தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 1.5-பயன்பாடு

  • 1.5 பயன்பாடு

    நாட்டுப்புறக் கதைகளின் பயன்பாடு அவற்றைக் கூறுவோர், கேட்போர், கூறப்படும் சூழல், நோக்கம் ஆகியவற்றிற்கேற்ப மாறுபடும்.

    1.5.1 கூறுவோரும் கேட்போரும்

    உண்ண மறுக்கும் குழந்தையை உண்ண வைப்பதற்காகவும், தூங்க மறுக்கும் குழந்தையைத் தூங்க வைப்பதற்காகவும், எதையேனும் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தையின் மனதைத் திசைதிருப்பவும் பெரியவர்கள் கதை கூறுவர். அப்போதைய நோக்கம் நிறைவேறுவது இக்கதைகளின் உடனடிப் பயன்பாடு. அதே நேரத்தில் உடல் பலமற்ற சிறிய முயல் வலிமைமிக்க சிங்கத்தை வீழ்த்தியதையும், வேகமாக ஓடும் ஆற்றல் உள்ள முயலின் அலட்சியத்தால் மெல்ல நடக்கும் ஆமை வென்றதையும், ‘புலி வருது புலி வருது’ என்று பொய் கூறி ஏமாற்றிய சிறுவன் புலிக்கு இரையாவதையும் கூறும்போது அக்கதைகளின் கருத்துகள் குழந்தைகளின் மனதில் ஆழப்பதிந்து விடுகின்றன. வாழ்க்கையில் தன்னம்பிக்கையையும் நல்லொழுக்கத்தையும் அவை கற்றுத் தருகின்றன.

    சிறுவர்கள் ஒன்றுகூடி விளையாடும்போது அவர்களுக்குள் கதைகள் பரிமாறிக் கொள்ளப்படுவதுண்டு. முன்பு கேட்ட கதைகளை நினைவில் வைத்திருந்து திரும்பிக் கூறல், அவற்றைக் கேட்டு மனதில் கொள்ள வேண்டும் என்று ஊன்றிக் கவனித்தல் முதலான செயல்கள் அவர்களின் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள உதவுகிறது. மேலும், பழைய கதைகளை மாற்றுதல், புதிதாகப் படைத்தல் முதலான செயல்களால் அவர்களின் படைப்பாற்றல் திறன் வளர்கிறது. தங்கள் கருத்துகளைத் தங்களை ஒத்த தோழர்களிடம் பரிமாறிக் கொள்ள அவர்களுக்குக் கதைகள் உதவுகின்றன.

    1.5.2 சூழலும் விளைவும்

    படித்தவர் படிக்காதவர் என்றில்லாமல் அனைத்து நிலைகளிலும் நாட்டுப்புறக் கதைகள் பயன்படுத்தப்படுவதைக் காணமுடிகிறது.

    அலுவலகத்தில் வேலை பார்ப்போருக்குத் தங்கள் மேலதிகாரிகளை எதிர்த்துச் செயற்பட முடியாத நிலை உள்ளது. அதே நேரத்தில் மேலதிகாரியின் ஆத்திரமூட்டும் செயல்களால் எரிச்சலடைகிறார்கள். அத்தகையோர் தங்கள் நண்பர்களுடன் தனியே பேசும்போது தங்கள் மேலதிகாரியைத் ‘திறமையில்லாமல் புகழ்பெறும் கதைப் பாத்திரம்’ ஒன்றோடு ஒப்பிட்டுக் கூறி மகிழ்கின்றனர். சான்றாகத் தன் மேலதிகாரியைச் சரியான ‘புண்ணாக்கு மாடன்’ என்று கூறுகிறார் ஒருவர். மற்றவர் புரிந்து கொண்டு சிரிக்கிறார். ஏனென்றால் புண்ணாக்கு மாடனைப் பாத்திரமாகக் கொண்ட கதையை அவர் அறிந்திருப்பதுதான். கதை வருமாறு:

    காட்சி

    ஒரு ஊரில் மாடன் என்பவன் வசித்து வந்தான். நல்ல உயரமும் பருமனும் உள்ளவன். நுகத்தடியைக் கைகளில் இடுக்கிக்கொண்டு மாடுகட்குப் பதிலாக ஏர் இழுப்பான். புண்ணாக்கு என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும். புண்ணாக்கைத் தின்று கொண்டே ஏர் உழுவான். அதனால் அவன் ‘புண்ணாக்கு மாடன்’ என்று அழைக்கப்பட்டான். ஒரு நாள் அந்த ஊருக்கு வந்த பயில்வான் ஒருவன் தன்னை எதிர்த்துச் சண்டையிட இந்த ஊரில் யாரேனும் உண்டா என்று சவால் விட்டான். ஊரார் சேர்ந்து புண்ணாக்கு மாடனை முன்னால் தள்ளி விட்டனர். அவனுக்குச் சண்டையிடத் தெரியாது. பயில்வான் அவனைக் குத்தினான். புண்ணாக்கு மாடன் அவன் கைகளைத் தன் கைகளுக்கிடையே ஏர் நுகத்தடியைப் பிடிப்பதுபோல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். பயில்வானால் கைகளை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. எனவே புண்ணாக்கு மாடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    தன் மேலதிகாரியும் இவ்வாறு திறமையில்லாமல் சந்தர்ப்பவசத்தால் அதாவது சூழலால் உயர் பதவியில் அமர்ந்துள்ளான் என்று கூறுவதன் வாயிலாக உயர் அதிகாரி மீதுள்ள ஆத்திரத்தை, அடக்கி வைக்கப்பட்ட தன் கோபத்தைத் தணித்துக் கொண்டு மன அமைதி அடைகிறான்.

    1.5.3 நோக்கமும் கருத்தும்

    ஆசிரியர் மாணவனுக்குக் கதை கூறி அறிவுரை கூறல், விளங்க வைத்தல் முதலானவற்றையும் நடைமுறையில் காணலாம். சான்றாக ‘உணவின்மீது ஆர்வமுள்ளவனுக்குப் படிப்பு வராது’ என்பதை விளக்கும் கதையை ஆசிரியர் கூறுவதைக் குறிப்பிடலாம். அக்கால வழக்கப்படி ஆசிரியர் வீட்டிலேயே தங்கி அவருக்குப் பணிவிடை செய்துகொண்டு அவர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டு படிக்கிறான் ஒரு மாணவன். ஆசிரியர் கூறியபடி தினமும் வேப்ப எண்ணெயில் சமைத்துப் போடுகிறாள் ஆசிரியர் மனைவி. அதைப்பற்றி அம் மாணவன் அறிந்திருக்கவில்லை. ஒரு நாள் ‘கசக்கிறது’ என்று மாணவன் கூற, ஆசிரியர் ‘இனி உனக்குப் படிப்பு வராது’ என்று கூறி அவனை வீட்டுக்கு அனுப்பி விடுகிறார். படிப்பில் கவனம் உள்ளவன் உணவுச் சுவையில் கவனம் செலுத்த மாட்டான் என்னும் கருத்தினை விளக்கும் கதை இது.

    காட்சி

     

    அரசியல் மேடைகளில் மக்களுக்குக் கருத்துகளை எளிதில் விளக்க நாட்டுப்புறக் கதைகளைப் பயன்படுத்துவதை நாம் காண முடிகிறது.

    • நம்பிக்கை

    பணக்காரனால் வஞ்சிக்கப்படும் ஏழை இளைஞன் திடீரென்று தனக்குக் கிடைக்கும் மிகுதியான ஆற்றலால் அப் பணக்காரனை வென்று அவன் மகளை மணந்து கொள்வது போல அமையும் கதைகள் அதனைக் கேட்போருக்கு மன அமைதியை ஏற்படுத்துகின்றன. தானும் அவ்வாறு வெற்றி கொள்ள முடியும் என்னும் தன்னம்பிக்கையை அவர்களுக்கு அத்தகைய கதைகள் ஏற்படுத்துகின்றன.

    • அறிவுரை

    இவற்றைத் தவிர, பெரியவர்கள் இளையோருக்குக் கூறும் கதைகள் கருத்துக் கருவூலங்களாகக் காணப்படுகின்றன. அவை உலகிலுள்ள வேறுபட்ட பண்புடைய மக்களைப் பாத்திரங்கள் வாயிலாக அறிமுகப்படுத்துகின்றன. எவற்றைச் செய்யலாம் எவற்றைச் செய்யக் கூடாது என்று அறிவுறுத்துகின்றன. நல்ல செயல்களைப் பாராட்டி ஊக்கப்படுத்துக்கின்றன. தீய செயல்களைக் கண்டித்து விலக்கச் சொல்கின்றன. காடுகள், மலைகள், ஆறுகள், வயல்கள், கடல்கள், பறவைகள், விலங்குகள் முதலானவற்றைப் பற்றிப் பல்வேறு நிலைகளில் அறிவூட்டுகின்றன. கேலியும் கிண்டலுங் கலந்து கற்பனை நயத்துடன் மனத்தில் தைக்குமாறு நாட்டுப்புறக் கதைகள் கூறப்படுவதால் அவை மனித சமுதாயத்தை உருவாக்கும் மிகச் சிறந்த சாதனமாகச் செயற்படுகின்றன என்று கூறுவது மிகையாகாது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:30:07(இந்திய நேரம்)