Primary tabs
-
3.4 குச்சுப்புடி
ஆந்திரப் பிரதேசத்தில் தனிநபரால் ஆடப்படும் நடனம் குச்சுப்புடி என்று வழங்கப்படுகிறது. இது ஒரு செவ்வியல் ஆடலாகும். இதில் உவகைச் சுவையும், இலாசியமும் மிக்குக் காணப்படுகிறது.
· பெயர்க்காரணம்
ஆந்திரப் மாநிலத்தில் குச்சுப்புடி என்ற ஒரு கிராமம் உள்ளது. இந்த ஆடல் அங்குத் தோன்றியதால் இப்பெயர் பெற்றது.
குச்சுப்புடி நாட்டியக்காரர்கள் பாகவதலு என்று வழங்கப்பட்டனர். இதன் அடவுகளும், அபிநயமும் பரத நாட்டியத்தை ஒத்துக் காணப்படுகின்றன. பரத நாட்டியத்தைப் போல சப்தம், வர்ணம், பதம் போன்ற உருப்படி வகைகள் இந்நடனத்தில் கையாளப்படும். பாடல்கள் தெலுங்கு மொழியில் அமைந்திருக்கும். மேலும் தரு, தரங்கம் போன்ற உருப்படி வகைகளும் கையாளப்படுகின்றன. ஒரு நிகழ்ச்சியையோ அல்லது பழங்கதையையோ அழகாக விவரிக்கும் பாட்டிற்குத் தரு என்று பெயர். இதன் சொற்பகுதி புராண நிகழ்ச்சியைப் பற்றியதாகவோ, காதலை வெளிப்படுத்துவதாகவோ அமைந்திருக்கும். தரங்கம் என்பது பக்தியை மையமாகக் கொண்டு புனையப்படும் பாடல் வகையாகும். இத் தரங்கங்களை 17ஆம் நூற்றாண்டைச் சார்ந்த நாராயண தீர்த்தர் இயற்றியருளினார். தரங்கங்களில் பாலகோபால தரங்கம் குச்சுப்புடியில் மிகவும் புகழ் பெற்ற தரங்கமாகும். பாலகோபால தரங்கம் என்பது கிருட்டிணனின் சிறுவயது லீலைகளை விளக்கும் பாடலாகும். பாலகோபால தரங்கம் ஆடுகையில் ஒரு தாம்பாளத்தின் விளிம்பில் நின்று கொண்டு, ஒரு செம்பில் நீரை நிரப்பி அதைத் தலையில் தாங்கிக் கொண்டு, பல தாளங்களில் தங்களின் ஆடல் திறமையை வெளிப்படுத்துவர்.
ஆந்திராவில் இருவித நாட்டிய நாடகங்கள் காணப்படுகின்றன.
- குச்சுப்புடி
- பாகவத மேளம்
குச்சுப்புடியில் தனிநபர் ஆடும் நடனமும், குழுவினர் நிகழ்த்தும் நாட்டிய நாடகமும் காணப்படுகிறது. பாகவத மேளம் என்பது ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் நாட்டிய நாடகமாகும். இவர்கள் பாகவதர்கள் என அழைக்கப்படுவர். பாகவத மேளத்திற்குரிய நாடகங்களை மெலட்டூர் வெங்கட்ராமையர் அமைத்துக் கொடுத்தார். குச்சிப்புடி நாட்டிய நாடகத்தி்ற்குரிய நாடகங்களை சித்தேந்திர யோகி என்பவர் இயற்றியுள்ளார். இவற்றிற்குரிய கதைகளைப் பாகவத புராணத்திலிருந்து எடுத்துக் கொண்டனர். இவற்றில் பாமா கலாபம், பாரிசாதாபகரணம் போன்றவை மிகவும் பிரபலமானவை.
சித்தேந்திர யோகி உருவாக்கிக் கொடுத்த பல நாட்டிய நாடகங்களை இன்றும் குச்சுப்புடி கலைஞர்கள் பாதுகாத்து வருகின்றனர். நாட்டிய நாடகங்களிலுள்ள பாடல்கள் பலவற்றை எடுத்துத் தனிநபர் ஆடும் நடனத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். நாட்டிய நாடகப் பாடல்களைப் பொதுவாகத் தரு என்று குறிப்பிடுவர்.
3.4.3 ஒப்பனை முறையும் இசைக்கருவிகளும்
குச்சுப்புடி ஒப்பனையிலும், இசைக் கருவிகளிலும், பரதத்திலிருந்து சிறிது வேறுபட்டிருக்கும்.
· ஒப்பனை
குச்சுப்புடியின் ஒப்பனை, ஆடை, அணிகலன்கள் பரதநாட்டிய முறைப்படி அமைந்திருக்கும். ஆனால் ஆடைகளில் மட்டும் சிறிது வேறுபாடு காணப்படும். கீழாடை (பைஜாமா) பஞ்சகச்ச முறையில் அமைந்திருக்கும். மற்ற அனைத்தும் பரத நாட்டிய முறையில் இருக்கும்.
· இசைக்கருவிகள்
இசை கருநாடக முறையில் அமைந்திருக்கும். பரத நாட்டிய முறை போல நட்டுவனார், மிருதங்கம், பாடுபவர், குழல், வயலின் போன்ற பக்க இசையைக் கொண்டிருக்கும்.