Primary tabs
இலக்கியம், இலக்கணம், நிகண்டு, இலக்கண உரை என அனைத்து நூல்களும் நூற்பாக்களால் எழுதப்பட்ட மரபு தமிழ் மரபு ஆகும். எப்படிச் செய்யுள் எழுத வேண்டும் என்று அறிவுறுத்தும் பணியைப் பொதுவாக இலக்கண நூல்கள் செய்தன.
கல்லாடர் இயற்றிய நூல் கல்லாடம் ஆகும். இது நூறு பாடல்களைக் கொண்டது. காதலனும் காதலியும் ஊரார் அறியாதபடி கலந்து பழகும் களவு வாழ்வு, திருமணம் முடித்து வாழும் கற்பு வாழ்வு ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய அகப்பொருள் பற்றிய நூல் திருக்கோவை. அந்நூலின் செய்யுள்களைத் தழுவிக் கல்லாட நூல் அமைந்துள்ளது. திருக்கோவையில், ‘குற்றம் கூறிய புலவர்களைக் கண்டிப்பதற்காகக் கல்லாடம் பாடினார் என்பர்.
சிவனை வழிபடும் நெறிகள் பற்றிக் கல்லாட நூல் கூறுகிறது. எனவே இது ஒரு சைவ இலக்கியம்.
கல்லாடம் கற்றவனொடு சொல்லாடாதே !
கல்லாடம் கற்றவனொடு மல்லாடாதேஎன்ற மொழிகள், ‘கல்லாடம் சிறந்த நூல்' என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.
அவிநயனார் என்பவர் செய்த இலக்கண நூல் அவிநயம் ஆகும். இது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. எழுத்து, சொல், பொருள், யாப்பு, பாட்டியல் ஆகிய பொருள்களைச் சொல்லும் நூல். இந்த இலக்கணநூல் கிடைக்கவில்லை.
பாட்டியல் என்பது இலக்கணநூல். அதன் முதல் பகுதி, ஒரு நூலின் முதல் சீர் எப்படி அமைய வேண்டும் என்று கூறுகிறது. அப்படிக் கூறும் போது நூலின் தலைவனுடைய சாதி, நட்சத்திரம் முதலியவற்றைக் கொண்டு முதல் சீர் அதற்கு ஏற்றாற் போன்று பொருந்தி வரவேண்டும் என்று விளக்குகிறது. நான்கு வருண வேறுபாடுகளுக்கு ஏற்றபடி பாட்டின் எண்ணிக்கையும் அமைய வேண்டும். உயர்ந்த சாதித் தலைவனாக இருந்தால் செய்யுள்களின் எண்ணிக்கையும் மிகுதியாக இருக்க வேண்டும். சாதி தாழ்வானதாக இருந்தால் செய்யுள்களும் குறைவாக இருக்க வேண்டும் என்றும் இந்த இலக்கணநூல் கூறுவது விந்தையாக இருக்கிறது என்று மு.வ. கூறுவார்.
தொடர்நிலைச் செய்யுளின் இலக்கணம் கூறுவது பாட்டியல் ஆகும். எந்த நெறிகளின் படி பிரபந்த இலக்கியம் செய்யப்பட வேண்டும் என்று வழிகாட்ட வந்ததே பாட்டியல் இலக்கணம் ஆகும்.
தமிழில் பாட்டியல் நூல்கள் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றின. தோன்றியதன் காரணம் யாது? தொல்காப்பியர் காலத்திலும், சங்க காலத்திலும் தமிழ் நூல்களின் வகைகள் பெருகவில்லை. பதிற்றுப்பத்து ஒரு தனித்த இலக்கிய அமைப்பு உடையது. ஏனையவை யாவும் தனித்த இலக்கிய அமைப்பைப் பெறவில்லை. தொகை நூல்களாகவே உள்ளன. பின்னர்த் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சில எண்ணால் அமைப்புப் பெற்றனவே அல்லாது பிறவகை அமைப்பு அவற்றில் இல்லை. காப்பியங்கள் தனித்த பொருள் தொடர்நிலைச் செய்யுளால் கதையைக் கூறும் முறையில் அமைந்தன. அவற்றின் பின்னர் வந்த நாயன்மார் பதிகங்களும், ஆழ்வார் பாசுரங்களும் புதுப்புது இலக்கிய அமைப்புகளுக்கு வழி செய்தன. அந்தாதி, மடல், அங்கமாலை, எழுகூற்றிருக்கை, இரட்டைமணிமாலை, உலா, மும்மணிக்கோவை முதலிய புது அமைப்புகள் அவற்றில் இடம்பெற்றன. கோவை ஒன்றும் முன்பே இருந்தது. இந்த நிலையில், இவற்றுக்கு எல்லாம் இலக்கணம் வரையறுக்க வேண்டிய நிலை பின் வந்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டது. இவ்வாறு இவை அனைத்தையும் தழுவி இவற்றுக்குச் செய்யப்பட்ட இலக்கண வகையே, பாட்டியல் எனப்படுகிறது.
பாட்டுடைத் தலைவன் ஒருவனைச் சார்ந்து தொடர்ந்த பாடல்களாக நூல் செய்வதற்குப் பாட்டியல் இலக்கணம் கூறுகிறது. மங்கலம், பொருத்தம் என்ற சோதிடக் கருத்துகள் இந்த இலக்கணத்தோடு தொடர்புடையன.
அகப்பொருள் பற்றிய இலக்கணநூல் இறையனார் களவியல் ஆகும். இறையனார் களவியல் நூற்பாவால் ஆனது. யாப்பருங்கலம் என்ற நூலுக்கு விளக்க நூலாகக் காரிகை என்ற நூல் எழுந்தது போலவே, இறையனார் களவியல் என்ற நூலுக்கு ஒரு விளக்க நூல் 14ஆம் நூற்றாண்டில் எழுந்திருப்பது இந்த நூலுக்கு உரிய சிறப்பு ஆகும். அந்த நூலின் பெயர் களவியல் காரிகை ஆகும். இறையனார் களவியலுக்குச் சிறந்த உரை உண்டு. இறையனார் களவியல் நூல் 60 சூத்திரங்களைக் கொண்டது.
பன்னிரு படலம்
‘அளவால் பெயர் பெற்றது பன்னிருபடலம்' என்று இறையனார் களவியல் கூறும். இந்த நூல் இன்று கிடைக்கவில்லை. புறப்பொருள் பற்றிப் பேசும் இலக்கண நூல் ஆகும். பண்டைத் தமிழரது போரிடும் முறைகளைக் கூறுவது புறப்பொருள் ஆகும்.
தமிழ்நெறி விளக்கம் என்பதும் அகப்பொருளை விளக்கும் இலக்கண நூல் ஆகும். இது உ.வே.சாமிநாத அய்யரால் 1937இல் அச்சிடப்பட்டது. இந்நூல் முற்றுப்பெறாத நூல் ஆகும். இந்த நூலுக்கு முன்னர் இருந்த இறையனார் களவியல் நூல் 60 சூத்திரம் உடையதாக இருந்தது. ஆனால் தமிழ்நெறி விளக்கமோ அதைச் சுருக்கி 25 சூத்திரங்கள் ஆகக் கூறுகிறது. ஆசிரியப்பாவில் இந்த நூல் உள்ளது. வெண்பா முதலான பிற பா ஒன்றும் பயன்படுத்தப்படவில்லை. ‘முற்றுப் பெறாத பொருளியல்' என்ற இந்த நூல், ‘களவு, கற்பு' எனும் இரு பகுதிகளைக் கொண்டது. இந்த நூலின் காலம் தெரியவில்லை. இறையனார் களவியல் உரை, யாப்பருங்கல விருத்தி உரை, சிலப்பதிகார அரும்பத உரை, தொல்காப்பிய இளம்பூரணர் உரை, களவியல் காரிகை உரை ஆகிய நூல்களில் இந்த நூலின் பாடல்கள் மேற்கோள்களாக எடுத்தாளப்பட்டுள்ளன.