தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.5-சரபேந்திர பூபாலக் குறவஞ்சி

  • 5.5 சரபேந்திர பூபாலக் குறவஞ்சி

        தொடர்ந்து பல ஆண்டுகளில் மேடையேறிய குறவஞ்சி நாட்டிய நாடகமாகச் சரபேந்திர பூபாலக் குறவஞ்சி திகழ்கிறது. இக்குறவஞ்சி நடந்தேறிய அரங்கம் குறவஞ்சி மேடை என்ற பெயரில் தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்தில் இன்றும் உள்ளது. இக்குறவஞ்சியை ‘அட்டக்கொடி குறவஞ்சி’ என்றும் கூறுவர். இதனை எழுதியவர் சிவக்கொழுந்து தேசிகர் ஆவார். தஞ்சைப் பெரியகோயில் சித்திரைப் பெருவிழாவின் அட்டக்கொடி விழாக்களில் இக்குறவஞ்சி நடைபெற்றதால் அட்டக்கொடிக் குறவஞ்சி என்று பெயர் பெற்றது என்பர்.

        இந்நாட்டிய நாடகம் தஞ்சை மராட்டிய மன்னர்களின் திருமணக் காலங்களிலும், சிறப்புத் தினங்களிலும் தஞ்சை அரண்மனையில் உள்ள சந்திர மௌலீசுவார் ஆலயச் சன்னதியில் நடிக்கப் பெற்றது. 

        தஞ்சை அரண்மனை சங்கீத மேளப் பரம்பரையாரால் இந்நாடகம் தொடர்ந்து 1940ஆம் ஆண்டு வரையிலும் நடத்தப்பெற்றது. பிறகு நின்று விட்டது. 1956இல் சென்னை தமிழிசைச் சங்கத்தில் இந்நாட்டிய நாடகம் நடத்தப் பெற்றது. 1990இல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இந்நாட்டிய நாடகம் நடத்தப் பெற்றது.

    5.5.1 நாட்டிய நாடக அமைப்பு

        சரபேந்திர பூபாலக் குறவஞ்சி ஆறு பெரும் காட்சிகளையும் பல உட்காட்சிகளையும் கொண்டு அமைந்துள்ளது.

    காட்சி - 1

        கட்டியக்காரன் வருகை, கணபதி வருகை, சரபோசி மன்னன் உலா வருவதனைக் கண்ட மதனவல்லி மற்றும் தோழிகள் உரையாடல்.

    காட்சி - 2

        மன்னன் மீது மோகம் கொண்ட மதனவல்லியைத் தோழிகள் வருணித்தல்.

    காட்சி - 3

        மதனவல்லியின் விரகதாபநிலை, பந்தாடல் சீதளோபகாரம், மன்மதனைப் பழித்தல், சந்திரனைப் பழித்தல், தூதுவிடுதல் போல்வன.

    காட்சி - 4

        தூது சென்றவளுக்காக மதனவல்லி காத்திருத்தல். 

    காட்சி - 5

        குறத்தி வருகை, காடு, நகர், மலை, சாதி, வளங்கள் கூறல், மதன வல்லிக்குக் குறி சொல்லுதல்.

    காட்சி - 6

        சிங்கன், சிங்கி உரையாடல்.

    5.5.2 பாத்திரங்கள்

        இந்நாட்டிய நாடகத்தில் கட்டியக்காரன், கணபதி, மதனவல்லி, தோழிகள், குறத்தி, குறவன், குளுவன் என்ற பாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன.

    · பாத்திர அறிமுகம்

        கதைத் தலைவியாகிய மதனவல்லியைச் சபைக்கு அறிமுகம் செய்யும் பகுதி மிகச் சிறப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.

    இராகம் : சௌராட்டிரம்         தாளம் : ஆதி

            பல்லவி

        மோகினி வந்தாள் - அதிரூப     மோகினி வந்தாள்.

    · குறத்தி அறிமுகம்

        குறத்தி குறி சொல்லும் இயல்போடு குறத்தி அறிமுகம் செய்யப்படுகிறாள்.

    இராகம் : பியாகடை         தாளம் : ஆதி

        குறத்தி வருகிறாளம்மா - குறிசொல்லும்
        குறத்தி வருகிறாளம்மா
         தீனுக - தத்திமி - தாகதஜம், ததஜம் கிடதகஜம்  
       தகணக தகஜொணு தாகதாதி ததிமிதகிட தக

    என்று தீர்மானம் தொடர்கிறது.

    5.5.3 பத அமைப்பு

        பதம் என்பது ஆடல் இலக்கிய வகைகளுள் ஒன்றாகும். உவகைச் சுவையுடன் விளங்கும். நாயக நாயகி பாவனையில் அமைந்திருக்கும். பொருளமைதியை வெளிப்படுத்தும் அவிநயப் பகுதிக்குப் பெரிதும் முக்கியத்துவம் தரும்.

        சரபேந்திர பூபாலக் குறவஞ்சியில் வரும் மன்மதனைப் பழித்தல், சந்திரனைப் பழித்தல், தென்றலைப் பழித்தல், குயில், மாலைப் பொழுது ஆகியவற்றை நோக்கிப் பாடல், தூது விடுத்தல் போன்ற பகுதிகள் பத நாட்டிய உருப்படிகளாக உள்ளன.

        காமமிகுதியில் வாடிடும் தலைவி 19 வருடப் பெயர்களைக் கூறி சிலேடையில் அமையும்படி படைக்கப்பட்ட பாடல் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

    இராகம் : பியாகடை         தாளம் : ஏழன்அலகு

        பிரபவனாகிப் பிரஜோர்பத்தி செய்கின்ற
         மன்மதா - இன்று
        பேதையென் றென்னைப் பரிதாபி யாக்கலென்
         மன்மதா

    இவ்வாறு இக்குறவஞ்சி நாட்டிய நாடகம் அமைந்துள்ளது. தொடர்ந்து மேடை ஏறிய நாடகமாக இது விளங்குகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 00:03:57(இந்திய நேரம்)