Primary tabs
4.7 நாட்டுப்புறவியலும் வரலாறும் (Folklore and History)
வரலாறு என்பது ஒரு நாட்டின் அல்லது சமூகத்தின் கடந்த கால நிகழ்வைப் பற்றிக் கூறுவது ஆகும். வரலாற்றிற்குக் கல்வெட்டுக்களும், செப்புப் பட்டயங்களும், எழுத்திலக்கியமும் சான்றாகத் திகழ்வதைப் போல, நாட்டுப்புற இலக்கியங்களும் சான்றாகத் திகழ்கின்றன. இந்திய நாட்டுத் தொல் வரலாற்றை அறிய 1) மரபு, 2) தொல்பொருள் ஆய்வு, 3) ஒப்பு இலக்கியம் முதலியவற்றையும் பயன்படுத்துகின்றனர்.
மனிதனுடைய கடந்த காலத்தைப் பற்றிய நிகழ்ச்சிகளைக் கூறுவதால், நாட்டுப்புறவியலையும் வரலாற்று அறிவியல் (Historical Science) என்று கூறுவர்.
வரலாறும் நாட்டுப்புறவியலும் மக்களுடைய எழுதப்படாத மரபுகளைப் பற்றி ஆராய்கின்றன.
வரலாற்றுப் பேரறிஞரும் நாட்டுப்புறவியல் பேரறிஞரும் பண்பாட்டு வரலாற்று மீட்டுருவாக்கத்தில் (Reconstruction of cultural history) ஆர்வம் உடையவர்கள்.
மரபு என்பது நாட்டுப்புறவியலுக்கும் வரலாற்றிற்கும் பொதுவானதாகும். வாய்மொழி மரபு நாட்டுப்புறவியலின் உயிர்நாடியாகும்.
சான்று :
நாட்டுப்புற இலக்கியத்தின் மூலம் ஒரு நாட்டின் வரலாற்றையும் அரசியல், சமூக வரலாற்றையும் அறிந்து கொள்ளலாம். கதைப் பாடல்களில் வரலாற்றுக் கதைப்பாடல்கள் (Historical Ballads) வரலாற்றை அறியப் பெருந்துணையாக உள்ளன.
இராமப்பய்யன் கதைப் பாடல் (கி.பி.1623 - 59) சடைக்கத் தேவனுக்கும் திருமலை நாயக்கரின் தளபதி இராமப்பய்யனுக்கும் நடந்த போரை விவரிக்கின்றது.
கட்டபொம்மன் கதைப் பாடலில் (கி.பி.1761 - 1799) ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த முதல் வீரன். பாஞ்சாலங்குறிச்சிக்கும் எட்டயபுரத்துக்கும் ஏற்பட்ட பகைமை, ஆங்கிலேயருக்கும் கட்டபொம்மனுக்கும் ஏற்பட்ட மோதல், வெள்ளையம்மாளின் வீரம் அனைத்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தின், சமுதாய வரலாற்றை அறியலாம்.
நாட்டுப்புறவியல் துறையை மேற்கூறப்பட்ட துறைகளோடு மட்டுமல்லாது, புதியதாகத் தோன்றி வளர்ந்து வரும் மற்ற துறைகளோடும் ஒப்பிட்டு ஆராய்வதற்கும் இடம் உண்டு. அத்தகு ஆய்வுகளை, கண்டிப்பாக இனி வரும் ஆய்வாளர்கள் மேற்கொள்வார்கள்.