Primary tabs
-
3.6 மணிப்புரி
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த, புகழ் பெற்ற செவ்வியல் நடனம் மணிப்புரி ஆகும். இது பலர் சேர்ந்து ஆடும் ஆடலாகும். இந்நடனம் தாண்டவம், இலாசியம் ஆகிய இரு கூறுகளையும் கொண்டு திகழ்கிறது.
மணிப்புரி நடனம் பரத நாட்டியம் போல அரைமண்டி நிலையில் ஆடப்படாமல் இரு பாதங்களையும் சேர்த்து முழங்கால் சற்று வளைந்த நிலையிலேயே ஆடப்படும். இதில் உடல் அலை போல எழும்பியும், பாம்பு போன்று வளைந்தும் இளகிய நிலையில் காணப்படும். ஒவ்வொரு அசைவின் பொழுதும் வெவ்வேறு விதமான முத்திரைகளைப் பயன்படுத்துவர். ஒற்றைக்கை, இரட்டைக் கை முத்திரைகளுக்கு அதிக முக்கியத்துவம் தராமல், நிருத்த முத்திரை அதிகம் உபயோகப்படுத்துவர். இந்நடனம் முழுவதும் உடலால் செய்யப்படும் அவிநயத்தை மையமாகக் கொண்டிருக்கும். ஆகார்ய, வாசிக அபிநயம் ஓரளவு இடம் பெற்றாலும், சாத்வீக அவிநயமும் ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் விளக்கம் கூறி ஆடும் ஆடலும் நிகழ்த்தப்பெறுவதில்லை. பாடல்கள் சைவ, வைணவ சமயங்களின் அடிப்படையில் காணப்படும். இந்த நாட்டியம் லைகரோபா நாட்டியம் என்றும் ராசலீலா நிருத்தம் என்றும் அழைக்கப்படும்.
· தாண்டவ முறை
பெண்கள் ஆடும் நடனம் இலாசிய முறையில் மிகவும் நளினமாகக் காணப்படும். ஆண்கள் புங்சோலோம் என்ற தாண்டவ முறையைச் சார்ந்த நடனத்தை நிகழ்த்துவர். இது மிகவும் உத்வேகம் நிறைந்ததாக இருக்கும். இந்த நடனத்தைக் கையில் போல்கி என்ற மத்தளத்தை இசைத்த படியே ஆடுவர். மற்றொரு தாண்டவமுறை நடனம் மணிப்புரி நடனத்தில் காணப்படுகிறது. இது கர்தால் சோலோம் என்று அழைக்கப்படுகிறது. இந்நடனத்தைக் கையில் பெரிய தாளத்தைத் தட்டிய படியே ஆடுவர். இந்தத் தாண்டவ நடனம் வைணவ முறைப்படி அமைந்திருக்கும்.
3.6.2 ஒப்பனை முறையும் இசைக்கருவிகளும்
மணிப்புரி நடனத்தின் ஒப்பனையையும் பயன்படுத்தும் இசைக்கருவிகளையும் இனி பார்ப்போம்.
· ஒப்பனை
முற்காலத்தில் லுங்கி போன்ற ஆடையை உடுத்தி இருந்தனர். ஆனால் தற்காலத்தில் கூடை போன்ற அமைப்பில் பலவித அழகான வேலைப்பாட்டுடன் ஆடை அணியப்படுகிறது. ஆடை, அணிகலன்கள் உயர்தரமான முறையில் வடிவமைக்கப்பட்டு அணியப்படுகின்றன. மணிப்புரி நடனத்தில் தனி ஆடலைத் தவிர நாட்டிய நாடகங்களும் ஆடப்படுகின்றன. இக்கலை, மணிப்பூர் மக்களின் சமூக, சமய வாழ்க்கையில் ஒன்றிக் கலந்து விட்டது.
· இசைக்கருவிகள்
மணிப்புரி நடனத்திற்கு டோல்கி, குழல், மஞ்சிரா, (தாளம்) போன்ற வாத்தியங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மணிப்புரி சொற்கட்டுகள் ங என்னும் உச்சரிப்புக் கொண்டு சொல்லப்படும் இந்த சொற்கட்டைக் கேட்கும் போது சீன மொழியைப் போல ஒலிக்கிறது.