Primary tabs
-
4.5 வேள்விக்குடிச் செப்பேடு
நெடுஞ்சடையன் பராந்தகன் என்னும் முற்காலப் பாண்டிய மன்னன், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வேள்விக்குடிச் செப்பேட்டினைத் தான் ஆட்சிக்கு வந்த மூன்றாவது ஆண்டில் வெளியிட்டான். கொற்கைக்கிழான் நற்கொற்றன் என்பவருக்குச் சங்க காலத்து முதுகுடுமிப் பெருவழுதி, வேள்விக்குடிக் கிராமத்தை இறையிலியாக வழங்கினான். பிற்காலத்தில் களப்பிரர் ஆட்சியின்போது அவர்கள் வேள்விக்குடிக் கிராமத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். இதனைக் கேள்வியுற்ற நெடுஞ்சடையன் பராந்தகன், கொற்கைக்கிழான் வழிவந்த நரசிங்கன் என்பவனுக்கு மீண்டும் வேள்விக்குடிக் கிராமத்தை வழங்குவதற்காக வெளியிட்ட செப்பேடே வேள்விக்குடிச் செப்பேடு ஆகும். இச்செப்பேட்டில் பாண்டியர்களின் வரலாற்று உண்மைகளைக் காண முடிகிறது.
நெடுஞ்சடையன் பராந்தகன் தான் கேட்டு அறிந்தவற்றை அச்செப்பேட்டினில் பதித்துள்ளான். பாண்டியன் கடுங்கோன் களப்பிரருடன் போர் செய்து அவர்களைப் பாண்டிய நாட்டிலிருந்து துரத்திவிட்டுத் தனது ஆட்சியை நிறுவினான். இச்செய்தியானது வேள்விக்குடிச் செப்பேட்டில் காணப்படுகின்றது.
செழியன் சேந்தன் பல சிறப்புப் பெயர்களால் புகழப்பட்டது இச்செப்பேட்டில் காணப்படுகின்றது.
கோச்சடையன் ரணதீரன் கொண்ட வெற்றிகளையும் வேள்விக்குடிச் செப்பேடு உணர்த்துகின்றது.