தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பகுதி 1.4-ஆய்வுகள்

  • 1.4 ஆய்வுகள்

    நாட்டுப்புறப் பாடல்கள் கதைகள், புதிர்கள், பழமொழிகள் முதலான நாட்டுப்புற இலக்கியங்களுள் நாட்டுப்புற ஆய்வுகளே உலக அளவில் மிகுதியாக நிகழ்ந்துள்ளன.

    1.4.1 கதை சேகரிப்பும் முடிவுகளும்

    கதைச் சேகரிப்புப் பணி பல காலகட்டங்களில் நிகழ்ந்ததன் பலனாகப் பல்வேறு கதைகள் சேகரிக்கப்பட்டன. வெவ்வேறு நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட கதைகளில் காணப்பட்ட ஒற்றுமை அறிஞர்களைப் பெரிதும் கவர்ந்தது.

    தியோடர் பென்பே (Theoder Benfey, 1809-1881) என்னும் செருமானிய-இந்தியவியல் அறிஞர் சமஸ்கிருதக் கதை இலக்கியங்களை ஆராய்ந்தார். இவர் பஞ்சதந்திரக் கதைகளைச் செருமானிய மொழியில் மொழி பெயர்த்தார். சமஸ்கிருத - ஐரோப்பியக் கதைகளுக்கு இடையேயான ஒற்றுமைகளை ஆராய்ந்தார். இறுதியில் கதைகள் இந்தியாவில் தோன்றி அங்கிருந்து ஸ்பெயின், கிரேக்க நாடுகள் வழியாக ஐரோப்பாவிற்குப் பரவின என்ற முடிவுக்கு வந்தார். பரவுதலை அடிப்படையாகக் கொண்ட அவருடைய கொள்கை புலம்பெயர்வுக் கொள்கை (Migrational Theory) என்று சுட்டப்பட்டது. பின்னர் இக்கொள்கை மறுக்கப்பட்டது.

    1.4.2 கதைகளும் வரலாறும்

    வெவ்வேறிடங்களில் சேகரிக்கப்பட்ட கதைகளுக்கிடையே காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளுக்குக் காரணம் என்ன? அவை முதலில் ஒருவரால் படைக்கப்பட்டு வாய்மொழியாகப் பரவும்போது அவ்வப் பகுதிகளுக்கேற்ப மாற்றம் பெற்றிருக்கும் என்னும் கருத்தினை இதற்கு விடையாகக் கூறினர் அறிஞர் பெருமக்கள். ஒரு கதையின் பல வடிவங்களை வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு இடங்களிலிருந்து சேகரித்து அக்கதையின் மூல வடிவம் என்ன? அக்கதை முதன்முதலில் எங்குத் தோன்றியது? எப்போது தோன்றியது? எந்தெந்த நிலப்பகுதி வழியே பரவிச் சென்றது? என்னென்ன மாற்றங்களைப் பெற்றது? என்பது பற்றி ஆராயப்பட்டது. இவ்வாறு ஆராயும் ஆய்வு முறைக்கு வரலாற்று-நிலவியல் ஆய்வுமுறை (Historical - Geographical Method) என்று பெயர். பல நாடுகளில் பெருஞ் செல்வாக்குப் பெற்றிருந்த இந்த ஆய்வு முறையில் நாட்டுப்புறக் கதைகள் மிகுதியாக ஆய்வுக்குட்படுத்தப் பட்டன.

    1.4.3 அமைப்பியல் ஆய்வு

    விளாதிமிர் பிராப் (Viadimir Propp) என்னும் உருசிய அறிஞர் 1928இல் நாட்டுப்புறக் கதைகளின் உள்ளமைப்பு (Morphology of Folk tales) என்னும் நூலை வெளியிட்டார். 1958இல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட இந்நூல் நாட்டுப்புறவியல் துறையில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்நூலில் நூறு தேவதைக் கதைகளை (Fairy tales) அமைப்பியல் ஆய்வுக்கு உட்படுத்துகிறார். பிராப் கதைகளில் நிலையானவை (Contants), மாறுபவை (Variables) என்னும் கூறுகள் உள்ளன. இவற்றுள் நிலையானவற்றை செயல் அல்லது வினை (Function) என்று சுட்டுகிறார் பிராப். இது கதையின் இயக்கத்திற்கு முக்கியமான பாத்திரத்தின் செயல்பாடு என்று கூறுகிறார். கதைகளில் பயன்படுத்தப்படும் செயல் அல்லது வினை மிகக் குறைவு என்று குறிப்பிடும் பிராப் நூறு தேவதைக் கதைகளில் 31 செயல் அல்லது வினைகளே உள்ளன என்பதை நிறுவுகிறார். இவ்வாறு ஒவ்வொரு வகையாக எடுத்துக்கொண்டு அமைப்பியல் ஆய்வு செய்தால் உலக நாட்டுப்புறக் கதைகளில் இடம் பெறும் வினைகள் எத்தனை என்பதைக் கூறிவிட முடியும். டாக்டர் ஆலன் டண்டீஸ் (Alan Dundes) என்னும் அமெரிக்க நாட்டுப்புறவியல் அறிஞர் இந்த ஆய்வு முறையில் சில மாற்றங்களைச் செய்து வட அமெரிக்க இந்திய நாட்டுப்புறக் கதைகளின் அமைப்பை ஆராய்ந்தார். The Morphology of North American Indian Folk tales என்பது இவருடைய ஆய்வு.

    இவ்வாறு பல்வேறு ஆய்வு முறைகளையும் கோட்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு நாட்டுப்புறக் கதைகள் உலகம் முழுவதும் ஆராயப்பட்டு வருகின்றன.

    1.4.4 தமிழக ஆய்வுகள்

    தமிழகத்தைப் பொருத்தவரை நாட்டுப்புறக் கதை ஆய்வு மிகக் குறைந்த அளவிலேயே நிகழ்ந்துள்ளது. ஆறு. இராமாநாதன் எழுதிய வரலாற்று நிலவியல் ஆய்வு முறை-அறிமுகமும் ஆய்வுகளும் என்னும் நூல் ஒரு குறிப்பிட்ட ஆய்வு முறையில் கதைகளை ஆய்வு செய்கிறது.

    மாவட்ட அடிப்படையில் கதைகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. தஞ்சை மாவட்ட நாட்டுப்புறக் கதைகளை அ.மா.சத்தியமூர்த்தி, மணலிசோமன் ஆகியோர் செய்துள்ளனர். மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகளை அய்யனாரும் குமரி மாவட்டக் கதைகளை ஸ்டீபன் மற்றும் ரோஸ்லெட் டேனிபாயும் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வுகள் கதைகள் வழி சமுதாய அமைப்பையும், கதைகளின் அமைப்பையும் வெளிப்படுத்தியுள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:30:04(இந்திய நேரம்)