர்க்கரசியார் சிறந்த சிவபக்தர். தமது கணவனின் சமண சமயப்பற்றுக் கண்டு பெரிதும் வருந்தினார். அக்காலத்தில் திருஞானசம்பந்தர் சைவ மதத்தைப் போற்றிப் பரப்பிவந்தார். இவரை மதுரைக்கு வருமாறு செய்து தம் கணவனை மதம் மாற்றம் செய்ய வேண்டும் என்று அவரிடம் மங்கையர்க்கரசியார் கேட்டுக் கொண்டதால் அவரும் அரிகேசரியைச் சைவ சமயத்திற்கு மாற்றினார். அதன் பின்பு மாறவர்மன் அரிகேசரி சைவ சமய அறப்பணிகள் செய்தான். இரணிய கர்ப்பதானமும், துலாபாரதானமும் பலப்பல செய்து பெருமையுற்றான். சமணத் துறவிகள் துன்புறுத்தப்பட்டனர். இவனது காலத்தில் சுமார் 8000 சமணர்கள் மதுரையில் கழுவேற்றப்பட்டனர்.

    முற்காலப் பாண்டியருள் சற்று மாறுபட்டுக் காணப்பட்டவன் நெடுஞ்சடையன் பராந்தகன் ஆவான். எவ்வாறு எனில் பெரும்பாலான முற்காலப் பாண்டியர்கள் சைவ சமயத்தைத் தழுவினர். ஆனால் இம்மன்னனோ வைணவ நெறியைப் பின்பற்றினான். இவனது காலத்தில் பாண்டிய நாட்டில் திருவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வைணவ சமய ஆழ்வாருள் ஒருவராகிய பெரியாழ்வார் வாழ்ந்து வந்தார். இவருடைய செல்வாக்கால் இம்மன்னன் வைணவ சமயத்திற்கு மாறியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. இவன் திருமாலுக்கு என்று கோயில் ஒன்றினை எழுப்பினான். மதுரைக்குக் கிழக்கே ஆனைமலையில் விஷ்ணுவுக்குக் கோயில் அமைத்தான். மேலும் வைணவ ஆலயங்களுக்கு நன்கொடைகள் வழங்கினான். இம்மன்னன் வைணவனாக இருந்தபோதிலும் சைவ சமயத்தைச் சார்ந்தவர்களைத் துன்புறுத்தவில்லை.

    முதலாம் வரகுண பாண்டியன் சிவநெறியைக் கடைப்பிடித்து வந்தவன் ஆவான். இவனது சிவபக்தியின் மாட்சியைக் கண்ட பட்டினத்தடிகளும், நம்பியாண்டார் நம்பியும் புகழ்ந்து கூறியுள்ளனர். மாணிக்கவாசகப் பெருமான் புகழ்ந்து பாடும் பெருமையினையும் முதலாம் வரகுண பாண்டியன் பெற்றிருந்தான். இவன் அறப்பணிகள் நிறையச் செய்தான்.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:30:29(இந்திய நேரம்)