தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பகுதி 1.2-சேகரிப்பும் பதிப்பும்

  • 1.2 சேகரிப்பும் பதிப்பும்

    உலகின் பல்வேறு நாடுகளில் நாட்டுப்புறக் கதைச் சேகரிப்புப் பணிகள் நடைபெற்றன. அதன் விளைவாகவே தமிழிலும் அத்தகைய முயற்சிகள் தொடங்கின. எனவே, முதலில் பிற நாடுகளில் நடைபெற்ற சேகரிப்பு மற்றும் பதிப்புப் பணி பற்றிச் சுருக்கமாக அறிந்து கொள்ளலாம்.

    1.2.1 உலக அளவிலான சேகரிப்பும் பதிப்பும்

    நாட்டுப்புறக் கதைகள் பல்வேறு நோக்கங்களுக்காகச் சேகரிக்கப்பட்டன. ஜேக்கப் கிரிம் (Jakob Crimm, 1785-1863) என்னும் ஜெர்மன் மொழியியல் வல்லுநரும் அவர் சகோதரர் வில்ஹெல்ம் கார்ல்(Wilhelm Karl) என்பவரும் ஜெர்மன் மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். பேச்சு வழக்கில் அமைந்த நாட்டுப்புற இலக்கியங்கள் அவர்களைக் கவர்ந்தன. அவர்கள் நாட்டுப்புறக் கதைகளின் இரு தொகுதிகளை 1812 மற்றும் 1815 ஆண்டுகளில் வெளியிட்டனர். இத்தொகுப்புகள் 1884இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டன. கிரிம்மின் தேவதைக் கதைகள் என்று மக்களால் அறியப்பட்ட இத்தொகுப்பு உலக மக்களிடையே மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. நாற்பது நாடுகளில் ஐம்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இக்கதைகள் 1966 வரை இருபதாயிரம் பதிப்புக்களாக ஆயிரம் மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டிருக்கின்றன என்று தெரிய வருகிறது. இதன் வழி இக்கதைகள் மக்களிடம் பெற்றுள்ள செல்வாக்கையும் அறிய முடிகிறது. இதனைத் தொடர்ந்து உலகின் பல்வேறு மொழிகளிலும் நாட்டுப்புறக் கதைச் சேகரிப்புப்பணி விரைவு பெற்றது.

    • ஆட்சியாளர்களும் சேகரிப்பும்

    வெள்ளையர் தங்கள் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த நாடுகளைச் சேர்ந்த மக்களை நன்கு புரிந்து கொண்டால்தான் அவர்களைத் தொடர்ந்து ஆட்சி செய்ய முடியும் என்பதை உணர்ந்தனர். அதற்கு அம் மக்களின் நாட்டுப்புற இலக்கியங்கள் துணைபுரியும் என்று கருதி அவற்றைச் சேகரிக்கத் தொடங்கினர். மதங்களைப் பரப்பும் நோக்கத்தோடு பல நாடுகளுக்குச் சென்ற பாதிரியார்களும் அவ்வப்பகுதி மக்களைப் புரிந்துகொள்ளும் எண்ணத்துடன் நாட்டுப்புற இலக்கியங்களைச் சேகரிக்கத் தொடங்கினர். நாட்டுப்பற்றுக் காரணமாகத் தம் நாட்டு மக்களைப் புரிந்து கொள்ளவும் அவர்களின் தனித்தன்மையை விளக்கவும் அவர்களின் கலை கலாச்சாரத்தை அழிந்துவிடாமல் பாதுகாக்கவும் சிலர் சேகரிப்புப் பணிகளில் ஈடுபட்டனர். இவ்வாறு சேகரிக்கப்பட்ட இலக்கியங்களுள் நாட்டுப்புறக் கதைகளும் அடங்கும். தமிழில் நடைபெற்ற சேகரிப்புப் பணி பற்றி இங்கு அறிந்து கொள்வது நல்லது.

    1.2.2 தமிழகத்தில் சேகரிப்பும் பதிப்பும்

    தமிழில் 1867ஆம் ஆண்டு வீராச்சாமி நாயக்கர், மயில் ராவணன் கதையை வெளியிட்டதிலிருந்து நாட்டுப்புறக் கதை வெளியீட்டுப்பணி தொடங்குகிறது. Indian Antiquiry என்னும் ஆங்கில இதழில் பல கதைகள் வெளியிடப்பட்டன. நடேச சாஸ்திரி பல கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். ஆங்கில ஆட்சியாளருக்கு உதவும் நோக்கம் கொண்டதாக இவருடைய பணியைக் கருதமுடிகிறது. ஆயினும் இவருடைய கதைச் சேகரிப்புப் பணி பாராட்டத்தக்கது. இவர் கிங்ஸ்காட் (Kingscote) உடன் சேர்ந்து Folk tales in Southern India என்ற நூலையும் தனியாகப் பல நூல்களையும் வெளியிட்டார். பின்னாளில் இவருடைய கதைகள் தமிழிலும் வெளியிடப்பட்டன.

    கா.அப்பாதுரை அவர்களின் நாட்டுப்புறக் கதைகள், சு.அ.இராமசாமிப் புலவரின் தென்னாட்டுப் பழங்கதைத் தொகுதிகள், வை. கோவிந்தனின் தமிழ் நாட்டுப் பழங்கதைகள், கி.ராஜநாராயணனின் மிழ்நாட்டு நாடோடிக் கதைகள், கு.சின்னப்ப பாரதியின் தமிழக கிராமியக் கதைகள், வை.கோவிந்தனின் பாரத நாட்டுப் பாட்டிக் கதைகள், அ.கா.பெருமாளின் நாட்டார் கதைகள் போன்ற பல தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. 1979ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் தமிழகத்திலிருந்து சேகரிக்கப்பட்ட கதைத் தொகுப்புகள் மிகுதியாக வெளிவந்துள்ளன. அவற்றுள் க.கிருட்டினசாமியின் கொங்கு நாட்டுப்புறக் கதைகள், கி.ராஜநாராயணனின் தாத்தா சொன்ன கதைகள், ஆறு. இராமநாதனின் நாட்டுப்புறக் கதைகள் முதலானவை குறிப்பிடத்தக்கன.

    சமீப காலங்களில் முனைவர் பட்ட ஆய்வுக்கெனச் சேகரிக்கப்பட்டு அச்சிடப்படாத நாட்டுப்புறக் கதைத் தொகுப்புகளுள் சில சிறந்த தொகுப்புகள் காணப்படுகின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

    நாட்டுப்புறக் கதைகளைச் சேகரிப்போர், மக்கள் அவற்றை வெளிப்படுத்தும், அந்த மொழியிலேயே (பேச்சு நடையிலேயே) பதிவு செய்வார்கள். அச்சில் வெளிவரும்போது நடையைச் சிறிது மாற்றி அமைப்பது உண்டு. அந்த வகையில் இந்தப் பாடத்தில் நாட்டுப்புறக் கதைகள் இலக்கிய நடையில் தரப்பட்டுள்ளன.

    • தொகுப்பு நூல்களின் பட்டியல்

    நாட்டுப்புறவியல் (1987-88) இதழில் தமிழகத்திலிருந்து இதுவரை வெளிவந்த நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பு நூல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அப்பட்டியலில் உள்ள தொகுப்புக்களுள் மூன்றில் ஒரு பங்குத் தொகுப்புக்கள் பிற மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவை. பஞ்சதந்திரக் கதைகள், ஈசாப் கதைகள், உலக நாடோடிக் கதைகள், அரபுக் கதைகள், தெனாலிராமன் கதைகள், நவரத்தினமாலை (சோவியத் நாட்டுக் கதைகள்), ஆர்மீனிய நாடோடிக் கதைகள், கிரேக்க நாடோடிக் கதைகள் முதலியன அவற்றுள் சில.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:29:58(இந்திய நேரம்)