Primary tabs
-
5.4 அரங்கேறிய குறவஞ்சி
தமிழகத்தில் ஆடரங்கு ஏறிய நாட்டிய நாடகங்களில் குறவஞ்சி நாட்டிய நாடகமே அதிகம் ஆகும். தெய்வ வழிபாட்டோடு மிக நெருங்கிய தொடர்புடைய இந்நாட்டிய நாடகங்கள் ஆலயத் திருவிழாக் காலங்களில் ஆடப்பட்டுவந்துள்ளன. பெரும்பாலும் ஆலய வழிபாட்டிற்காகவே இவை படைக்கப்பட்டு அந்த அந்த ஆலயங்களில் ஆடப்பட்டு வந்துள்ளன.
பாபநாச முதலியாரின் கும்பேசர் குறவஞ்சி கும்பகோணத்திலும், வாணிதாச வீர பத்திரக் கவிராயரின் குன்றக்குடி சிவசுப்ரமணியக் கடவுள் குறவஞ்சி குன்றக் குடியிலும், சரபேந்திர பூபாலக் குறவஞ்சி தஞ்சைப் பெருவுடையார் கோயிலிலும், செல்லப்பிள்ளையின் சிதம்பரம் குறவஞ்சி சிதம்பரத்திலும், குமண பாரதியின் சிவன் மலைக் குறவஞ்சி சிவன் மலையிலும் நடைபெற்றுள்ளன.
5.4.1 திருக்குற்றாலக் குறவஞ்சி
குறவஞ்சி நாட்டிய நாடகங்களை மக்களிடம் பரப்பிய பெருமைக்குரியவர்களில் திருமதி ருக்மணி அருண்டேல் அம்மையாரும் ஒருவராவார். அம்மையார் திருக்குற்றாலம் சென்றிருந்த பொழுது திரிகூட ராசப்பக் கவிராயரின் குற்றாலக் குறவஞ்சியின் நுட்பங்களையும் சிறப்புகளையும் கண்டு இதனை ஆடும் முயற்சியில் ஈடுபட்டார். இரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் இப்பணியில் ஈடுபட்டு அம்மையாருக்கு ஊக்கமளித்தார். இதன் முதற்பகுதி செவ்வியல் ஆடலாகவும், பிற்பகுதி நாட்டுப்புற ஆடலாகவும் அமைந்திருந்தமையை அறிந்து மகிழ்ந்தார். டைகர் வரதாசாரியார், வீணை கிரு좮ணமாசாரியார் உதவியோடு குற்றாலக் குறவஞ்சி பாடல்களையும் இசையைமைத்துக் கொண்டார். குறவஞ்சி நாட்டிய மரபினை அறியக் காரைக்கால் சாரதாம்பாள் உதவியையும் பெற்றார். தஞ்சையில் நிலவிய சரபேந்திர பூபாலக் குறவஞ்சி அமைதியையும் அறிந்து கொண்டார். சென்னை கலா சேத்ராவில் தன் மாணவியர்கள் மூலம் 1944ஆம் ஆண்டு திருக்குற்றாலக் குறவஞ்சி நாட்டிய நாடகத்தை அரங்கேற்றினார். இதனைப் பல இடங்களிலும் அரங்கேற்றினார். மக்களை இந்நாட்டிய நாடகம் பெரிதும் கவர்ந்தது.
· விராலிமலைக் குறவஞ்சி
1958இல் சென்னையில் நடைபெற்ற தமிழிசை விழாவில் மதுரை காந்தி இராமகான குழுவினர் விராலிமலைக் குறவஞ்சியை அரங்கேற்றினர். இசைவாணர் வி.வி. சடகோபன் இசை அமைத்திருந்தார். திருமதி. வி. இலட்சுமி காந்தம் நடனம் அமைத்திருந்தார்.
5.4.2 தமிழிசைச் சங்கத்தில் அரங்கேறியவை
சென்னை தமிழிசைச் சங்கத்தில் 1966ஆம் ஆண்டு சென்னை சரசுவதி நிலையக் குழுவினர் அளித்த தியாசேகர் குறவஞ்சி நாட்டிய நாடகம் நடந்தது.
1967இல் தமிழிசைச் சங்க விழாவில் சென்னை நாட்டிய கலாலயத்தினரின் பாபவினாச முதலியார் இயற்றிய கும்பேசர் குறவஞ்சி நாட்டிய நாடகத்தை அரங்கேற்றினர்.
1974ஆம் ஆண்டு தமிழிசைச் சங்கத்தில் திரு.சு. சொக்கலிங்கம் பிள்ளை இயற்றிய சிக்கல் நவநீத ஈசுவரக் குறவஞ்சி அரங்கேற்றம் பெற்றது.
1970இல் வழுவூர் இராமையா பிள்ளை கமலா குழுவினர் மூலம் கலிகுஞ்சர பாரதியார் இயற்றிய அழகர் குறவஞ்சியையும் இதே ஆண்டில் திருமலை ஆண்டாள் குறவஞ்சியையும் 1971இல் ருக்மணி அருண்டேல் அம்மையார் திருவேற்காடு கருமாரி அம்மன் மேல் அமைந்த கிருட்டிணமாரி குறவஞ்சியையும், 1972இல் நிருத்யோதயா இயக்குநர் பத்மா சுப்ரமணியன், திருச்செங்கோட்டு அர்த்தநாரீசுவரர் குறவஞ்சியையும், 1973இல் நாட்டியப் பேராசான் அடையாறு இலட்சுமணன், சென்னை தமிழிசை விழாவில் வருணாபுரிக் குறவஞ்சியையும் அரங்கேற்றினர்.
இன்றும் செவ்வியல் அரங்க மேடைகளில் குறத்தி நடனம் ஆடப்பட்டு வருகிறது.