Primary tabs
-
4.2 நாட்டுப்புறவியலும் மொழியியலும்
நாட்டுப்புற வழக்காறுகள் அடிப்படையில் மொழி நிகழ்வுகளே. நாட்டுப்புறக் கோட்பாடுகள் உருவானதில் மொழியியலின் பங்கு குறிப்பிடத்தக்கது. எனவே மொழியியல் கருத்தாக்கங்கள் (theories) நாட்டுப்புறவியலுக்கு இன்றியமையாதவை. மனிதனின் பிறப்போடு பிறப்பாய் வாழ்வோடு வாழ்வாய்ப் பின்னிப் பிணைந்து நிற்பது மொழி. நமது கருத்தைப் பிறருக்கு அறிவிக்கும் கருவியாக இருப்பது மொழி. மனித வாழ்விலும் நாகரிகத்திலும் மொழியின் பங்கு மிகச் சிறப்பானதாகும். அம்மொழியைப் பற்றிய ஆய்வை மொழியியல் (Linguistics) என்கிறோம். ஒரு மொழியின் இயல்பை உள்ளவாறு ஆராய்ந்து கூறுவது விளக்க மொழியியல் (Descriptive Linguistics). பல்வேறு காலங்களில் அமைந்த மாற்றத்தை ஆராய்வது வரலாற்று மொழியியல் (Historic Linguistics). மொழியில் ஏற்படும் மாற்றங்களை ஒலியனியல் (Phonology) மாற்றம், உருபனியல் (Morphology) மாற்றம், சொற்றொடரமைப்பு மாற்றம் (Syntax), சொல் பொருள் (Semantics) மாற்றம் என மொழியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மொழியியல் ஆய்வு நெறிமுறை நாட்டுப்புறவியல் ஆய்வு முறைக்கு மாதிரியாக அமைந்தது. நாட்டுப்புறவியலின் தந்தை எனக் கருதப்படும் ஜேக்கப் கிரிம் (Jacob Grim) மொழி நூல் (Philology) துறையைச் சார்ந்தவர். இவர் மொழியியலில் பயன்படும் ஒப்பு ஆய்வை நாட்டுப்புற இயலுக்கும் பயன்படுத்தினார்.
ஜேக்கப் கிரிமின் ஆய்வினைப் பின்பற்றி மாக்ஸ் முல்லர் (Max Muiller) (கி.பி.1823-1900) என்னும் ஆய்வாளர் புராணங்களைப் பற்றி ஆராயலானார். இவர் வடமொழியிலும், ஒப்பாய்விலும் வல்லுநர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் பொதுவான தோற்றம் பற்றிய கோட்பாட்டினை முன்மொழிந்தார். இந்தோ- ஐரோப்பிய மொழிகளின் தோற்றம் ஒரு முந்தைய தாய்மொழி மூலத்துக்கு இட்டுச் செல்வதாக இக்கோட்பாடு அமைந்தது. இந்த ஒப்பியல் முறையைக் கொண்டு பார்க்கும் போது நாட்டார் வழக்காற்றியல் துறையிலும் ஒரே தன்மையான கூறுகள் முந்தைய மக்களிடம் இருந்து வந்திருக்க வேண்டும் என்பது தான் கருத்து.
வாய்மொழிக் கதைப் பாடல் என்பது எழுதப்படாத, ஆனால் மொழிப்பயன்பாடு மிக்கது. கதைப் பாடல் பாடுபவரது மொழித் திறனை ‘வாய்பாடு' என்பதன் மூலம் அறியலாம். அதாவது ‘வாய்பாடு' என்றால் என்ன என்பதை முந்தைய பாடப் பகுதியில் பார்த்தோம். அந்த வாய்பாட்டினைப் பயன்படுத்துவோன் யாப்பு பற்றி எதுவும் அறியாதவன். என்றாலும் அவனது பாடலில் யாப்பு அமைதி, ஓசை நயம் போன்றவை தாமாகவே அமைந்திருக்கும். அவை அப்பாடலை மனனம் செய்வதற்குப் பயன்படுகின்றன. பாடல் :
ஒருகளஞ்சு பொன் தருவோம் ஒண்ணுதலே மருத்துவமே
ரெண்டுகளஞ்சு பொன் தாறோம் நாசகியே வளர என்றாள்
மூணு களஞ்சு பொன் தாறோம் மொய் குழலே மருத்துவமே
. . . . . . . . . . . . . . . . . . . . . .. . . . .. . . . . . .
பத்துக்களஞ்சு பொன் தருவோம் பாவையரே மருத்துவமேஇப்பாடலில் மொழித் திறனைப் பார்க்க முடிகிறது.