Primary tabs
-
5.3 நாட்டிய நாடகம்
குறவஞ்சி இலக்கியம் நாட்டிய நாடகமாக விளங்கி வருகின்றது. இதில் இயல், இசை, நாடகம், நாட்டியம் ஆகியவை இணைந்து திகழ்கின்றன. இவை நாடகத் தன்மையோடு விளங்கும் நாட்டியமாகும்.
நாட்டிய நாடகங்களில் பாத்திர அறிமுகம் முக்கியமானதோர் இடத்தைப் பெறும்; ஆடற்கலை நுட்பங்கள் நிறைந்த பகுதியாக விளங்கும். பாத்திரப் பண்பிற் கேற்ற வகையில் ஆடலமைதிகள் அமைக்கப்பெறும். கதைத் தலைவி அறிமுகம் செவ்வியல் பாங்கு நிறைந்ததாகும். குறத்தி அறிமுகம் நாட்டுப்புறப் பாங்கு நிறைந்த பகுதியாகவும் அமையும்.
நாட்டிய நாடகங்களில் ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு விதமாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
· கட்டியக்காரன்
சில குறவஞ்சிகளில் நாடகத்தை அறிமுகப்படுத்தும் பாத்திரமாகக் கட்டியக்காரன் இடம் பெறுகின்றான். கட்டியக்காரன் அறிமுகம் கூறி உரைத்து நாடகத்தைத் தொடங்குபவனாக விளங்குகிறான்.
முறுக்கிய மீசையும், ஒய்யாரமான கொண்டையும், கையில் பிரம்பும் கொண்டு, அவன் வந்து சபையில் தோன்றி நாடகத்தை அறிமுகம் செய்வான்.
எடுப்பு கட்டியக் காரன்வந் தானே - ஒய்யாரமாகக்
கட்டியக் காரன்வந் தானே
தொடுப்பு
கட்டிய கொண்டை வனப்புறு சென்னியில்
கட்டழகு உருமாவை கட்டிக் கொண்டு நல்ல (கட்டியக்)
வசனம் ராஜாதி ராஜன், ராஜமார்த்தாண்டன்,ராஜ கோலாகலன்
தஞ்சை நகர் ஸ்ரீ சரபோஜி மகாராஜா அவர்கள்
பேரில் குறவஞ்சி நாடகம் பாடி பூர்த்தி
யாகும் பொறும்
ஸ்ரீ மகா கணபதி துதி செய்வோம்
(சரபேந்திர பூபாலக் குறவஞ்சி)· கதைத் தலைவி
கதைத்தலைவி அறிமுகம் மிகச் சிறப்புடன் கூறப்படும். இவள் அறிமுகத்தின் ஆடற்குரிய சொற்கட்டுகள் மிகச்சிறப்புடனும், மிக நுட்பத்துடனும் செவ்வியல் ஆடல் பாங்கில் அமைக்கப்படும். இவளுக்குரிய ஒப்பனைகள் ஆடை அலங்காரங்களாகிய ஆகாரிய கவிநயம் மிகச் சிறப்புடன் எடுத்துரைக்கப்படும்.
குற்றாலக் குறவஞ்சித் தலைவி வசந்தவல்லி தோன்றும் நிகழ்ச்சியைக் கூறும் திரிகூட ராசப்பக் கவிராயர், “பொன்னாலாகிய ஆபரணங்கள் பூட்டிக் கொண்டு, நெற்றிக்குத் திலகம் இட்டுக் கொண்டு, மாரனையும் கண் பார்வையினால் மயங்கச் செய்பவள் போல் தோன்றினாள். உவகைச் சுவைக்கு ஏற்ற அந்த மோகனப் பெண்ணான வசந்தவல்லி தேவலோகத்து ரம்பை போல் வந்தாள். தன்னை ஏறெடுத்துப் பார்ப்பவரின் கண்களுக்குத் தன் இரண்டு கண்களாலும் பதிலைக் குறிப்பால் சொல்பவள் போல் பேரெழிலுடன் வசந்தவல்லி தோன்றினாள். அன்னத்தின் பேடை போல மெல்ல மெல்ல நடை பயின்றிட வந்தாள்" என்கிறார்.
வங்காரப் பூஷணம் பூட்டித் - திலகந்தீட்டி
மாரனைக் கண்ணாலே மருட்டிச்
சிங்கார மோகனப் பெண்ணாள் - வசந்தவல்லி
தெய்வ ரம்பை போலவே வந்தான்.
கண்ணுக்குக் கண்ணிணை சொல்லத் - திரிகூடல்
கண்ணுதலைப் பார்வையால் வெல்லப்
பெண்ணுக்குப் பெண் மயங்கவே - வசந்தவல்லி
பேடையன்னம் போலவே வந்தாள்· வஞ்சி
குறத்தி அறிமுகம் மிகச் சிறப்புடன் அமைக்கப்படும். இவள் வஞ்சிக்கொடி போன்றவள். வார்த்து விட்ட பொன் போன்ற அழகுடையவள். செவ்வழி படர்ந்த விழிகள் எல்லாம் நஞ்சினை உடையவள். முழுமையும் திண்மையான நெஞ்சினை உடையவள். குறும்பலா ஈசனை நெஞ்சிலே உடைய நினைவோடு நன்மை மிகுந்த குறி சொல்ல வருகிறாள். நாட்டுப்புற நடனமாடிக் கொண்டு குறத்தி தோன்றுவாள்.
எடுப்பு
வஞ்சி வந்தனளே
மலைக்குற வஞ்சி வந்தனளே
தொடுப்பு
வஞ்சி எழில்அப ரஞ்சி வரிவிழிநஞ்சி
முழுமற நெஞ்சி பலவினில்
அஞ்சு சடைமுடி விஞ்சை அமலனை
நெஞ்சில் நினைவொடு விஞ்சு குறி சொல (வஞ்சி)
முடிப்பு
வல்லை நிகர்முலை இல்லை எனும் இடை
வில்லை அனநுதல் முல்லை பெருநகை
வல்லிஎன ஒரு கொல்லி மலைதனில்
வல்லி அவளினும் மெல்லி இவள்என· பந்தாடல்
குறவஞ்சியில் பந்தாடல் நிகழ்ச்சி சிறந்த ஆடல் நிகழ்ச்சியாக அமையும். இதற்குத் தகுந்த நிலையில் பாடலமைதியும், இசையமைதியும் தாள அமைதியோடு அமைக்கப்படும். குற்றாலக் குறவஞ்சியில் வசந்தவல்லி பந்தடிக்கிறாள். அப்பொழுது அவளுடைய செங்கையில் உள்ள வளையல்கள் கலீர் கலீர் என்றும் செயம் செயம் என்றும் ஒலி முழங்கின. இவ்வகை ஒலிநயம் மிக்கப் பாடல்கள் ஆடலை அழகுபடுத்தும்.
இவ்வகையில் பந்தாடல் நிகழ்ச்சி இடம்பெறும்.
இவ்வகையில் அமையும் இப்பந்தாடல் பாட்டு நாட்டிய நாடகங்களில் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஆடலுக்கேற்ற இசை மெட்டுடன் அமைக்கப்படும். சுவைஞர்களை ஈர்க்கும் வகையில் அமையும்.