தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மூடப்பழக்கங்களை அழிப்போம்

  • 2.4 மூடப்பழக்கங்களை அழிப்போம்
     

    E

    தமிழ்ச் சமுதாயம் பகுத்தறிவுப் பாதையிலிருந்து விலகி மூடப்பழக்கங்கள் என்ற குழிகளில் விழுந்து விழுந்து நலிந்து கொண்டிருந்தது. அதனை அவ்வப்போது கரையேற்றும் முயற்சிகள் இருந்தன. எனினும், அக்குழிகளைத் தூர்த்துப் பகுத்தறிவு நெறியில் செலுத்தும் பணியைப் பெரியார் இராமசாமி ஏற்றார். தொடக்கத்தில் கல்லெறியும் சொல்லெறியும் அவர்க்குக் கிடைத்தன. இதோ அவர் உருவத்தைக் கவிஞர் வருணிப்பதைப் பாருங்கள்!

    தொண்டு செய்து பழுத்த பழம்
         தூயதாடி மார்பில் விழும்
    மண்டைச்சுரப்பை உலகு தொழும்
         மனக்குகையில் சிறுத்தை எழும்!

    (பெரியார்!: 16-19)
     

    ‘பகுத்தறிவுப் பகலவன்’ என்று மக்களால் போற்றப் பெற்ற பெரியார் குழந்தை மணம், கட்டாய மணம், வைதிகச் சடங்குகள், சோதிடம் ஆகியவற்றைச் சாடினார். பாரதிதாசன் இந்த மூடப்பழக்கங்களைக் கவிதை மூலம் தாக்கிப் பலரை விழிப்புறச் செய்தார்.
     

    இன்பம் செறிந்திருக்கும் இப்பெரிய தேசத்தில்
    முப்பத்து முக்கோடி மாந்தர்கள் மொய்த்தென்ன?
    செப்பும் இயற்கை வளங்கள் செறிந்தென்ன?
    மூடப்பழக்கம் முடிவற்ற கண்ணுறக்கம்
    ஓடுவதென்றோ? உயர்வது என்றோ?

    (சஞ்சீவி பர்வதத்தின் சாரல்: 397-401, முதல்தொகுதி)
     
    2.4.1 குழந்தைமணக் கொடுமை
     

    பால்ய மணம் என்று சொல்லப்பட்ட குழந்தை மணம் இந்தியா முழுவதும் வழக்கத்தில் இருந்தது. வைதிக நெறி இந்த வழக்கத்தைப் புகுத்தியது. சாதிவிட்டுச் சாதி திருமணம் நடப்பதைத் தடுக்கவே இந்த அகமண முறை (சாதிக்குள்ளேயே திருமண முறை) அமைந்தது. ஆனால் இதன் பின்விளைவுகள் எவ்வாறு இருந்தன? மணம் செய்து கொண்ட சிறுவன் இறந்து விட்டால் சிறுமி கைம்பெண் ஆகிவிடுவாள். அவளுக்கு அறிவு முதிர்ந்து பருவம் அடைகின்றபோது தாங்காத துயரம் அவளைச் சேரும். அவள் வெள்ளைப் புடவை உடுத்த வேண்டும். யார் முன்னிலையிலும் வரக்கூடாது; வந்தால், அபசகுனம் (கருதிச் செல்லும் செயல் நடைபெறாது) என்று பொருளாகுமாம். மங்கலமான செயல்களுக்கு அவள் ஒவ்வாதவள். அவள் நெற்றியில் குங்குமப் பொட்டிடுதலோ, கூந்தலில் மலர் சூடுதலோ கூடாது. அப்படிப்பட்ட ஒருத்தி வளர்ந்த பின் காதல் கொண்டதைக் கண்டு தாய் கொதித்துப் பேசுகிறாள்; காதலனின் தாயும் அவர்கள் காதலை ஏற்க மறுக்கிறாள். கவிஞர் அதனைக் காட்டுகிறார் பாருங்கள்!
     

    பெற்ற இளந்தலைக் கைம்பெண்ணடீ ! - என்ன
    பேதைமை என்றனள், மங்கையின் தாய்.
    சிற்சில ஆண்டுகள் முற்படவே - ஒரு
    சின்னக் குழந்தையை நீ மணந்தாய்;
    குற்றம் புரிந்தனை இவ்விடத்தே - அலங்
    கோலமென்றாள் அந்தச் சுந்தரன் தாய்
    புற்றரவு ஒத்தது தாயர் உள்ளம் - அங்குப்
    புன்னகை கொண்டது மூடத்தனம்.

    (காதற்குற்றவாளிகள்: 41-48. முதல் தொகுதி)
     

    இவ்வாறு உள்ளத்தில் படியுமாறு சொல்லிச் சொல்லி இன்று இந்த வழக்கம் பெரும்பாலும் ஒழிந்துவிட்டது.
     

    2.4.2 கிழவனுக்கு மணமா?
     

    வயது முதிர்ந்தவர் இளம்பெண்களை மணக்கும் கொடுமையும் நாட்டில் இருந்தது. வறுமை காரணமாக ஒருவன், தன் மகளைக் கிழவன் ஒருவனுக்கு மணம் செய்து கொடுத்துவிடுகிறான். மகளைப் பெற்ற தாய் தன்மகள் வாழ்க்கையைப் பார்க்கிறாள், என்ன கொடுமை! நரைத்த தலை; சோர்ந்த உடல்; மருமகக் கிழவன் பள்ளியறையில் வாயெச்சில் ஒழுகத் தூங்கிக் கிடக்கிறான். மகள் என்ன செய்தாள் தெரியுமா? பாலில் நஞ்சு கலந்து குடிக்கப் போனாள். தாய் ஓடித் தடுத்தாள். என்னைச் சாகவும் விடாத பாழுந்தாயே! என்று மகள் குமுறினாள். தாய், சமூக அமைப்பைத் தூற்றுகிறாள்.
     

    மண்ணாய்ப் போக! மண்ணாய்ப் போக!
    மனம் பொருந்தா மணம் மண்ணாய்ப் போக!
    சமூகச் சட்டமே! சமூக வழக்கமே!
    நீங்கள், மக்கள் அனைவரும்
    ஏங்கா திருக்க மண்ணாய்ப் போகவே!

    (மூடத்திருமணம்: 46-51. முதல்தொகுதி)
     

    என்று துயரம் தாங்காது புலம்புகிறாள். பொருந்தா மணம் என்பது செல்வர்கள் தம் பணவலிமையில் சமூகத்தில் இழைக்கும் கொடுமையாக இருந்தது. இவ்வழக்கம் பெரும்பாலும் இன்று ஒழிந்தது.
     

    2.4.3 சோதிடம் இகழ்
     

    மனிதனின் உழைப்பும் முயற்சியும் இகழப்பட்டன. மனிதனின் வாழ்வை முடிவு செய்வன வானில் உள்ள கோள்களே என்று கூறிய சோதிடம் வாழ்க்கை வழிகாட்டி ஆகிவிட்டது. குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி என்று கூறி மக்கள் அலையத் தொடங்கினர். நவக்கிரகங்கள் என்று கூறப்பட்ட ஒன்பது கோள்களுக்கு உரிய சிறப்புத் தலங்களுக்குப் பயணம் மேற்கொண்டு கழுவாய்த் தேடினர். திருமணம் செய்யத் தடையாகச் ‘செவ்வாய் தோஷம்’ என்பது

    கூறப்பட்டது. மனிதனின் ஜாதகத்தில் செவ்வாய்க்கோள் இருக்குமிடம் கொண்டு இந்தச் ‘செவ்வாய்தோஷம்’ என்பது முடிவு செய்யப்பட்டது. ஒருநாளில் ஆகாத நேரம் என்று இராகுகாலம் ஒன்றரை மணி நேரமும் எமகண்டம் ஒன்றரைமணியும் ஒதுக்கப்பட்டன. வாரசூலை, அட்டமி, நவமி, பரணி, கார்த்திகை என்று பயணத்திற்கு ஒவ்வாத நாட்களின் பட்டியல் போடப்பட்டது. இப்படிப்பட்ட நம்பிக்கைகள் கொண்ட குடும்பம் முன்னேறுமா? பாரதிதாசன் ‘இருண்டவீடு’ என்னும் நூலில் இத்தகைய மூடநம்பிக்கைகளால் கெட்டழிந்த குடும்பத்தைக் காட்டுகின்றார். ‘நல்லமுத்துக் கதை’யின் வழியாகச் சோதிடம் கூறுவானின் பொய்ம்மை வெளிப்படுத்தப்படுகின்றது.
     

    ஆடியில் திருமணம் கூடுதல் உறுதி

    (நல்லமுத்துக்கதை: 53, மூன்றாம் தொகுதி)
     

    என்கிறார் சோதிடர். ஆடி மாதத்தில் எப்படிக் கூடும் என்று மற்றவர் கேட்கிறார். ஏனெனில் சாத்திர வழக்கப்படி ஆடி மாதத்தில் திருமணம் நடத்துதல் இல்லை. உடனே சோதிடம் கூறுபவர் விழித்துக் கொள்கிறார்.
     

    ஆடி கடைசியில் ஆகும் என்றால்
    ஆவணி முதலில் என்றுதான் அர்த்தம்

    (நல்லமுத்துக்கதை: 55-56, மூன்றாம் தொகுதி)
     

    என்கிறார். இப்படி ஏமாற்று வேலை நிகழ்கிறது. இச்சோதிடம் இகழத் தக்கது என்று உணர்த்துகிறார் பாவேந்தர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:48:02(இந்திய நேரம்)