Primary tabs
4.1 நாட்டுப்புறவியலும் பிற துறைகளும்
நாட்டுப்புறவியல் என்பது சமூக அறிவியல் சார்ந்த ஆய்வுத் துறையாகும். இத்துறை ஆய்வு இன்று பல்துறை இணைப்பு ஆய்வாக (Interdisciplinary Study) விளங்குகிறது. ஒரு நாட்டு மக்களின் நாகரிகத்தை, பண்பாட்டை, பழக்க வழக்கங்களை, வரலாற்றை, நாட்டு நடப்பை ‘உள்ளது உள்ளபடி’ என்ற முறையில் ஆராய்வதுதான் நாட்டுப்புறவியல். இத்துறை மொழியியல், சமூகவியல், மானுடவியல், உளவியல், வரலாற்றியல் போன்ற பிற துறைகளின் கூறுகளையும் தன்னுள் கொண்டுள்ளது. சில நடைமுறைக் காரணங்களுக்காக ஒவ்வொரு துறைக்குமான எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன என்றாலும், அறிவார்ந்த தளத்தில் ஆய்வு என்று வருகின்ற போது இந்த எல்லைகள் வலுவிழந்து போகின்றன. அறிவியல் சார்ந்த எந்த ஒரு துறையையும் ஒரு தனித்த கோட்பாட்டை மட்டுமே கொண்டு முழுமையாக விளக்கிட முடியாது. ஒவ்வொரு துறையும் பிற துறையிடமிருந்து சில கருத்துகளைப் பெற்றே தீர வேண்டும். அதனால் தான் நாட்டுப்புறவியல் துறையும் பிற துறைகளின் வாயிலாக வளர்ந்துள்ளது. அதே வேளையில் பிற துறைகளுக்குப் பல புதிய பார்வைகளையும் தந்திருக்கின்றது.
நாட்டுப்புறவியலைப் பிற துறைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பதால் பல புதிய பார்வைகள், உண்மைகள் அல்லது சிந்தனைகள் தோன்றுகின்றன. அதன் மூலம் பல புதிய வாய்பாட்டு உருவாக்கத்திற்கும், பின்பு புதிய கோட்பாட்டு உருவாக்கத்திற்கும் தொடர்ந்து இட்டுச் செல்லுகிறது. அவ்வாறு ஆராயும் போது வாய்பாடுகள் மாறலாம், கோட்பாட்டுப் பார்வைகளும் மாறுவதற்கு இடம் உண்டு.