தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.2-புத்தர் வழிபாடு

  • 5.2 புத்தர் வழிபாடு


        மாணவர்களே! புத்தரின் வாழ்க்கை வரலாற்றைச்
    சுருக்கமாகத் தெரிந்து கொண்டீர்கள். இப்பொழுது புத்த மதம்
    தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்றதையும் தமிழ்நாட்டு மக்கள் புத்தரை
    வழிபட்டமையையும் தெரிந்து கொள்ளலாம்.

    5.2.1 தமிழ்நாட்டில் பௌத்த மத வளர்ச்சி

        புத்தர் பரிநிர்வாணம் (மோட்சம்) அடைந்த பிறகு அவரது
    கொள்கைகளைப் பல நாடுகளிலும் பரப்புவதற்குப் பிக்குகள்
    பல்வேறு நாடுகளுக்குச் சென்றனர். தமிழ்நாட்டிற்கு வந்த பிக்குகள்
    அரசர், வணிகர், செல்வந்தர் முதலானவர்களிடம் பொருளுதவி
    பெற்றனர். அப்பொருளைக் கொண்டு பௌத்த விகாரைகள்
    (துறவியர் தங்கும் இடம்), பள்ளிகள் (கல்வி, மருந்து, உணவு
    வழங்கும் இடம்), சேதியங்கள் (வழிபாட்டு இடம்) ஆகியவற்றைப்
    பல இடங்களில் அமைத்தனர்.

    ●  சமூகப் பணி

    • பௌத்த மடங்களில் வாழ்ந்த பௌத்தத் துறவிகள்
      தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவம்
      செய்தனர்.
    • தமது பௌத்தப் பள்ளிகளில் பாட சாலைகளை அமைத்துக்
      கல்வி கற்றுக் கொடுத்தனர்.
    • குருடர்,     செவிடர், முடவர் முதலானவர்களுக்கும்
      ஏழைகளுக்கும் உணவு கொடுத்து உதவினர்.

        இவை போன்ற பௌத்தப் பிக்குகளின் செயல்களால்
    அம்மதம் தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்தது.

    5.2.2 தமிழகத்தில் பௌத்தம் சிறப்புற்றிருந்த இடங்கள்

        பௌத்த மதம் கி.மு.3ஆம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு
    வந்தது; இம்மதத்தை இங்குப் புகுத்தியவர் அசோக மன்னரும்
    அவரது மகனாகிய மகேந்திரரும் ஆவர். இம் மதம் தமிழகத்தில்
    பல இடங்களில் சிறப்புற்றிருந்தது. அவ்விடங்களில் சில:

        காவிரிப் பூம்பட்டினம், கும்பகோணம், மயூரப் பட்டணம்,
    நாகைப்பட்டினம், காஞ்சிபுரம், பல்லாவரம், மதுரை, அரிட்டாபட்டி,
    தஞ்சை, அழகர் மலை, சித்தர் மலை, குன்னக்குடி, ஆனை
    மலை, திருச்சிராப்பள்ளி.

        (இச் செய்தியை மேலும் விரிவாக அறிந்து கொள்ள
    விரும்புவோர் தமிழ் இணையப் பல்கலைக்கழக மின் நூலகத்தில்
    இடம் பெற்றுள்ள பௌத்தமும் தமிழும் என்ற நூலைப்
    பார்க்கவும்.)

    5.2.3 புத்தர் வழிபாடு - சைத்தியம்

        இனிய மாணவர்களே! தமிழகத்தில் புத்தர் வழிபாடு
    நடைபெற்ற முறைகளைப் பற்றி இப்பொழுது தெரிந்து கொள்ளப்
    போகிறீர்கள்.

    ●  சாரீரக சைத்தியம்

        பௌத்த மதத்தின் உயர்ந்த தெய்வம் புத்தர். அவர்
    நிர்வாண மோட்சம் அடைந்த பிறகு அவருடைய உடம்பை
    எரித்து அதில் எஞ்சிய எலும்பு, சாம்பல் ஆகியவற்றை எட்டுப்
    பங்காக்கினர். ஒவ்வொரு பங்கையும் ஒவ்வோர் ஊரில் கொண்டு
    போய் புதைத்தனர். புதைத்த இடத்தில் சேதியங்களைக்
    கட்டினார்கள். புத்தருடைய     தலைமயிர், நகம், பல்
    முதலியவற்றையும் சேமித்தனர். அதன் மேலும் சேதியங்களைக்
    கட்டினர். இச் சேதியங்களுக்குச் சாரீரக சைத்தியம் (சேதியம்)
    என்று பெயர். பௌத்தர்கள் தொடக்கத்தில் இச் சேதியங்களை
    வணங்கினர். (சைத்தியம், சேதியம் என்னும் சொற்கள் பௌத்தர்
    கோயிலைக் குறிக்க வழங்குவன ஆகும்.)

    ●  பாரிபோக சைத்தியம்

        புத்தர் உபயோகித்த பொருள்களான கைத்தடி, ஆடை,
    பாத்திரம், மிதியடி முதலிய பொருள்களையும் பௌத்தர்கள்
    சேமித்து வைத்தனர். புத்தரின் நினைவாக இவற்றை வணங்கும்
    வழக்கமும் ஏற்பட்டது. அதுபோல் புத்த கயாவில் புத்தர் போதி
    ஞானம் பெற்ற அரசமரத்தை வணங்கும் வழக்கமும் இருந்தது.
    இவை பாரிபோக சைத்தியம் என்று பெயர் பெற்றன.

    5.2.4 புத்தர் வழிபாடு - பீடிகை

        புத்தர் பரிநிர்வாணம் பெற்றுச் சில நூற்றாண்டுகள் வரை
    அவருக்கு உருவம்     அமைத்து     வழிபடும்     வழக்கம்
    பௌத்தர்களிடம்     கிடையாது. ஆனால், தரும பீடிகை,
    பாத பீடிகை
    ஆகியவை அமைக்கப்பட்டு அவை பௌத்தர்களால்
    வணங்கப்பட்டன.

    தரும பீடிகை
    -
    சக்கரம் போன்ற வடிவினது.
    பாத பீடிகை
    -
    புத்தரின் பாதம் போன்ற வடிவினது.

        இங்ஙனம் சேதியங்களையும், பீடிகைகளையும் தொடக்க
    காலத்தில் பௌத்தர்கள் வணங்கினர். சில நூற்றாண்டுகளுக்குப்
    பிறகு புத்தரின் உருவங்களை அவர்கள் வணங்கத் தொடங்கினர்.
    புத்தரின் உருவங்களைக் கல், சுதை (சுண்ணாம்பு), செம்பு முதலிய
    பொருள்களால் அமைத்து வணங்கினர்.

    5.2.5 சிறு தெய்வ வழிபாடு

        பௌத்தர்கள் புத்தரின் உருவங்களை வணங்கியதோடு,
    வேறு சில பௌத்தச் சிறு தெய்வங்களையும் வணங்கினார்கள்.
    அவை:

    மணிமேகலை
    -
    கடல் தெய்வம். சமுத்திர மணிமேகலை,
    முதுமணிமேகலை
    என்றும் கூறப்படுகிறது.
    சம்பாபதி
    -
    தரைக்காவல் தெய்வம். முந்தை முதல்வி,
    முதுமூதாட்டி, தொன்மூதாட்டி, முதியாள்,
    அருந்தவ முதியோள், சம்பு, கன்னி,
    குமரி, பிடாரி
    என்ற பெயர்களும் உண்டு.
    கந்திற் பாவை
    -
    இரட்டைத் தெய்வங்களின் உருவங்கள்.
    துவதிகன், ஓவியச் சேனன் அல்லது
    சித்திரச் சேனன்
    என்ற பெயர்களாலும்
    அழைக்கப் படுகிறது.
    சதுர் மகாராஜிகர்
    -

    திசைக் காவல்     தெய்வம். நான்கு
    திசைகளையும் காவல் காப்பவை நான்கு
    தெய்வங்களாம் அவை:

    திருதராட்டினன்
    -
    கிழக்கு
    விரூளாட்சன்
    -
    மேற்கு
    விரூதாட்சன்
    -
    தெற்கு
    வைசிரவணன்
    -
    வடக்கு

    சக்கன்
    -
    விண்ணுலகத் தெய்வம். இந்திரன் என்பர்.
    சிறு தெய்வங்களின் தலைவன். இந்த
    இந்திரனும் வைதிக மதத்தார் கூறும்
    இந்திரனும் வேறானவர்கள்.
    அவலோகிதர்
    -
    அறநெறித் தெய்வம். உலகநாதர், போதி
    சத்துவர்
    என்ற பெயர்களும் உண்டு. மேலே
    கூறிய சிறு தெய்வங்கள் அனைத்திற்கும்
    மலோனது;     ஆனால்,     புத்தருக்குக்
    கீழ்ப்பட்டது.

    தன்மதிப்பீடு : வினாக்கள் - I

    (1)
    புத்தரின் பெற்றோர் யாவர்?
    (2)
    மாயாதேவி கண்ட கனவு யாது?
    (3)
    குழந்தை துறவு மேற்கொள்ளும் என்று கூறியவர்
    யார்?
    (4)
    புத்தர் கண்ட காட்சிகள் யாவை?
    (5)
    இருவகைச் சைத்தியங்கள் யாவை?
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:40:25(இந்திய நேரம்)