தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P10241-1.4 திராவிட இயக்கத் தாக்கம்

  • 1.4 திராவிட இயக்கத் தாக்கம்

    நாட்டு விடுதலை நெருங்கியபோது, தேசிய எழுச்சி பொருளற்றதாகியது. இதனால் சுயமரியாதை இயக்கக் கருத்துகள் நாடகங்களின் உள்ளடக்கமாக ஆயின. மூடநம்பிக்கை எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு என்ற உள்ளடக்கங்கள் நாடகமாக்கப் பெற்றன. உரையாடல்களில் தமிழ்மொழி நடை புதுப்புனைவுடன் இடம் பெற்றது. பாரதிதாசன், அண்ணா, கலைஞர் கருணாநிதி, என்.எஸ். கிருஷ்ணன், ஏ.கே. வேலன், ப. கண்ணன், திருவாரூர் கே. தங்கராசு, திருவாரூர் மூர்த்தி, குத்தூசி குருசாமி முதலானோர் புராணக் கதைகளைத் தம் கொள்கைகளுக்கு ஏற்பப் புதுக்கி மாற்றி அமைத்தனர்.

    1.4.1 பாரதிதாசன்

    திராவிடர் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு, அதற்காகப் பிரச்சாரம் செய்த பாரதிதாசன், கட்சிக் கொள்கைகளை மக்களிடம் எடுத்துரைப்பதற்காகத் திராவிட இயக்கம் சார்பான நாடகங்களை இயற்றினார்.

    இரணியன் - நாடகம்

    பாரதிதாசன், ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ நாடகத்தின் மூலம் இரணியன் வரலாற்றைத் திராவிட இயக்கக் கொள்கையான ஆரிய எதிர்ப்பிற்கேற்ப மாற்றியமைத்தார். சங்கரதாஸ் சுவாமிகளின் பிரகலாதா நாடகமும் நவாப் ராஜமாணிக்கத்தின் தசாவதாரம் நாடகமும் நடத்தப்பட்டு மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்தன. இக்காலக் கட்டத்தில் இந்நாடகங்களின் கருத்துக்கு முரணாகவும் எதிர்ப்பாகவும் பாரதிதாசன் இந்நாடகத்தைப் படைத்தார். இதில், வடமொழிச் சொற்கள் மிகுதியாக இடம் பெற்றன. 15 காட்சிகளும் 22 பாடல்களும் இந்நாடகத்தில் இடம் பெற்றன. ஆரிய நாகரிகம் மோசமானது என்று இந்நாடகம் புலப்படுத்தியது.

    நாடகக்கதை

    பிரகலாதன் ஆரியர் பிடியில் சிக்குகிறான். தந்தை இரணியன் வருந்துகிறான். பிரகலாதனுடன் இருக்கும் ஆரியப் பெண் சித்திரபானு, இரணியன் உறங்கும்போது ஈட்டியை அவன் மீது வீசுகிறாள். அவள் பெண் என்பதால், இரணியன் மன்னிக்கிறான். அவள் பிரகலாதனிடம், இரணியன் தன்னைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறி வெறுப்பேற்றுகிறாள். சித்திரபானு, சேனாதிபதியை மயக்கி, இரணியனைக் கொல்லத் தூண்டுகிறாள். இரணியன், ஆரியர் புரட்டை வெளிப்படுத்துகிறான். ஆரியர்கள், அவனை நாராயணன் அழிப்பார் என்று புரளியைக் கிளப்புகின்றனர். தூணுக்குப் பின் ஒளிந்திருக்கும் ஆரியன் ஒருவன், நரசிங்கம் போல் வேடமிட்டுக்கொண்டு இரணியனைக் குத்த வருகிறான். அதே சமயம் பின்னாலிருந்து இருவர் முதுகில் குத்துகின்றனர். சேனாதிபதி பிரகலாதனைக் கொல்கிறான். சித்திரபானுவையும் அவன் கொல்கிறான். பின் சேனாதிபதி தற்கொலை செய்து கொள்கிறான். புராணக் கதையில் பொல்லாதவனாகக் காட்டப்பட்ட இரணியனை, நல்லவனாகக் காட்டும் புரட்சியாக நாடகம் அமைந்தது.

    நாடகக் கருத்து

    நாடகம் முழுதும் ஆரியர்களின் வஞ்சகத்தையும் கொடுமையையும் பாரதிதாசன் வன்மையாகக் கண்டிக்கிறார். ஆரியர்கள் தமிழ் நூல்களை எதிர்ப்பதாகக் காட்டி, தமிழ் உணர்ச்சியைத் தூண்டுகிறார்.

    நாடக வசனம்

    இரணியன் நாடகத்தில் உணர்ச்சிகரமான வசனங்களைப் பாரதிதாசன் எழுதியுள்ளார். சித்திரபானுவை அறிமுகப்படுத்துகையில், “நீலோற்பல நேத்திரம்! மின்னல் ஒளியை ஒழுகாயிடும் மந்தகாசம்! மலர்க்கொடியிடை! அந்திமாலைப் பொழுது ! இன்பத்தென்றல் !.... இளம் பருவத்தில் துடிதுடிப்பு !” என்று வருணித்திருந்தார்.

    நாடகத் தாக்கம்

    இந்நாடகத்திற்குப் பின் ஆரியர்கள் சூழ்ச்சியை மையமாகக் கொண்டு பல நாடகங்கள் படைக்கப்பட்டன. புராண இதிகாச மாந்தர்கள் ஆராய்ச்சிக்கு உள்ளானார்கள். இராவணன், கும்பகர்ணன், இந்திரஜித், கம்சன், வாலி முதலான மாந்தர்களின் வீரவரலாறுகள் திராவிட இயக்கத்தாரால் நாடகங்களாக ஆக்கப்பட்டன.

    வஞ்ச விழா - நாடகம்

    பாரதிதாசன் படைத்த ‘வஞ்ச விழா’ என்ற நாடகமும் ஆரிய எதிர்ப்புக் கருத்துடையதே. ஆரியர்கள், தமிழர் வாழ்வை அழிக்கச் சூழ்ச்சி செய்கிறார்கள். இந்திரனின் உதவியை அவர்கள் நாடுகிறார்கள். இந்திரன் தமிழர்களோடு மோதித் தோல்வி அடைகிறான். கரியன் என்ற அந்தணன், பெண்கள் படையைத் தமிழர்களுக்கு எதிராக அனுப்புகிறான். தமிழர்கள் தோல்வி அடைகிறார்கள். தமிழர்கள் தோற்ற நாள் வஞ்ச விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    1.4.2 ஏ.கே. வேலனும் பிறரும்

    பாரதிதாசனைப் போன்று, திராவிட இயக்கச் சார்புடைய ஏ.கே.வேலன் என்ற நாடக ஆசிரியரும், பிறரும் இயக்கச் சார்பான நாடகங்களை இயற்றினர்.

    ஏ.கே. வேலன்

    ஏ.கே.வேலனின் இராவணன் நாடகம், அவனது மாட்சியைக் காட்டுவதாக உள்ளது. அவனை மாவீரனாகப் படைத்துக் காட்டுகிறது. இராம இலக்குவரை இழிகுணம் படைத்த ஆரியர்களாகவும் கோழைகளாகவும் காட்டுகிறது. அகத்தியனை ஆரியச் சூழ்ச்சிக்குத் துணை புரிபவனாகவும், சீதையைக் காமவெறி பிடித்தவளாகவும் காட்டுகிறது. ஏ.கே. வேலன் கும்பகர்ணன், மாவீரன் கம்சன் முதலான நாடகங்களை நேஷனல் தியேட்டர்ஸ் ஆர்.எஸ். மனோகருக்காக எழுதினார்.

    பிறர்

    கண்ணன் எழுதிய வீரவாலி நாடகம், கிட்கிந்தைத் தலைவன் வாலியை மிகப்பெரிய வீரனாகக் காட்டுகிறது. எம்.ஆர். ராதாவின் கீமாயணம், என்.எஸ்.கிருஷ்ணனின் கிந்தனார், திருவாரூர் மூர்த்தியின் இலங்கேஸ்வரன், மு.கருணாநிதியின் துருவன், திருவாரூர் கே. தங்கராசுவின் இராமாயணம், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சிவன் - விஷ்ணு முதலான நாடகங்களும் குறிப்பிடத் தக்கவை.

    இலங்கேஸ்வரன் நாடகம்

    பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:59:47(இந்திய நேரம்)