தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.1-புத்தர்

  • 5.1 புத்தர்


        மனிதராகப் பிறந்து தெய்வமாக உயர்ந்தவர் புத்தர்
    பிரான்
    .     அவர்தம்     செயல்களையும்     கொள்கைக்
    கோட்பாடுகளையும் விளங்கிக் கொள்வதற்கு முன்பு அவர்தம்
    பிறப்பு-வளர்ப்புப் பற்றி அறிந்து கொள்வது அவசியம் ஆகும்.

    5.1.1 பெற்றோர்

        புத்தர் பிரானின் தந்தையார் சுத்தோதனர். இவர் சாக்கிய
    குலத்தைச் சேர்ந்தவர். புத்தரின் தாயார் மாயாதேவி கோலிய
    குலத்தைச் சேர்ந்தவர். புத்தரின் வளர்ப்புத் தாய் பிரஜாபதி.
    இவர் மாயாதேவியின் உடன்பிறந்த தங்கை. புத்தர் பிறந்த ஏழாம்
    நாள் இவரது தாய் மாயாதேவி இறந்து விட்டார். அதன் பின்
    புத்தரின் தந்தை சுத்தோதனர் பிரஜாபதியைத் திருமணம் செய்து
    கொண்டார். இவரே புத்தரை வளர்த்தெடுத்த தாய் ஆவார்.

    ●  மாயாதேவியின் முற்பிறப்பு

        புத்தரின் தாயான மாயாதேவி முற்பிறவியில் ஓர்
    அந்தணரின் மகளாகப் பிறந்திருந்தார். மணம் நிறைந்த சில
    மலர்களை அந்தணர் தன் மகளிடம் கொடுத்தார். அவர்
    அம்மலர்களைப் புத்தர் பிரானுக்கு முன்பே வாழ்ந்திருந்த
    புத்தர்களின் திருவடிகளில் வைத்து வணங்கினார்.

        (பல இலட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறை புத்தர் ஒருவர்
    தோன்றுவார். அதன்படி புத்தர் பிரானுக்கு முன்பே பல
    புத்தர்கள் பிறந்து வாழ்ந்தார்கள்; எதிர்காலத்தில் ஒரு புத்தர்
    பிறக்கப் போகிறார்; இவை பௌத்தர்களின் நம்பிக்கை)

        இதனால் மனம் மகிழ்ச்சி அடைந்த அந்தப் புத்தர்கள்
    அப் பெண்ணிடம், “உன் அடுத்த பிறவியில் புத்தர் ஒருவரைப்
    பெறும் பெருமை உடையவளாக நீ திகழ்வாயாக” என்று
    வாழ்த்தினார்கள்.

        இப்பெண்தான் புத்தர் பிரானின் தாய்; சுத்தோதனரின்
    மனைவி; கோலிய நாட்டு மன்னன் அஞ்சனனின் மகள்.

    ●  மாயாதேவியின் கனவு

        ஒரு நாள் மாயாதேவி ஒரு கனவு கண்டார். அக் கனவு
    இது:

        வெள்ளை யானை ஒன்று தன் துதிக்கையில் வெள்ளைத்
    தாமரை மலர் மாலையை வைத்திருந்தது. அந்த யானை
    மாயாதேவியின் வலது பக்கமாகப் புகுந்து வயிற்றுக்குள் மறைந்து
    கொண்டது.

        இக்கனவை மாயாதேவி தன் கணவரான சுத்தோதனரிடம்
    தெரிவித்தார். அரசிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறக்கப்
    போகிறது என்பதை அந்தணர்கள் மூலம் அரசர் அறிந்து
    கொண்டார்.

    5.1.2 புத்தர் பிறப்பும் வளர்ப்பும்

        குழந்தை பெறும் காலம் நெருங்கி விட்டது. மாயாதேவி
    தன் பெற்றோரின் வீட்டுக்குச் செல்ல விரும்பினார். அதற்கு
    உரிய ஏற்பாடுகளை மன்னர் சுத்தோதனர் செய்ய ஆணை
    இட்டார்.

        மாயாதேவியின் தந்தையும் அரசர்தான். அவர் நாட்டின்
    தலைநகர் தேவதாகா. இந்நகருக்கு மாயாதேவி புறப்பட்டுச்
    சென்றார். ஆனால் அந்நகருக்குச் செல்லும் வழியில் உள்ள
    உலும்பினி என்ற அழகிய பூந்தோட்டத்தில் புத்தர் பிறந்தார்.
    புத்தர் பிறந்த ஆண்டு கி.மு. 563 என்பர்.

    ●  புத்தரின் வளர்ப்பு

        பிறந்த குழந்தையைக் கபிலவஸ்து நகருக்குக் கொண்டு
    வந்தனர்.     சித்தார்த்தன் என்று பெயர் இட்டனர்.
    அரசிளங்குமரனைக் காணப் பலரும் அரண்மனைக்கு வந்தனர்.
    குழந்தையைக் கண்டு மகிழ்ந்தனர். அவ்வாறு வந்தவர்களுள்
    கௌந்தஞ்ஞர் என்பவரும் ஒருவர்.

    ●  காணக் கூடாதவை

        கௌந்தஞ்ஞர், குழந்தையின் உறுப்பு அமைப்புகளை
    உற்றுப் பார்த்தார். இக் குழந்தை முதியவர், நோயாளி, பிணம்,
    துறவி ஆகிய நான்கையும் பார்க்கக் கூடாது; பார்த்தால்
    குழந்தை துறவி ஆகி விடும் என்று இவர் கூறினார். இவற்றைக்
    குழந்தை பார்க்காத வகையில் குழந்தை வளர்வதற்கான
    சூழ்நிலையை அரசர் ஏற்படுத்திக் கொடுத்தார்.

        குழந்தை பிறந்த ஏழாம் நாள் தாய் மாயாதேவி இறந்து
    விட்டார். எனவே, பிரஜாபதி குழந்தையைக் கவனமாக வளர்த்து
    வந்தார்.

    5.1.3 புத்தரின் திருமணம்

        மேலே கூறிய நான்கையும் தன் மகன் பார்த்து விடாமல்,
    துன்பம் இல்லாத சூழ்நிலையில், இன்பம் நிறைந்த சூழ்நிலையில்
    அரசர் குழந்தையை வளர்ந்து வந்தார். சித்தார்த்தர் 19 வயதை
    அடைந்தார்.

         மகன் சித்தார்த்தருக்குத் திருமணம் செய்து வைக்க
    மன்னர் முடிவு செய்தார். அதன்படி தன் சகோதரியின் மகள்
    யசோதையைத் திருமணம் செய்து வைத்தார்.

         புதுமண மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உரிய
    அனைத்து வசதிகளையும் மன்னர் செய்து வைத்தார்.
    அரண்மனை முழுவதும் ஆடலும் பாடலும் நடந்தன. எங்கும்
    இனிய காட்சிகளே தென்பட்டன. சித்தார்த்தர் வாள், வில்
    போன்ற பல பயிற்சிகளும் பெற்றார்.

    5.1.4 புத்தரின் மனமாற்றம்

        அரண்மனைக்குள் சித்தார்த்தர் மகிழ்ச்சியாக வாழ்ந்து
    வந்தார். வெளி உலகைக் காண வேண்டும் என்ற ஆசை
    அவருக்கு ஏற்பட்டது. சன்னன் என்னும் தேர்ப்பாகன் தேர்
    ஓட்ட நகரத்தைச் சுற்றிப் பார்த்தார்.

         அப்பொழுது எந்த நான்கைப் பார்க்கக் கூடாது என்று
    அரசர் தன் மகனைக் கவனமாக வளர்த்து வந்தாரோ அவற்றைச்
    சித்தார்த்தர் பார்த்து விட்டார்.

         ஆம்! முதியவர், நோயாளி, பிணம், துறவி ஆகிய
    நான்கினையும் சித்தார்த்தர் கண்டார். இவை இவருக்குப்
    புதுமையானவை. இவை அவரது சிந்தனையைத் தூண்டின.
    இவை பற்றிய விளக்கங்களைச் சந்தகன் எனும் நண்பனிடம்
    கேட்டுத் தெளிவு பெற்றார்.

         எனவே, இல்லற வாழ்வில் இருந்து விலகித் துறவற
    வாழ்வில் ஈடுபட அவர் மனம் பெரிதும் விரும்பியது.

    5.1.5 புத்தரின் துறவு

        துறவில் ஈடுபட மனம் விரும்பிய நிலையில் புத்தருக்கு
    மகன் பிறந்தான். தன் மகனுக்கு இராகுலன் என்று அவர்
    பெயரிட்டார். ஆயினும் முன்பு அவர் கண்ட நான்கு காட்சிகளும்
    அவர் மனத்தில் திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருந்தன.
    எனவே, துறவு மேற்கொள்வது என முடிவு செய்தார்.

         ஒரு நாள் நள்ளிரவில் சந்தகன் உதவியுடன் கந்திகம்
    என்ற வெள்ளைக் குதிரை மீது ஏறி அரண்மனையை விட்டு
    வெளியேறினார். கோலிய நாட்டில் இருக்கும் அநோம நதிக்
    கரையை அடைந்தார். தன் ஆடை, அணிகலன்களைக் கழற்றித்
    தன்னுடன் வந்த சந்தகனிடம் கொடுத்தார். ‘குதிரையும் நீயும்
    கபிலவஸ்து நகருக்குத் திரும்பிச் செல்லுங்கள்; நான் துறவு
    பூண்டதை மன்னனிடம் சொல்லுங்கள்’ என்று கூறினார்.

         சித்தார்த்தர் தமது 29ஆம் வயதில் துறவு பூண்டார்.
    அவருக்குக் குழந்தை பிறந்த ஏழாம் நாள் அவர் துறவு பூண்டார்
    என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

    5.1.6 புத்தர் ஞானம் பெறல்

        துறவு மேற்கொண்ட சித்தார்த்தர் முனிவர்கள் சிலரைச்
    சந்தித்தார். அவர்களிடம் ஆன்மா பற்றியும், ஆன்மாவிற்கும்
    அகந்தைக்கும் உள்ள தொடர்பு பற்றியும் கேட்டு அறிந்தார்.
    ஆயினும் அவருக்கு மன நிறைவு ஏற்படவில்லை.

         மக்களின் துயரைப் போக்கும் வழிகளைக் கண்டறியவே
    அவர் மனம் விரும்பியது. அதனால் உருவலோ காட்டில் ஆறு
    ஆண்டுகள் கடும் தவம் செய்தார்.

    ●  சுஜாதை

        உருவலோக் காட்டின் அருகில் சேனானி என்ற கிராமம்
    இருந்தது. அந்த ஊரில் இருந்த ஆலமரத்தடியில் புத்தர்
    அமர்ந்திருந்தார். அப்பொழுது அங்கு சுஜாதை என்ற பெண்
    வந்தாள்.

         அவள் தனக்கு நல்ல கணவன் அமைந்து முதல்
    குழந்தையும் ஆண் குழந்தையாகப் பிறக்க வேண்டும், அவ்வாறு
    அமைந்தால் ஆலமரக் கடவுளுக்கு (ஆலமரத்தின் கீழ்
    இருக்கும் கடவுளுக்கு)ப் பாயசம் படையல் செய்வதாக
    வேண்டுதல் செய்திருந்தாள். அவளின் எண்ணம் நிறைவேறி
    விட்டது. எனவே, பாயசம் படையலிடுவதற்காக அங்கு வந்தாள்.
    சித்தார்த்தரைக் கண்ட சுஜாதைக்கு அவரே ஆலமரக்
    கடவுளாகத் தோன்றினார். எனவே, அவள் பாயசத்தை அவரிடம்
    கொடுத்துப் பருகுமாறு வேண்டிக் கொண்டாள்.

    ●  பாயசம் பருகல்

        சுஜாதை கொடுத்த பாயசத்தை எடுத்துச் சென்று ஓர்
    அரச மர நிழலில் கிழக்குத் திசை நோக்கி அமர்ந்தார். வேறு
    உணவு எதையும் சாப்பிடாமல் 49 நாட்கள் பாயசம் மட்டுமே
    பருகினார். பருகிய பிறகு ‘நான் புத்த பதவி அடைவது
    உறுதியானால், இந்தப் பாத்திரம் நீரோட்டத்திற்கு எதிராகச்
    செல்லட்டும்’ என்று கூறிக்கொண்டு ஆற்று நீரில் பாத்திரத்தை
    எறிந்தார். அப்பாத்திரம் நீரோட்டத்தை எதிர்த்து வந்தது.

    ●  போதி ஞானம்

        இவ்வாறு அவர் அன்று பகலில் பத்திர வனத்தில் தங்கி,
    தான் புத்த பதவி அடைவது உறுதி எனத் தெளிந்த பிறகு
    அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுப் போதி மரம் (அரச மரம்)
    இருக்கும் இடத்திற்குச் சென்றார். இதுவே தகுந்த இடம்
    என்பதை உணர்ந்து, “உடம்பில் உள்ள தோல், சதை, இரத்தம்,
    நரம்பு, எலும்பு முதலியவை உலர்ந்து வற்றிப் போனாலும் நான்
    புத்த பதவியை அடையாமல் இந்த இடத்தை விட்டு எழுந்திருக்க
    மாட்டேன்” என்ற உறுதியான எண்ணத்துடன் அரசமரத்தில்
    முதுகை வைத்து, கிழக்கு நோக்கி அமர்ந்து, கணக்கற்ற புத்த
    குணங்கள் நிறைந்த போதி ஞானத்தைப் பெற்றார்.

         அவர் தமது 35ஆம் வயதில் போதி ஞானம் பெற்றார்.
    அன்று முதல் அவர் புத்தர் என்று அழைக்கப்பட்டார். அவரது
    80ஆம் வயதில் அதாவது கி.மு.483இல் மகா பரிநிர்வாணத்தை
    அடைந்தார். அவர் வெளியிட்ட கருத்துகள் பலரையும்
    கவர்ந்தன. சிலர் அவருடைய சீடர்களாக மாறித் துறவு
    மேற்கொண்டார்கள். அவர்கள் புத்த பிட்சுக்கள் (பிக்குகள்)
    என்று அழைக்கப்பட்டார்கள். புத்தர் கூறிய கருத்துகளும்
    கொள்கைகளும் புத்த மதம் என்ற பெயரில் பரவத் தொடங்கின.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:40:22(இந்திய நேரம்)