தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாட்டுப்புறவியலும் சமூகவியலும்

  • 4.4 நாட்டுப்புறவியலும் சமூகவியலும்

    சமூகத்தைப் பற்றிய அறிவியல் சமூகவியல் எனப்படும். இதன் முக்கியக் குறிக்கோள் தனி மனிதனையும் மனித சமுதாயத்தையும் ஆராய்வதுதான். நம்பிக்கைகளும் வழக்காறுகளும் நடைமுறைகளும் சமூக நிறுவனங்களும் இதனால் ஆராயப்படுகின்றன. சமூக நிறுவனங்கள் சமயம், அரசியல், பொருளாதாரம், குடும்பம் இவற்றுடன் நெருங்கிய தொடர்புடையன. இவற்றின் இயக்கத்தையும் இயக்காற்றலையும் ஆராய்வதே சமூகவியலின் தலையாய பணியாகும்.

    நாட்டுப்புறவியலின் சில கூறுகளும் சமூகவியல் அடிப்படையில் காணப்படுகின்றன. நாட்டுப்புறவியலாளரும், சமூகவியலாளரும் சமூக அமைப்பினைப் பற்றி ஆராய்கின்றனர். பழமொழிகளும் கதைகளும் சாதி அடிப்படையில் அமைந்த சமூக உறவை விளக்குகின்றன. சிக்கலான மனப்பான்மையைக் (complex attitude) குறித்து ஆராய, நாட்டுப்புற இலக்கியங்கள் உதவுகின்றன. சமூகத்தில் காணப்படும் பெரும் பாரம்பரிய மரபு (Great tradition) சிறு பாரம்பரிய மரபு (Little tradition) இவற்றிற்கு இடையே உள்ள சிக்கலான உறவை நாட்டுப்புறவியல் விரிவாக விளக்கிக் காட்டுகிறது.

    நாட்டுப்புற மக்களிடையே காணப்படும் பாடல்கள், கதைகள், பழமொழிகள், விடுகதைகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் முதலியவற்றைக் கொண்டு நாட்டுப்புறவியல் மக்களது வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. இனி இதில் எந்த விதத்தில் சமூகம் பற்றிய கருத்துகள் அமைந்துள்ளன என்று பார்க்கலாம்.

    சமூக வாழ்க்கையைப் பற்றி முழுமையாக அறியக் குடும்பம், வழக்கம், ஒழுக்கம், மதம் போன்றவற்றை ஆராய்தல் அவசியம். சமூகவியலாளர் இதனைச் சமூகத்தின் நிறுவன அமைப்பு என்பர். இவற்றை நாட்டுப்புறவியலில் காணமுடியும்.

    குடும்பம் சமூகத்தின் மூலக்கூறு. குடும்ப அமைப்புகளைக் கொண்டு கூட்டுக் குடும்பம், தனிக் குடும்பம் என இருவகைப் படுத்தலாம். தாலாட்டுப் பாடல்கள் மூலம் குடும்ப உறவு முறைகளையும், சடங்குகளையும் அறிந்து கொள்ளலாம்.

    இன்றைய சமுதாயத்தில் கூட்டுக் குடும்ப அமைப்பு மறைந்து தனிக் குடும்ப அமைப்பை நோக்கிச் செல்வதை நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிகிறோம். அதே போன்று பலதார மணம் அருகி ஒருதார மணத்தை நோக்கிச் செல்லும் பண்பையும் பார்க்கிறோம்.

    வாழ்வு தொடர்பான பழக்க வழக்கங்கள், சடங்குகள், சாவு தொடர்பான பழக்க வழக்கங்கள், சடங்குகள் போன்றவற்றையும் காணலாம்.

    சான்று :

    1. சாதிப் பிரச்சனை

    முத்துப் பட்டன் கதைப் பாடல், சின்னத் தம்பி போன்ற கதைப் பாடல்கள் மூலம் சாதிப் பிரச்சனைகளைத் தெள்ளத் தெளிவாக அறிய முடிகிறது.

    2. சொத்துரிமை

    பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாத நிலையைக் காட்டும் கதைதான் நல்லதங்காள். ஒப்பாரிப் பாடல்களின் வாயிலாகக் கணவனை இழந்த பெண்ணின் ஆதரவு அற்ற நிலை பற்றி அறிய முடியும்.

    3. வீர வழிபாடு

    கதைப் பாடலின் தலைவர்களான காத்தவராயன், மதுரை வீரன் போன்றோரைத் தெய்வமாக வழிபடுதல் என்பது அத்தலைவர்களின் வீரத்தைப் போற்றும் மரபாகும். இந்த மரபினைச் சங்க காலத்தின் நடுகல் வழிபாட்டோடு தொடர்புபடுத்திப் பார்க்கலாம்.

     

    தன்மதிப்பீடு : வினாக்கள் - I
    1)
    நாட்டுப்புறவியல் துறையைப் பிற துறைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான காரணத்தைஆராய்க.
    2)
    நாட்டுப்புறவியலில் மொழியியல் பெறும் இடம் யாது?
    3)
    ஃபிராய்டின் உளப்பகுப்பாய்வின் போக்கும் அது நாட்டுப்புறவியலில் இடம்பெறும் தன்மையையும் விளக்குக.
    4)
    நாட்டுப்புறவியல் சமூகவியல் துறைக்குப் பயன்படும் விதத்தை எழுதுக.
    5)
    நாட்டுப்புறவியலில் சமூகவியல் கூறுகள் இடம்பெறும் பாங்கினை விளக்குக.
புதுப்பிக்கபட்ட நாள் : 06-10-2017 16:46:35(இந்திய நேரம்)