Primary tabs
-
3.6 தொகுப்புரை
தொல்காப்பியர் தம் காலத்தில் வழங்கிய சொற்களை வகைப்படுத்தித் திறம்பட நன்கு ஆராய்ந்து விளக்கிக் காட்டியுள்ளார். இக்கால மொழிநூலாரின் உருபனியல் பற்றிய சிந்தனை மிகப் பழங்காலத்தில் தொல்காப்பியர்க்கு இருந்துள்ளது. அவர் பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் தமிழ்மொழியின் அடிப்படைச் சொற்களாகக் கூறுகிறார். அவற்றைச் சார்ந்து வழங்கும் இயல்புடையனவாக இடைச்சொல்லையும் உரிச்சொல்லையும் குறிப்பிடுகிறார். பெயர்ச் சொற்களைத் திணை அடிப்படையில் பாகுபாடு செய்கிறார். அவர்காலத்தில் வழங்கிய மூவிடப் பெயர்கள், சுட்டுப் பெயர்கள், வினாப் பெயர்கள், எண்ணுப் பெயர்கள் ஆகியவற்றை விரிவாக விளக்கிக் காட்டுகிறார். இவற்றை மொழிநூலார் பதிலிடு பெயர்கள் என்று குறிப்பிடுகின்றனர். பெயர்ச்சொல் ஏற்கும் வேற்றுமை உருபுகளையும் அவற்றின் பொருள்களையும் வரையறுத்துக் கூறுகிறார். வினைச்சொல்லைத் தெரிநிலை, குறிப்பு என இருவகைப்படுத்தி விளக்கிக் காட்டுகிறார். அவரது காலத்தில் திணை அடிப்படையில் வழங்கிய பல்வகை வினைமுற்றுகளையும் எச்சங்களையும் விரிவாக விளக்கி்க் கூறுகிறார். இடைச்சொற்கள் பெயரையும் வினையையும் சார்ந்து அவற்றின் பொருளை வேறுபடுத்தும் இயல்பினை விவரிக்கிறார். உரிச்சொற்களின் பொருண்மை நிலையினை விளக்கிக் காட்டுகிறார். இவை தொல்காப்பியர் காலத் தமிழில் பெயரடைகளாகவும் வினையடைகளாகவும் வழங்கியுள்ளன . இவற்றையெல்லாம் இப்பாடத்தின் வழி அறிந்து கொள்ள முடிந்தது.
7.உண்டு, உண்ண, உண்ட, கொடுத்த, கற்று, பார்த்த, தின்று, கற்ற, பார்த்து, சிவந்த - இவற்றில் உள்ள வினையெச்சங்களையும் பெயரெச்சங்களையும் தனித்தனியே எடுத்து எழுதுக.