தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 1.0-பாட முன்னுரை

  • 1.0 பாட முன்னுரை

    ‘கதை’ என்ற சொல்லுக்குச் சரிதம், வரலாறு, ஒரு செய்தியை அல்லது நிகழ்ச்சியை அல்லது கற்பனையான ஒன்றை வைத்துச் சுவையாகச் சொல்லப்படுவது என்பது பொருள். மேலும் ஒருவரின் வாழ்க்கையையும் நடத்தையையும் பற்றிக் கூறப்படும் செய்தி, நம்பமுடியாத விவரிப்பு என்றெல்லாம் அகராதிகள் பல பொருள் கூறுகின்றன. இத்தகைய தன்மைகளைக் கொண்டு பாடலிலோ உரைநடையிலோ வாய்மொழியாகக் கூறப்படும் அல்லது ஏட்டில் எழுதப்படும் இலக்கிய வடிவங்களைத் தமிழர்கள் பொதுவாகக் கதை என்ற சொல்லால் சுட்டி வந்தனர். பாடலில் அமைந்த புராண இதிகாசங்களும் கதை என்றே சுட்டப்பட்டன.

    இன்றைய நிலையில் ஆய்வு வசதிக்காகவும், படிப்பு வசதிக்காகவும் இலக்கிய வகைமைகளைப் பிரித்துள்ளனர். மேலும் பிரித்து அறிவதற்காகச் சமீபகாலங்களில் புதிய சொற்கள் உருவாக்கப்பட்டன. சில சொற்களுக்குப் பொருள் வரையறை செய்யப்பட்டது. படித்தவர்களால் எழுதப்படும் இலக்கியங்கள் ஏட்டிலக்கியங்கள் அல்லது எழுத்திலக்கியங்கள் என்று சுட்டப்பட்டன. இதற்கு மாறாக மக்களால் படைக்கப்பட்டு வாய் மொழியாகப் பரவியுள்ள இலக்கியங்கள் வாய்மொழி இலக்கியங்கள் அல்லது நாட்டுப்புற இலக்கியங்கள் என்று சுட்டப்பட்டன. இவை வாய்மொழியாகப் பரவிக் கொண்டிருப்பதால் மக்கள் வாழ்வின் கடந்த காலத்தின் பதிவாகவும், நிகழ்காலப் படப்பிடிப்பாகவும் அமைகின்றன. இத்தகைய மதிப்பு வாய்ந்த நாட்டுப்புற இலக்கியங்களுள் உரைநடையாகக் கூறப்படும் கதை வகைமை மட்டும், நாட்டுப்புறக் கதை என்று சுட்டப்படுகின்றது. பழங்கதைகள், நாடோடிக் கதைகள், கிராமியக் கதைகள், தாத்தா சொன்ன கதைகள், நாட்டார் கதைகள் என்ற சொற்களாலும் நாட்டுப்புறக் கதைகள் சுட்டப்படுகின்றன. நாட்டுப்புறக் கதைகளைக் கேட்டும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை சேகரிப்பு மற்றும் பதிப்புப் பணிகள், வகைகள், அவற்றில் நிகழ்ந்துள்ள ஆய்வுகள், அவை கூறப்படும் சூழல்கள், நோக்கங்கள் மற்றும் பயன்கள் முதலியவை. அவற்றை இப்பாடத்தில் காணலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:29:52(இந்திய நேரம்)