Primary tabs
2.1 மின்வணிகமும் அதன் வகைப்பாடுகளும்
வணிகம் என்பது என்ன? ஒரு பொருள் அல்லது சேவையை இலாப நோக்கோடு விற்பனை செய்வதும், நுகர்தற் பொருட்டு அப்பொருள் அல்லது சேவையைப் பணம் கொடுத்து வாங்குவதும் சேர்ந்து ‘வணிகம்’ எனப்படுகிறது. இந்த வணிக நடவடிக்கை இருவருக்கிடையே நேருக்கு நேர் நடைபெறலாம். அப்படி நடைபெறுமானால் பொருளை வாங்குவதும் பணத்தைக் கொடுப்பதும் உடனுக்குடன் நடந்து முடிந்து விடுகின்றன. வேறெந்தத் தகவல் பரிமாற்றத்துக்கும் தேவையில்லாமல் போகிறது. விற்பவரும் வாங்குபவரும் வெவ்வேறு இடங்களில் இருக்கும்போது இருவருக்கும் இடையே பொருளை வாங்குவதற்கான விழைவைத் தெரிவித்தல், பொருளின் விலையைத் தெரிவித்தல் போன்ற தகவல் பரிமாற்றங்களோடு பொருளுக்கான விலையைச் செலுத்துகின்ற பணப் பரிமாற்றமும் நடைபெற்றாக வேண்டும். இப்பரிமாற்றங்கள் அஞ்சல் வழியாகவோ, ஆள் மூலமோ, தொலைபேசி வழியாகவோ நடைபெற்றால் அது மரபுவழி வணிகம் ஆகும். கணிப்பொறிப் பிணையங்கள் வழியாக மின்னணுத் தகவல் வடிவில் நடைபெறுமாயின் அது ‘மின்வணிகம்’ எனப்படுகிறது. யார் யாருக்குடையே வணிகம் நடைபெறுகிறது என்பதன் அடிப்படையிலும், எத்தகைய கணிப்பொறிப் பிணையம் வழியாகத் தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது என்பதன் அடிப்படையிலும் மின்வணிகத்தை வகைப்படுத்தலாம். இத்தகைய வகைப்பாடுகள் பற்றியும், மின்வணிகத்தில் பணம் செலுத்துகை எந்தெந்த வடிவங்களில் நடைபெறுகிறது என்பது பற்றியும் இப்பாடப் பிரிவில் அறிந்து கொள்வோம்.்
2.1.1 வணிகத்தில் ஈடுபடுவோர்
ஒரு வணிக நடவடிக்கையில் பங்கு கொள்வோர் யார் யார் என்பதைக் கொண்டு மின்வணிகத்தை நான்கு வகையாகப் பிரிக்கலாம்:
(1) வணிக நிறுவனங்களுக்கு இடையே - பி2பி (Business to Business - B2B):
இரண்டு வணிக நிறுவனங்கள் தமக்குள்ளே பொருள்களை விற்றல், வாங்கல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம். இத்தகைய வணிக நடவடிக்கை பெரும்பாலும் மொத்த விற்பனை அல்லது இயந்திர சாதனங்களின் விற்பனை தொடர்பானதாக இருக்கும். இந்த வணிக நடவடிக்கை, விற்பனை தொடர்பான தகவல் பரிமாற்றம், பணம் செலுத்துகை மற்றும் பொருள் வினியோகம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும். இத்தகைய மின்வணிகத்தில்தான் அதிகமான பணம் புழங்குகிறது
(2) வணிக நிறுவனம் நுகர்வோருக்கு இடையே - பி2சி (Business to Consumer - B2C):
ஓர் இணைய அங்காடியில் நுகர்வோராகிய பொதுமக்கள் பொருள் அல்லது சேவையை விலைகொடுத்து வாங்கும் வணிக நடவடிக்கையைக் குறிக்கிறது. இது பெரும்பாலும் சில்லரை விற்பனையை அடிப்படையாகக் கொண்டதாகும். குழந்தைகளுக்கான பொம்மை முதல் கணிப்பொறி வரை பல்வகையான பொருட்களை வாங்குதல், திரைப்படத்துக்கு அனுமதிச் சீட்டுப் பதிவு செய்தல், பேருந்து, இரயில், விமானப் பயணச் சீட்டு முன்பதிவு செய்தல், தங்கும் விடுதிகளில் அறை முன்பதிவு செய்தல், கட்டணம் செலுத்தி இணையம்வழி திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்த்தல் போன்றவையும் இந்த வகைப்பாட்டில் அடக்கம். இத்தகு மின்வணிகம் நாள்தோறும் புதிய பரிமாணங்களை எடுத்து வருகிறது.
(3) நுகர்வோர்களுக்கிடையே - சி2சி (Consumer to Consumer - C2C):
ஒருவர் தன்னிடமுள்ள புதிய அல்லது பயன்படுத்திய ஒரு பொருளை விற்க விரும்பலாம். அதேபோல ஒருவர் கடையில் கிடைக்காத ஒரு பொருள் அல்லது பயன்படுத்திய பொருளை வாங்க விரும்பலாம். இவர்களுக்கென தனிச்சிறப்பான ‘ஏல வலையகங்கள்’ (Auction Websites) உள்ளன. விற்போரும் வாங்குவோரும் இத்தகு வலையகங்களில் தம் விருப்பங்களை வெளியிடலாம். பொருள் வாங்க விரும்புவோர் ஏல முறையில் வாங்க விரும்பும் விலையைக் குறிப்பிடலாம். கட்டுபடியாகும் விலை தருபவர்க்குப் பொருள் விற்கப்படும். வாங்குபவரின் முகவரிக்குப் பொருள் உரிய முறையில் அனுப்பி வைக்கப்படும். விற்பவரும், வாங்குபவரும் ஏல வலையகத்துக்கு ஒரு சிறு தொகையைக் தரகுப்பணமாகச் செலுத்த வேண்டும். பழைய அரிய புத்தகங்கள், புகைப்படங்கள், புராதன மதிப்புள்ள அரிய கலைப் பொருட்கள், பதிவு செய்து பயன்படுத்தப்படாத வலையகப் பெயர்கள் போன்றவை இணைய ஏல அங்காடிகளில் விற்கப்படுகின்றன.
(4) நிறுவனத்தின் அகநிலை வணிகச் செயல்பாடுகள் - பிஐ (Business Internal):
ஒரு வணிக நிறுவனம் தன் கிளை நிறுவனங்கள் மற்றும் சார்பு நிறுவனங்களுடன் மேற்கொள்கின்ற அகநிலை வணிகத் தகவல் பரிமாற்றங்களைக் குறிக்கிறது. இதனை மெய்யான பொருளில் மின்வணிகம் எனப் பாகுபடுத்த முடியாது எனினும், கணிப்பொறிப் பிணையங்களின் வழியாக நடைபெறும் வணிக நடவடிக்கை என்பதால், மின்வணிக நடவடிக்கையாக வகைப்படுத்துவதில் பிழையில்லை.
2.1.2 வணிக நடவடிக்கையின் ஊடகம்
மின்வணிகத் தகவல் பரிமாற்றம் எதன்வழியாக நடைபெறுகிறது என்பதன் அடிப்படையில் மின்வணிகத்தை மூன்றாக வகைப்படுத்தலாம்:
(1) மதிப்பேற்று பிணையங்கள் (Value Added Networks) வழியாக:
அரசு அல்லது தனியார் துறையில் நிறுவப்பட்டுள்ள மதிப்பேற்று பிணையங்கள் வழியாக நடைபெறும் வணிகம் தொடர்பான மின்னணுத் தகவல் பரிமாற்றங்களே தொடக்க காலத்தில் ‘மின்வணிகம்’ (e-commerce or e-business) என்று அழைக்கப்பட்டது. மின்னணுத் தகவல் பரிமாற்றம் பற்றி விரிவாக அடுத்துவரும் பாடப்பிரிவில் படிக்க இருக்கிறோம்.
(2) இணையம் (Internet) வழியாக:தற்காலத்தில் ’மின்வணிகம்’ என்றாலே இணையம்வழி நடைபெறும் வணிகம் என்றே புரிந்து கொள்கிறோம். ஆனால் இணையம் அல்லாத ஊடகங்கள் (கணிப்பொறிப் பிணையங்கள்) மூலமாகவும் மின்வணிகம் நடைபெற முடியும் என்பதே உண்மை. இணையத்தின் தொடக்க காலங்களில் ‘இணையம்வழி மின்வணிகம்’ (Internet Commerce), ‘இணைய வணிகம்’ (i-commerce or i-business) என வேறுபடுத்தியே அறியப்பட்டது. என்றாலும் கணிப்பொறி, கணிப்பொறிப் பிணையம், இணையம் வழியாக நடைபெறும் அனைத்து வணிக நடவடிக்கைகளும் ‘மின்வணிகம்’ அல்லது சுருக்கமாக ‘இ-காம்’ (e-com) என்று அழைக்கப்படுவது உலக வழக்காகிவிட்டது.
(3) செல்பேசி (Cellphone) வழியாக:ஒரு கணிப்பொறி வழியாக இணையத்தை அணுகி நிறைவேற்றிக் கொள்ளப்படும் அனைத்துப் பணிகளையும் இக்காலத்தில் செல்பேசி வழியாகவும் நிறைவேற்றிக் கொள்ள முடியும். செல்பேசி மூலமே இணையத்தில் உலா வரலாம். மின்னஞ்சல் பார்வையிடலாம். வணிக நடவடிக்கைகளில் ஈடுபடலாம். இவ்வாறு செல்பேசி வழியாக நடைபெறும் வணிகம் ‘நடமாடும் வணிகம்’ (mobile commerce) அல்லது சுருக்கமாக ‘எம்-காமர்ஸ்’ அல்லது ‘எம்-பிசினஸ்’ என்று அழைக்கப்படுகிறது. செல்பேசி வழியாகவே இணைய அங்காடிகளில் பொருள்களைத் தேர்ந்தெடுத்து வாங்குவது மட்டுமல்ல, பொருளுக்கான பணத்தையும் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத் தக்க செய்தியாகும்.
2.1.3 மின்வணிகத்தில் பணம் செலுத்துகை
மின்வணிகத்தில் ஒரு பொருள் அல்லது சேவையை வாங்கும்போது அதற்கான விலை அல்லது கட்டணம் பணமாகச் செலுத்தப்பட வேண்டும். வாங்குபவர் செலுத்தும் பணம் விற்பனையாளருக்குச் சென்று சேர வேண்டும். மின்வணிகத்தில் பல்வேறு முறைகளில் பணம் செலுத்தப்படுகிறது. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்:
(1) காசோலை அல்லது வரைவோலை (Cheque or Demand Draft):
மின்வணிகத்தில் காசோலை அல்லது வரைவோலை மூலம் பணம் செலுத்தும் மரபுவழி முறையும் புழக்கத்தில் உள்ளது. இணையம்வழி பொருளைத் தேர்ந்தெடுத்து விலை முடிவாகிக் கொள்முதல் கோரிக்கை (Purchase Order) சமர்ப்பிக்கப்பட்ட பின் அதற்குரிய பணத்தைக் காசோலை அல்லது வரைவோலையாக விற்பனை நிறுவனத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அது கிடைக்கப் பெற்றவுடன் பொருள் அனுப்பி வைக்கப்படும்.
(2) வினியோகத்தின்போது பணம் (Cash on Delivery):இணைய அங்காடியில் வாங்க விரும்பும் பொருளைத் தேர்ந்தெடுத்துத் தெரிவித்தவுடன் பொருள் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். பொருளைப் பெற்றுக் கொள்ளும்போது அதற்குரிய பணத்தைச் செலுத்தினால் போதும். தொடக்க காலங்களில் இணையம்வழி நடைபெற்ற சில்லரை விற்பனைகளில் இந்த முறையே பின்பற்றப்பட்டது. இப்போதும் புழக்கத்தில் உள்ளது.
(3) கடன் அட்டை (Credit Card):மின்வணிகத்தில் கடன் அட்டை மூலம் பணம் செலுத்தும் முறையே பெருவழக்கில் உள்ளது. இணையம்வழிப் பணம் செலுத்துகை யில் கடன் அட்டையின் உரிமையாளர் பெயர், கடன் அட்டையின் எண், கடன் அட்டையின் காலக்கெடு போன்ற விவரங்களைத் தர வேண்டியிருக்கும். இணைய விற்பனையாளர்களுக்கு மிகவும் உகந்த முறை இதுவே என்பதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம்: ஒன்று, வாடிக்கையாளர் வங்கிக் கணக்கிலோ, கையிலோ பணம் இல்லாத போதும் பொருள்களை வாங்க முன்வருவார். இரண்டாவதாக, கடன் அட்டை வழங்கிய வங்கியிடமிருந்து விற்பனையாளருக்குப் பணம் கிடைத்துவிடும். வாடிக்கையாளரிடம் பணம் வசூல் செய்ய வேண்டிய பொறுப்பு அட்டை வழங்கிய வங்கியைச் சேர்ந்தது. எனவே பெரும்பாலான மின்வணிக விற்பனை நிறுவனங்கள் கடன் அட்டை மூலம் பணம் செலுத்தும் முறையை மட்டுமே அனுமதிக்கின்றன.
(4) பற்று அட்டை (Debit Card):கடன் அட்டை மூலம் பணம் செலுத்தும் முறையைப் போன்றதே இதுவும். ஆனால் பற்று அட்டையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் போதுமான அளவு பணம் இருப்பு இருக்க வேண்டும். இணையம்வழிப் பணம் செலுத்தியவுடனே வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கு இருப்பில் அத்தொகை கழிக்கப்பட்டுவிடும். வங்கிக் கணக்கில் பணம் இருக்கும்வரை பொருள் வாங்க முடியும்.
(5) பண அட்டை (Cash Card):சில வங்கிகள் இத்தகைய அட்டைகளை வழங்குகின்றன. ஐயாயிரம், பத்தாயிரம் எனக் குறிப்பிட்ட தொகையை முன்பாகவே செலுத்தி (pre-paid) இந்த அட்டையை வாங்கிக் கொள்ள வேண்டும். கடன் அட்டை, பற்று அட்டையில் இருப்பது போன்று பண அட்டையிலும் மின்காந்தப் பட்டை (elecro magnetic strip) இருக்கும். பண அட்டையைப் பற்று அட்டை போலவே பயன்படுத்தலாம். ஆனால் முன்செலுத்திய தொகை அளவுக்கே பணம் செலுத்தலாம். அட்டையில் பணம் தீர்ந்தவுடன் அட்டை வழங்கிய வங்கியின் ஏடீஎம்மில் (ATM) குறிப்பிட்ட தொகையை ஏற்றிக் கொள்ளலாம்.
(6) இணைய வங்கிச் சேவை (Internet Banking):இத்தகைய சேவையைச் சில வங்கிகள் வாடிக்கையாளருக்கு வழங்குகின்றன. பணப் பரிமாற்றத்துக்கென பயனர் பெயரும், கடவுச்சொல்லும் வழங்கப்படும். இது ஏறத்தாழ பற்று அட்டை மூலம் பணம் செலுத்தும் முறையைப் போன்றதுதான். அட்டையின் விவரங்கள் எதுவும் தரத் தேவையில்லை. வங்கியின் பெயரைத் தேர்ந்தெடுத்தவுடன், அவ்வங்கியின் வலையகம் தோன்றும். அப்பக்கத்தில் பயனர் பெயரையும், கடவுச் சொல்லையும் தந்து, பணம் செலுத்தலுக்குச் சரி சொன்னவுடன் அத்தொகை வாடிக்கையாளர் வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்பட்டு, விற்பனையாளர் வங்கிக் கணக்கில் ஏற்றப்படும்.
இணைய வங்கி, கடன் அட்டை, பற்று அட்டை, பண அட்டை மூலம் இணையம்வழி நடைபெறும் பணப் பரிமாற்றங்களை ‘பணம்செலுத்து நுழைவாயில்’ (Payment Gateway) எனப்படும் தனிச்சிறப்பான பிணைய அமைப்பு ஒழுங்குபடுத்துகிறது. சில வங்கி நிறுவனங்கள் இத்தகைய பிணைய அமைப்புகளை நிறுவிக் கட்டண அடிப்படையில் செயல்படுத்தி வருகின்றன. அவை செயல்படும் விதம் குறித்து அடுத்த பாடத்தில் (பாடம் 4.3 - மின்னணுப் பணப் பரிமாற்றம் - Electronic Fund Transfer) விரிவாகப் படிக்க இருக்கிறோம்.