தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P10241-1.1 நாடகத் தன்மை

  • 1.1 நாடகத் தன்மை

    தமிழில் இயற்றப்பட்ட பழைய நாடகங்களின் தன்மையைப் பற்றிப் பார்ப்போம்.

    1.1.1 பழைய நாடகங்கள்

    பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் ஆடலும் பாடலும் கொண்ட நாடகங்கள் எழுதப்பட்டன. குறவஞ்சி நாடகங்கள், நொண்டி நாடகங்கள், கீர்த்தனை நாடகங்கள் முதலானவை இத்தகைய தன்மையில் அமைந்தவை.

    குறவஞ்சி நாடகங்கள்

    குற்றாலக் குறவஞ்சி, விராலிமலைக் குறவஞ்சி, அழகர் குறவஞ்சி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி முதலானவை குறவஞ்சி நாடகங்கள்.

    நொண்டி நாடகங்கள்

    திருக்கச்சூர் நொண்டி நாடகம், பழனி நொண்டி நாடகம், சீதக்காதி நொண்டி நாடகம் முதலான பல நொண்டி நாடகங்களும் படைக்கப்பட்டன. கதைத்தலைவன் காம வலையில் சிக்கித் தீயவனாக இருந்து, பிறகு தண்டனைகளால் அங்கங்களை இழந்து, வருந்தித் தெய்வத்தை வேண்டி மீண்டும் அங்கங்களைப் பெறுவான் என்பது நொண்டி நாடகத்தின் கதை. இந்நாடகங்களில் திருடன் கூடச் சலங்கை கட்டிக் கொண்டு ஆடிப்பாடி மகிழ்விப்பான்.

    கீர்த்தனை நாடகங்கள்

    கீர்த்தனை நாடகங்களும் எழுதப்பெற்றன. இசை நாடக வடிவில் இவை அமைந்திருந்தன. சீர்காழி அருணாசலக் கவிராயரின் இராம நாடகம், கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை முதலானவை குறிப்பிடத்தக்கன. இராம நாடகத்தில் 500 பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. இராமனும் பரசுராமனும் வாதம் புரிகின்ற இடத்தில் மட்டும் உரையாடல் தன்மை இருக்கிறது. பாடல்கள் பேச்சு மொழி கலந்து அமைந்துள்ளன.

    விலாசம்

    பாடல்களோடும் கட்டியங்காரனின் வசனங்களோடும் அமைந்த நாடகங்கள் விலாசம், நாடகம் முதலான பெயர்களில் எழுதப்பட்டன. இராமச்சந்திரக் கவிராயரின் பாரத விலாசம், அரங்கப் பிள்ளையின் அரிச்சந்திர விலாசம், கல்யாண சுந்தரம் பிள்ளையின் மெய்அரிச்சந்திர விலாசம், வெங்கட்ராம உபாத்தியாயரின் மார்க்கண்டேய விலாசம், வேம்பம்மாளின் பிரகலாத விலாசம், அப்பாவுப் பிள்ளையின் சத்தியபாஷா அரிச்சந்திர விலாசம் முதலானவை குறிப்பிடத் தக்கவை. அப்பாவுப் பிள்ளையின் பாடல்களே பின்வந்த அரிச்சந்திர நாடகங்களில் பயன்படுத்தப்பட்டன. சகுந்தலை விலாசம், தாருக விலாசம் முதலான நாடகங்களும் குறிப்பிடத்தக்கவை.

    நாடகம்

    மேற்குறிப்பிட்ட பாணியில் பாடல்களாகவும் கட்டியங்காரன் வசனத்தோடும் நாடகம் என்ற பெயரிலும் நாடகங்கள் எழுதப்பட்டன. ஹிரண்ய சம்கார நாடகம், உத்தர ராமாயண நாடகம், கந்தர் நாடகம், பாண்டவர் சூதாட்ட நாடகம், வள்ளியம்மை நாடகம், சிறுத்தொண்டர் நாடகம் முதலானவை குறிப்பிடத் தக்கன.

    பழைய நாடகங்களின் தன்மை

    முந்தைய நாடகங்களில் வசனங்களைக் கட்டியங்காரனே பேசுவான். அந்த வசனம் ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்கும் தொடர்பு ஏற்படுத்துவதாக இருக்கும். “அகோ! கேளுங்கள் சபையோர்களே! இப்படியாகத்தானே அரிச்சந்திர மகாராஜனாகப்பட்டவர் நாடு நகரம் முதலானதுகளை விசுவாமித்திரரிடம் கொடுத்துவிட்டுக் காசிக்கு வரும் வழியில் அநேகத் துயரை அடைந்து காசிநகர்க் கோபுரந் தோன்றக் கண்டு தன் பத்தினிக்குத் தெரிவித்துக் கரம்கூப்பித் தொழுகின்றதனைக் காண்பீர்கள் கனவான்களே!” என்பான் கட்டியங்காரன். இது பொதுவசனம் எனப்படும். இதைத் தவிரப் பாடல்கள்தாம் நாடகங்களில் இடம் பெற்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:59:36(இந்திய நேரம்)