தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.0- பாட முன்னுரை

  • 3.0 பாட முன்னுரை

        ஆடல்கள் இருவகைப்படும். (1) நாட்டுப்புற ஆடல், (2) செவ்வியல் ஆடல். நாட்டுப்புற ஆடல்கள் பரிணாம வளர்ச்சி அடைந்து செவ்வியல் ஆடல்களாக விளங்குகின்றன. நாட்டுப்புற ஆடல்கள் ஒழுங்கு படுத்தப்பட்டு, இலக்கண வரையறைக்குட் படுத்தும் பொழுது செவ்வியல் தன்மையைப் பெற்று விடுகின்றன.

        செவ்வியல் ஆடல் இன்று பரத நாட்டியம் என்ற பெயருடன் தமிழகத்தில் நிலவி வருகிறது. சதிராட்டம் என்றும் சதிர் என்றும், தாசியாட்டம் என்றும், கூத்து என்றும் கூறப்பட்ட ஆட்டம் பரத நாட்டியமாயிற்று.     தமிழகத்தில் பலர் இந்த ஆட்டத்தைக்    கற்கின்றனர்.    மன்றங்களும், தொலைக்காட்சியும் இக்கலை வளர்ச்சிக்குப்    பெரும் துணைபுரிகின்றன.

        தமிழகத்தை     அடுத்துள்ள     கேரள     நாட்டின் ஆட்டக்கலைகளாகக் கதகளியும், மோகினி ஆட்டமும் உள்ளன. ஆண்கள் ஆடுவது கதகளி. பெண்கள் ஆடுவது மோகினி ஆட்டம். மலையாள நாட்டின் பண்பாட்டுக் கலையோடு பரத நாட்டியக் கலையும் இணைந்து கதகளியாகவும், மோகினி ஆட்டமாகவும் விளங்குகின்றன.

        தெலுங்கு மொழியில் அமைந்த பாகவத மளோ நாட்டிய நாடகம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அச்சுதப்ப நாயக்க மங்கலம் என்கிற மெலட்டூரில் இன்றும் தமிழ் மக்களால் நடத்தப் பெற்று வருகின்றது. பழமையான நாடக மரபுடன் இது விளங்குகிறது.

        மணிப்புரி மாநிலத்தில் தோன்றிய மணிப்புரி நடனம் பரத நாட்டியக் கலையைத் தழுவிச் செவ்வியல் ஆடலாகத் திகழ்கிறது.

        ஆந்திர மாநிலத்தில் குச்சுப்புடி என்ற ஆடல் மிகச் சிறப்புடன் விளங்கி வருகின்றது. இவ் ஆடலுக்கும் பரத நாட்டியத்தின் பங்களிப்பு உண்டு. இவ் ஆடல் தற்போது தமிழகத்திலும் ஆடப்பட்டு வருகின்றது.

        ஒரிசா மாநிலத்தில் வழக்கில் இருக்கும் செவ்வியல் ஆடல் ஒடிசி ஆகும்.

        இவ்வகை ஆடல்கள் பற்றியும், ஆடும் முறை பற்றியும், ஒப்பனை பற்றியும், நிகழ்வுகளின் பொழுது மேற்கொள்ளப்படும் ஒப்பனை முறை, இசைக்கருவிகள் பற்றியும் இப்பாடம் மூலம் அறியலாம்.

    · செவ்வியல் ஆடல்     
    இப்பாடப் பகுதியில் செவ்வியல் ஆடல்களான பரத நாட்டியம், கதகளி,    குச்சுப்புடி, பாகவத மேளம், மணிப்புரி ஆடல்களைப் பற்றிக் காணலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 00:00:59(இந்திய நேரம்)