தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 2.0 பாட முன்னுரை

        மின்னணுத் தொழில்புரட்சிக்குப் பின் அனைத்துத் தொழில்துறைகளும் மின்னணு மயமாக்கப்பட்டு வருகின்றன. மின்னணுத் தொழில்புரட்சியின் ஊற்றுக் கண்களாக விளங்குபவை கணிப்பொறியும், கணிப்பொறிப் பிணையங்களும், இணையமும் ஆகும். எனவே கணிப்பொறி, கணிப்பொறிப் பிணையங்கள் மற்றும் இணையம் வழியாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைத்துக்கும் ‘மின்னணு’ என்கிற அடைமொழி சேர்க்கப்பட்டது. நாளடைவில் ‘மின்னணு’ என்னும் அடைமொழி ‘மின்’ (e) என்னும் முன்னொட்டாகச் (prefix) சுருங்கிச் சொற்களில் ஒட்டிக் கொண்டது. இணையம் வழியாக நடைபெறும் கடிதப் போக்குவரத்து ‘மின்னஞ்சல்’ (e-mail) எனப்பட்டது. இணையத்தில் வெளியிடப்படும் புத்தகம் ‘மின்னூல்’ (eBook) என்றும் இதழ்கள் ‘மின்னிதழ்கள்’ (eZines) என்றும் அழைக்கப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாகக் கணிப்பொறிப் பிணையங்கள் வழியாக மேற்கொள்ளப்படும் அரசு நிர்வாகம் ‘மின் அரசாண்மை’ (eGovernance) என்று அறியப்படுகிறது. இதனடிப்படையிலேயே கணிப்பொறிப் பிணையங்கள் அல்லது இணையம்வழி மேற்கொள்ளப்படும் வணிக நடவடிக்கைகள் ‘மின்வணிகம்’ (eCommerce) என்று அழைக்கப்படலாயிற்று.

        மின்வணிகம் இரு நிறுவனங்களுக்கு இடையே அல்லது வணிக நிறுவனத்துக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே நடைபெறலாம். இரு வாடிக்கையாளர்களுக்கு இடையேயும் விற்றல், வாங்கல் இருக்க முடியும். மின்வணிக நடவடிக்கை தனிப்பட்ட கணிப்பொறிப் பிணையங்கள் வழியாகவோ, இணையம் வழியாகவோ, செல்பேசி வழியாகவோ மேற்கொள்ளப்படுகிறது. மின்வணிகத்தில் பல்வேறு முறைகளில் பணம் செலுத்தப்படுகிறது. கடன் அட்டை மூலம் பணம் செலுத்தும் முறை பரவலாகக் காணப்படுகிறது.

        மின்வணிகம் மதிப்பேற்று பிணையம் எனப்படும் தனிப்பட்ட கணிப்பொறிப் பிணையம் வழியே தொடங்கிற்று. அதன் வழியே நடைபெற்ற வணிகத் தகவல் பரிமாற்றம் ‘மின்னணுத் தகவல் பரிமாற்றம்’ (Electronic Data Interchange) எனப்பட்டது. மரபு ரீதியான தாள்வழித் தகவல் பரிமாற்றத்தைவிட மின்னணுத் தகவல் பரிமாற்றம் பலவகையிலும் பயனுள்ளது. மதிப்பேற்று பிணையம் வழியே தொடங்கிய மின்வணிகம் இணையத்தின் வளர்ச்சிக்குப்பின் ‘இணைய வணிகமாய்’ உலக முழுவதும் பெரும் வளர்ச்சி பெற்றது. பல்லாயிரக் கோடி டாலர் மின்வணிகத்தில் புரள்கிறது. மின்வணிக வளர்ச்சிக்குச் சவாலாக இருப்பவை தகவல் பரிமாற்றத்தின் பாதுகாப்பும், சட்டச் சிக்கல்களும் ஆகும். இந்தியாவில் மின்வணிக வளர்ச்சி சற்று மெதுவாகவே நடைபெறுகிறது. அதற்குப் பண்பாட்டு ரீதியான பல காரணங்கள் உள்ளன. முளைவிட்ட காலத்திலேயே தமிழ்நாட்டிலும் மின்வணிகம் அறிமுகம் ஆனது. மின்வணிகம் பற்றிய மேற்கண்ட தகவல்கள் அனைத்தையும் இப்பாடத்தில் விரிவாகக் காண்போம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:29:21(இந்திய நேரம்)