Primary tabs
-
3.2 கதகளி
கேரளாவில் ஆடப்படுகின்ற நடனம் கதகளி ஆகும். மோகினி ஆட்டம் பெண்கள் மட்டும் பங்கேற்கும் தனிநபர் நடனமாகும். கதகளி ஆண்கள் மட்டும் பங்கேற்கும் குழுநடனம் ஆகும். கதகளி என்னும் ஆட்டக்கலையில் இயல், இசை, நாடகக் கூறுகள் ஒன்றிணைந்து விளங்குகின்றன. இக்கலைக்கே உரிய கதை இலக்கிய அமைப்பு, இசைப்பாடல் வகைகள், நாட்டிய முறைகள், வாத்திய முழக்கு வகைகள் யாவும் இலக்கண வரம்புகள் பெற்றுத் தனி இலக்கியங்களாகவும், நாட்டிய நாடகங்களாகவும் விளங்குகின்றன.
· பெயர்க்காரணம்
களி என முடியும் பல மலையாளச் சொற்கள் கேரளத்தின் ஆடல் வடிவங்களைக் குறிக்கின்றன. சதங்கக்களி, கைகொட்டிக்களி, ஐவர்களி, பாங்களி, ஏழாமத்துக்களி என நாட்டார் ஆடல் வடிவங்களுக்குப் பெயரிடும் மரபிலேயே கதை ஒன்றினை நடித்துக்காட்டும் நுண்கலையான ஒரு வடிவத்துக்குக் கதகளி எனப் பெயர் ஏற்பட்டது.
கதகளியில் நடனமும், நாடகமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து காணப்படும். ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாது. ஆடல் தூய ஆடலாக இருக்கும். இதனை நிருத்தம் என்று சமற்கிருதத்தில் அழைப்பர். நடனத்தில் அவிநயம் உயிர் போன்றது. கதகளியில் அவிநயம் பெரும்பங்கு வகிக்கிறது. நான்கு வித அபிநயங்களான ஆங்கிக, ஆகார்ய, வாச்சிக, சாத்விக அபிநயங்கள் கதகளியில் இடம் பெறுகின்றன.
ஆங்கிக அபிநயம் என்பது அங்கங்களின் மூலம் செய்யப்படுவதாகும். இந்த அபிநயத்தில் முத்திரைகள் மூலம் ஒரு செய்தியை விளக்குவர். கை அசைவுகள் மட்டுமல்லாமல் முக அசைவிற்கும் கதகளியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இவற்றிற்குக் கடுமையான பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இந்நடனத்தில் கண்களின் அசைவும் தசைகளின் ஒரு அசைவும், கைவிரல்களின் கற்பனைத் திறன் ஆகிய ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருள் கூறுவதாக அமையும். அனைத்து அசைவுகளும் தாளக்கோப்புடன் காணப்படும். இந்த அங்க அசைவு கதகளியின் தனிச்சிறப்பு வாய்ந்த அம்சமாகும். மேலும், கண்கள், உடல் தசைகள், உடம்பின் ஒவ்வொரு பகுதி அசைவும் சிறப்பான ஒன்றாகும்.
ஆகார்ய அபிநயம் என்பது உடையலங்காரம் மற்றும் ஒப்பனையைக் குறிப்பதாகும். இது கதகளிக்கு உயிரூட்டம் தருகிறது. கதகளியில் புராணக் கதைகள் இடம் பெறுவதால், கதாபாத்திரம் ஒப்பனையின் மூலம் தெளிவாக விளக்கப்படும். மற்ற இரண்டும் இவ்வாறே தனிச் சிறப்புடையவை.
கதகளிக்கு மத்தளம், செண்டை, சேமங்கலம், கை இலைத்தாளம் என்கிற பெரியதாளம் ஆகிய இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. செண்டைக் கருவியை இலயத்திற்குப் பயன்படுத்தமாட்டார்கள். அதற்குப் பதிலாகச் செங்கிளை மற்றும் தாளத்தைப் பயன்படுத்துவர்.
கதகளி இரவு நேரம் முழுவதும் திறந்தவெளி அரங்கில் நடைபெறும். கதகளி ஆரம்பிக்கும் முன் இந்நடனம் தொடங்குகிறது என்பதை அரங்கின் முன் நின்று பறை, தாளம், கொட்டி அறிவிப்பர். இரவு ஒன்பது மணிக்கு விளக்கிற்கு முன் வந்து நின்று பறையைச் சிறிது நேரம் வாசித்த பிறகு கதகளி ஆட்டம் தொடங்கும்.
கதகளி குருகுல முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இக்கலையைப் பத்து அல்லது பன்னிரண்டு வயதில் கற்பிக்கத் தொடங்குவார்கள். பயிற்சி விடியற்காலையில் தொடங்கும். தினமும் உடலில் மருத்துவ எண்ணெய் தடவி உடற்பயிற்சி செய்வதால் உடல் எளிமையாக வளைந்து அழகாக அபிநயம் செய்ய முடிகிறது. புருவம், கண், கன்னம், உதடு, தலை, கழுத்துப் போன்றவற்றிற்குத் தனித்தனியாகப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. கண்ணுக்கு மட்டும் சிறப்பாகப் பயிற்சி அளிக்கப்படும். இவர்களுக்கு தமிழ், மலையாளம், சமற்கிருதம் போன்ற மொழிகளிலும், புராணம் பற்றிய அறிவிலும் பயிற்சி இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் முதல்நாள் சொல்லிக் கொடுத்த பயிற்சியைச் சிறப்பாகச் செய்தபிறகு மற்றவை கற்பிக்கப்படும். இரண்டாம் ஆண்டில் சூலி ஆட்டப் பயிற்சி கற்றுக் கொடுக்கப்படும். இதன் நுணுக்கத்தை அறிந்து கொள்ளக் குறைந்தது ஆறு வருடம் ஆகும். இப்பயிற்சிக் காலத்திலே அரங்கில் சிறிய பாத்திரம் ஏற்று நடிப்பர். இவர்களின் பயிற்சி குருவுக்கு மனநிறைவு அளித்த பிறகுதான் முக்கிய கதாபாத்திரம் ஏற்க அனுமதிப்பார்.
· பயிற்சிப் பள்ளி
கதகளி பயிற்சிப் பள்ளிகளில் கலைமண்டலம் என்ற பள்ளி சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இது பாரதபுழை மற்றும் செருதுருத்தி ஆற்றுக்கு இடையில் கொச்சியிலிருந்து 110 கி.மீ தொலைவில் உள்ளது. இதனை அமைத்தவர் வள்ளத்தோள். இங்குக் கதகளி குருகுலமுறைப்படி கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதற்கு மாநில அரசு நிதி உதவி செய்து வருகிறது. மேலும் கலைபாரதி போன்ற பல பள்ளிகள் கேரளத்தில் செயல்பட்டு வருகின்றன.