Primary tabs
-
5.0 பாடமுன்னுரை
தமிழிசை நாட்டிய நாடகங்களில் குறவஞ்சி மிகச் சிறப்பாகப் போற்றப்பட்ட ஒன்றாகத் திகழ்கிறது. பக்தியில் பிறந்து, நாட்டுப் புறத்தாரால் தாலாட்டப்பட்டு, சிற்றிலக்கிய வகையுள் வளர்ந்தது, குறம், குளுவம், குறவஞ்சி என்ற பெயர்களைத் தாங்கி வளர்ந்த நாட்டிய நாடக வகையாகக் குறவஞ்சி விளங்குகிறது. இயலைச் சிறக்க வைத்து, இசையை மணக்க வைத்து நாடகத்தை மிளிர வைத்த முத்தமிழாக விளங்குகிறது. அகவன் மகளாகச் சங்க இலக்கியத்தில் காட்சி தந்து, குறம் என்னும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒருத்தியாகி, குறி சொல்லுதலைக் குறியாகக் கொண்டு, குறத்தி பாட்டாகி, குளுவ நாடகமாகி குறவஞ்சி வளர்ச்சி பெற்றாள். இன்று சுமார் 120-க்கும் மேற்பட்ட குறவஞ்சி நூல்கள் உள்ளன. இவை இறைவன் பெயராலும், தலத்தின் பெயராலும், வள்ளல்களின் பெயராலும் வழங்கப்பட்டு வருகின்றன. பல்வேறு மேடைகளில் அரங்கேறி, பாமர மக்களையும், பண்டிதர்களையும் இவை மகிழ வைத்துள்ளன. நாட்டுப்புறத்தில் உள்ள குறத்தி நடனம் குறவஞ்சியாக மலர்ந்து செவ்வியல் ஆடலும், நாட்டுப்புற ஆடலும் கலந்த ஓர் ஆடல் இலக்கியமாகத் திகழ்கிறது.