Primary tabs
3.5 இடைச்சொல்லும் உரிச்சொல்லும்
பெயரும் வினையும் தமக்கு உரிய பொருளை உணர்த்தித் தனித்து இயங்கும் ஆற்றல் வாய்ந்தவை. இடைச்சொல்லுக்கும், உரிச்சொல்லுக்கும் தனித்தனிப் பொருள் உண்டு. ஆனால் அவை பெயரையும் வினையையும் சார்ந்தே தம் பொருளை உணர்த்துகின்றன. இடைச் சொற்கள் பெயரையும் வினையையும் சார்ந்து வந்து அவற்றின் பொருளைப் பலவாறு வேறுபடுத்துகின்றன. உரிச்சொற்கள் பெயருக்கும் வினைக்கும் முன்னால் வந்து அவற்றின் பொருளைச் சிறப்பிக்கும் அடைகளாக (attributes) விளங்குகின்றன. எனவே இவ்விரு வகைச் சொற்களும் தொல்காப்பியர் காலத் தமிழ்ச் சொல்பாகுபாட்டில் இன்றியமையாத இடம் பெறுகின்றன.
இடைச்சொற்கள், பெயரையும் வினையையும் சார்ந்து வழங்கும் இயல்பை உடையன : தாமாகத் தனித்து வழங்கும் இயல்பை உடையன அல்ல என்கிறார் தொல்காப்பியர்.
இடை எனப்படுவ
பெயரொடும் வினையொடும்
நடைபெற்று இயலும் : தமக்கு இயல்பு இலவே
(தொல்.சொல். 251)
புணர்ச்சியில் நிலைமொழி வருமொழிகளுக்கு இடையே வரும் சாரியைகள், பாலுணர்த்தும் உருபுகள், வினைச்சொற்களில் காலம் காட்டும் உருபுகள், வேற்றுமை உருபுகள், அசைநிலைச் சொற்கள், இசை நிறைக்க வருபவை, உவம உருபுகள் முதலியனவும் ஏ, ஓ, உம், மன், கொல், என, என்று, மற்று என்பன போலத் தத்தமக்குச் சில பொருள்களை உடையவையும் ஆகியன இடைச்சொற்கள் ஆகும்.
3.5.3 இடைச்சொல் - வேற்றுமைச் சொல்
இடைச்சொற்கள் தாம் சார்ந்து வரும் பெயர், வினைகளின் பொருளை வேறுபடுத்தும் ஆற்றல் வாய்ந்தவையாக உள்ளன. வேற்றுமை உருபுகள் பெயர்ச் சொற்களின் இறுதியில் வந்து, அச்சொற்களின் பொருளை வேறுபடுத்துவதையும் கால இடைநிலைகள் வினைச்சொற்களி்ன் நடுவே நின்று அச்சொற்களின் காலப் பொருளை வேறுபடுத்திக் காட்டுவதையும் முன்னர்ப் பார்த்தோம். சாரியைகள் மற்றும் ஏ, ஓ, உம் முதலான இடைச்சொற்கள் எவ்வாறு பெயர், வினைகளின் பொருளை வேறுபடுத்துகின்றன என்பது பற்றிச் சிறிது காண்போம்.
- சாரியைகள்
- ஏ, ஓ, உம் போன்ற இடைச்சொற்கள்
புணர்ச்சியில் பெயரும் வினையும் நிலைமொழி, வருமொழிகளாய்ப் புணரும்போது, அவற்றின் இடையே அதாவது நிலைமொழியின் இறுதியில் வருவன சாரியைகள் எனப்படும். இன், வற்று, அத்து, அம், ஒன், ஆன், அக்கு, இக்கு, அன் முதலியனவற்றைச் சாரியைகள் என்கிறார் தொல்காப்பியர்.
சாரியைகள் பொருள் வேறுபாட்டிற்குக் காரணமாய் வருவதை ஒரு சான்று கொண்டு காண்போம்.
குளம் + மீன் > குளம் + அத்து + மீன் > குளத்து மீன்
இங்கு ‘அத்து’ என்னும் சாரியை ஏழாம் வேற்றுமைக்குரிய இடப்பொருளில் வருகிறது. (குளத்தில் உள்ள மீன்)
இவை பெயர், வினைச் சொற்களி்ன் பின்னால் வந்து பிரிநிலை, வினா, எச்சம் போன்ற பல பொருள்களை உணர்த்துவதைக் காணலாம்.
(எ.டு)
சாத்தனே வந்தான்
சாத்தனோ வந்தான்
சாத்தனும் வந்தான்‘சாத்தனே வந்தான்’ என்பதில் ஏகார இடைச்சொல் சாத்தன் மட்டுமே வந்தான் என்று பலரினின்று அவனைப் பிரித்துக் காட்டியதால் பிரிநிலை ஆயிற்று ‘சாத்தனோ வந்தான்’ என்பதில் ஓகார இடைச்சொல் வினாப் பொருளில் வந்தது. ‘சாத்தனும் வந்தான்’ என்பதில் உம் இடைச்சொல், கொற்றனும் வந்தான் என்ற எச்சப் பொருளைத் தந்து நிற்கிறது. இவ்வாறு இடைச்சொற்கள் தாம் சார்ந்து வரும் பெயர் வினைகளின் பொருளைப் பலவாறு வேறுபடுத்துகின்ற காரணத்தால், தொல்காப்பியர் அவற்றை,
இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச் சொல்லே(தொல்.சொல். 455)
என்று குறிப்பிடுகிறார்.
உரிச்சொல் இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருள்களுக்கு உரியதாய் வரும். பெயரையும் வினையையும் சார்ந்து வரும். ஒரு சொல் ஒரு பொருளுக்கே உரியதாய் வருவதும் உண்டு ; ஒரு சொல் பல பொருளுக்கு உரியதாய் வருவதும் உண்டு. பல சொல் ஒரு பொருளுக்கு உரியதாய் வருவதும் உண்டு. இதுவே தொல்காப்பியர் உரிச்சொல்லுக்குக் கூறும் இலக்கணம்.
உரிச்சொற்கள் முழுச்சொற்களாக உள்ளன. அவற்றிற்குத் தனிப் பொருள் உண்டு. ஆனால் அப்பொருளில் தனித்து வழங்கும் இயல்பு உடையன அல்ல. பெயரையும், வினையையும் சார்ந்து அவற்றிற்கு முன்னால் வரும்போதே தம் பொருள் உணர்த்துகின்றன. ஒரு சான்று காண்போம். மல்லல் என்பது ஓர் உரிச்சொல். இதற்கு வளம் என்று பொருள். இதனை,
மல்லல் வளனே(தொல்.சொல். 305)
என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். மல்லல் என்னும் சொல் பொருளுடையதாயினும் தனித்து வழங்காது. மல்லல் மூதூர் என்ற தொடரில் மூதூர் என்ற பெயர்ச் சொல்லைச் சார்ந்து வழங்கும்போது தன் பொருளை உணர்த்துகிறது.
தொல்காப்பியர் சொல்லதிகாரத்தில் உரியியலில் 120 உரிச்சொற்களைக் குறிப்பிடுகிறார். அவற்றிற்கு உரிய பொருளை வழக்கில் பயிலும் சொற்களைக் கொண்டு உணர்த்துகிறார். இவை வினையடைகளாகவும், பெயரடைகளாகவுமே தொல்காப்பியரால் கூறப்பட்டுள்ளன என்று கமீல் சுவலபெல் என்னும் திராவிட மொழியியல் அறிஞர் கூறுகிறார். தொல்காப்பியர் உரிச்சொற்களின் பொருண்மை நிலையை மூன்று வகையாகப் பிரித்து விளக்குகிறார்.
1. ஒரு சொல்லுக்கு ஒரு பொருள்
மழ- இளமை;வாள்- ஒளி ;யாணர்- புது வருவாய்.(எ.டு)மழ களிறு(இளமையான களிறு)வாள் முகம்(ஒளி பொருந்திய முகம்)யாணர் ஊர்(புது வருவாயினை உடைய ஊர்)
மழ, வாள், யாணர் ஆகிய மூன்று சொற்களும் பெயர்ச்சொற்களுக்கு முன் வந்து அச்சொற்களைச் சிறப்பிக்கும் அடைகளாக நின்றமையின் பெயரடைகள் ஆயின.
2. ஒரு சொல்லுக்குப் பல பொருள்
கடி என்ற ஓர் உரிச்சொல் கூர்மை, காப்பு, புதுமை, விரைவு முதலான பல பொருள்களைத் தரும்.
(எ.டு)எம் அம்பு கடிவிடுதும்(எம் அம்பினை விரைவாக விடுவோம்)கடி நுனைப் பகழி(கூர்மையான நுனியை உடைய அம்பு)இங்கே கடி என்ற உரிச்சொல் முதல் எடுத்துக்காட்டில் வினையடையாகவும், பின்னர்ப் பெயரடையாகவும் வந்தது காணலாம்.
3. பலசொல்லுக்கு ஒரு பொருள்
உறு, தவ, நனி என்ற மூன்று உரிச்சொற்களும் மிகுதி என்ற ஒரு பொருளில் வரும்.
(எ.டு)உறு புகழ்(மிக்க புகழ்)- பெயரடைதவச் சிறிது(மிகவும் சிறிது)- வினையடைநனி வருந்தினை(மிகவும் வருந்தினை)- வினையடை