Primary tabs
-
1.1 நாட்டுப்புறக் கதை
நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டோ, கற்பனையாகவோ, ஒரு மக்கள் குழுவினரிடையே உருவாக்கப்படும் ஒரு கதை, பொழுதுபோக்கு, அறிவுரை கூறுதல், வழிபாட்டுச் சடங்கு போன்ற ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக, அன்றாட வாழ்க்கையில் உரைநடையாக எடுத்துரைக்கப்பட்டு, வாய்மொழியாகப் பரவி, ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களைக் கொண்டதாக வழங்கப்படுவதை நாட்டுப்புறக் கதை என்று கூறலாம்.
பொதுவாக, அனைத்துக் கதைகளும் ஒரு ஊர்ல ஒரு ராசா, ஒரு ஊர்ல ஒரு குடியானவன் இருந்தானாம் என்பது போலத் தொடங்கும். கதைகள் அனைத்தும் நீதி கூறுவதாக அமையும் என்று படித்தவர்கள் மத்தியில் ஒரு கருத்து உண்டு. அனைத்துக் கதைகளும் அவ்வாறல்ல. சில கதைகள் பொது நீதி கூறுவனவாக அமையும். பல கதைகள் அந்தந்த வட்டார மக்களின் வாழ்வியல் உண்மைகளைக் கூறுவதாக அமையும். இத்தகைய கதைகளை அந்தந்தப் பண்பாட்டுச் சூழலில் வைத்தே பொருள் காணவேண்டும். அவற்றில் பொது நீதியைக் காண முயல்வதோ பொதுமைப்படுத்த முயல்வதோ தவறாகவே முடியும்.
எடுத்துக்காட்டாக சகோதரியின் மகளை மணம் செய்து கொள்ளும் பழக்கமுள்ள சமுதாயத்தில் ஒருவன் அத்தகைய முயற்சிகளுக்காகச் செய்யும் சாகசங்கள் கதைகளில் சிறப்பித்துக் கூறப்படும். சகோதரி மகளை மணம் செய்வது பாவமானதாகக் கருதும் சமுதாயத்தைச் சேர்ந்தவர் இத்தகைய கதை நிகழ்வை நீதிக்குப் புறம்பானதாகக் கருதலாம் அல்லவா?
1.1.2 இடம் பெயர்தலும் கதைப் பரவலும்
பண்டைய நாட்களில் போர், வாணிபம், புனித யாத்திரை, சாதி-மதச் சண்டை, பஞ்சம் போன்ற காரணங்களுக்காக மக்கள் இடம் பெயர்ந்து கொண்டேயிருந்ததால் ‘கதைகளின் வாய்மொழிப் பரவல்’ மொழி கடந்தும், நாடு கடந்தும் நிகழ்ந்தது. அச்சு, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட மக்கள் தொடர்புச் சாதனங்கள் வாயிலாக உலகமே கிராமமாகிக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் கதைகளின் பரவல் இன்னும் வேகமாக நிகழ்கிறது. இவ்வாறு பரவினாலும் கதைகள் அந்தந்த மக்கட் குழுக்களின் பண்பாடுகளுக்கேற்பவும் நிலச் சூழல்களுக்கேற்பவும் மாற்றம் பெற்றே மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
• சூழலும் பொருளும்
எனவே மக்களிடம் வாய் மொழியாகப் பரவியுள்ள நாட்டுப்புறக் கதைகள் எங்கே தோன்றியிருந்தாலும் அவை பரவியுள்ள மக்கட் குழுக்களின் வாழ்க்கையையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துபவையாக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை. மேலும் ஒரு பண்பாட்டுக் குழுவினரிடையே கூட ஒரு கதையை ஒருவர் கூறுவதுபோல் மற்றவர் கூறுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் ஒருவரே ஒரு கதையை மறுமுறை கூறும்போது பனுவலில் (Text) மாற்றம் காணப்படும். எனவே ஒரே கதை வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு பொருளில் கூறப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அதனால்தான் நாட்டுப்புறக் கதையை ஒருவர் ஒருமுறை கூறுவதை ஒரு பனுவல் (Text) என்று கொள்வர்.