Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
5. நம்பி நெடுஞ்செழியன் செய்த சிறப்புமிகு செயல்கள் யாவை?
“இளம் பெண்களின் வளையணிந்த தோள்களை நம்பி நெடுஞ்செழியன் தழுவினான். காவல் மிக்க சோலைகளின் பூக்களைச் சூடினான்; குளிர்ந்த மணம் வீசும் சந்தனத்தைப் பூசினான்; பகைவரை அவர்தம் சுற்றத்தாரோடு அழித்தான்; நண்பர்களை மேம்படுத்திக் கூறினான். இவர்கள் வலியவர்கள் எனவே இவரைப் பணிவோம் என்று யார்க்கும் வழிபாடு சொல்லி அறிய மாட்டான்; இவர்கள் நம்மை விட எளியவர்கள் என்று கருதி அவர்களை விடத் தன்னை மேம்படுத்திச் சொல்லி அறிய மாட்டான். பிறரிடம் சென்று பொருள் வேண்டுமென்று இரத்தலை அறிய மாட்டான். ஆனால் தன்னை வந்து சூழ்ந்து நின்று இரந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லுதலை அறிய மாட்டான். அரசர்களின் அவைக் களங்களில் தன் சிறந்த புகழை வெளிப்படுத்தினான். தன் மேல் வரும் படையைத் தன் நாட்டு எல்லையுள் புகாமல் எதிர்நின்று தடுத்தான். புறங்காட்டி ஓடுகின்ற படையை அதன் பின் சென்று தாக்காது நின்றான். வேகமாகச் செல்லும் தன் குதிரையைத் தன் மனத்தைக் காட்டிலும் விரைவாகச் செலுத்தினான். நீண்ட தெருக்களில் தன் தேர் சூழ்ந்து வருமாறு செலுத்தினான். உயர்ந்த யானைகளில் அவன் ஊர்ந்து வந்தனன். இனிமை செறிந்த மதுவின் குடங்களைப் பலர்க்கும் வழங்கித் தீர்ந்து போகச் செய்தனன். பாணர்கள் மகிழுமாறு அவர்களின் பசியைத் துடைத்தனன். மயக்கம் தரும் சொற்களை மொழியாது நடுவு நிலை அமைந்த சொற்களை மொழிந்தனன். இவ்வாறு அவ்வரசன் செய்யத் தகுவனவெல்லாம் செய்தனன்.