Primary tabs
-
3.3 மோகினி ஆட்டம்
மோகினி ஆட்டம் கேரளத்தில் ஆடப்படும் செவ்வியல் நடனமாகும். இது பெண்கள் மட்டும் ஆடும் நடனமாகும். மோகினி ஆட்டம், பரத நாட்டியமும், கேரள கிராமிய ஆட்டமும் சேர்ந்து உருவான கலை என்றும், பரத நாட்டியம், கதகளி ஆகியவற்றின் செய்முறைகள் இணைந்த சேர்க்கையின் அடிப்படையில் பிறந்தது என்றும் கூறலாம்.
திருமால் மோகினி அவதாரத்தில், காண்போர் மயக்கும் வண்ணம் ஆடினார். அவர் ஆடிய நடனம் மோகினி ஆட்டத்தின் தன்மையோடு ஒத்துக் காணப்பட்டது என்றும் அதனால் இந்நடனம் மோகினி ஆட்டம் என அழைக்கப்பட்டது என்றும் கூறுவர். மேலும் 18-ஆம் நூற்றாண்டில் ஆண்ட திருவாங்கூர் மன்னர் சுவாதித் திருநாள் மோகினி ஆட்டம் என்ற பெயரைச் சூட்டினார் என்றும் கூறப்படுகிறது. இந்நடனத்திற்குரிய பெயர்க்காரணம் பலவாறு கூறப்பட்டாலும் சுவாதித் திருநாள் காலத்தில் இந்நடனம் நன்கு சிறப்புப் பெற்றது. இவர் தன் அரசவையில் இருந்த அவைக்கள வித்வானான தஞ்சை நால்வருள் ஒருவரான வித்துவான் வடிவேலுவைக் கொண்டு இந்நடனத்திற்கு புத்துயிர் கொடுத்தார். மேலும் சுவாதித் திருநாள் மகாராசா பாலபாரதம் எனும் ஒரு நாட்டிய நூலினையும் பல இசை நாட்டிய உருப்படிகளையும் படைத்துத் தந்துள்ளார்.
கேரள நடன மங்கையரை நங்கையர் என்பர். கேரள தேசத்தில் நங்கையரும், நட்டுவனாரும் கலைப்பணி புரிந்தமைக்கு வரலாற்றுச் சான்றுகளும், கல்வெட்டுச் சான்றுகளும் பல உள. மோகினி ஆட்டம் àõ¬èê¢ சுவைக் கொண்ட நடனமாகும். தஞ்சாவூர் வித்துவான் வடிவேலு மூலமாக மோகினி ஆட்டத்துக்கான நாட்டிய உருப்படிகளை அமைத்தனர். பயிற்சி முறை பரத நாட்டியத்தைப் போலக் காணப்படுகிறது. பரத நாட்டியம் போல அரைமண்டியில் அமர்ந்து ஆடப்படுகிறது. ஆனால், பாதத்தைப் பக்கவாட்டில் நன்கு வைத்து உடலை அசைத்து மோகினி ஆட்டம் ஆடப்படும்.
பரத நாட்டியத்தில் நடன உருப்படியின் முதலாவதான அலாரிப்பு இந்நடனத்தில் இடம் பெறுவதில்லை. அதற்குப்பதில் சொற்கட்டு அதாவது முழுமையும் அடவுகளால் உருவாக்கப்பட்ட உருப்படி ஆடப்படும். இதன் அமைப்பு, பரத நாட்டியத்தில் காணப்படும் பாடலும், சொற்கட்டும் இணைந்து காணப்படும் சப்தம் உருப்படிபோல் காணப்படும்.
பரத நாட்டியத்தில் இரண்டாவதாக இடம் பெறும் சதிசுவரத்திற்குப் பதிலாகச் சுரமும், பாடல்வரியும் கொண்ட சுரசதி இடம்பெறும். பரத நாட்டியத்தில் இடம்பெறும் சப்தம் இதில் இடம் பெறுவதில்லை. மற்ற உருப்படிகளான பதவர்ணம், பதம், சுலோகம், சாவளி, தில்லானா போன்றன இதில் இடம் பெறுகின்றன. பாடல்கள் மலையாளம் மற்றும் சமற்கிருத மொழிகளில் உள்ளன. பரத நாட்டியத்தில் இல்லாத சொற்கட்டு, பந்தாட்டம் என்ற உருப்படிகள் இதன் முக்கியமான ஆடல் வகைகளாக உள்ளன.
3.3.2 ஒப்பனை முறையும் இசைக்கருவிகளும்
மோகினி ஆட்டத்தின் ஒப்பனையும், பயன்படுத்தும் இசைக்கருவிகளும் தனித்தன்மை உடையவை.
· ஒப்பனை
பரத நாட்டியத்தில் அமையும் முக ஒப்பனை போல மோகினி ஆட்டத்திலும் அமையும். ஆடை வெண்மை நிறத்தில் அமையும். மோகினியைப் போலத் தழையத் தழைய ஆடை அணியப்படும். சேர அரசகுல பெண்மணிகளைப் போல பக்கவாட்டில் கொண்டை அணியப்படுகிறது. அதைச் சுற்றிப் பூ அணியப் படுகிறது. பரத நாட்டியத்தைப் போலக் கை, கழுத்து போன்ற உறுப்பு ஆபரணங்களும் காலில் சலங்கையும் அணியப்படும்.
· இசைக்கருவிகள்
மோகினி ஆட்டத்தில் கர்நாடக இசை இடம்பெறும். பக்கவாத்தியம் பரத நாட்டியத்தில் இடம் பெறுவது போலக் காணப்பட்டாலும் சுத்த மத்தளம், இடக்கை போன்ற தோற்கருவிகள் மோகினி ஆட்டத்தில் இன்றியமையாத இசைக் கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. மோகினி ஆட்டம் சிங்காரமும் இலாசியமும் கலந்த ஆடற்கலையாகும். கேரளம் தந்த ஆடற்கலை வடிவமாக இது விளங்குகிறது.