Primary tabs
2.5 தொகுப்புரை
-
கணிப்பொறிப் பிணையங்கள் அல்லது இணையம் வழியாக மேற்கொள்ளப்படும் வணிக நடவடிக்கை ‘மின்வணிகம்’ எனப்படுகிறது.
-
ஒரு வணிக நடவடிக்கையில் பங்கு கொள்வோர் அடிப்படையில் மின்வணிகத்தை நான்கு வகையாகப் பிரிக்கலாம்: (1) வணிக நிறுவனங்களுக்கு இடையே - பி2பி (Business to Business - B2B) (2) வணிக நிறுவனம் நுகர்வோருக்கு இடையே - பி2சி (Business to Consumer - B2C) (3) நுகர்வோர்களுக்கிடையே - சி2சி (Consumer to Consumer - C2C) (4) நிறுவனத்தின் அகநிலை வணிகச் செயல்பாடுகள் - பிஐ (Business Internal).
-
மின்வணிகத் தகவல் பரிமாற்றம் எதன்வழியாக நடைபெறுகிறது என்பதன் அடிப்படையில் மின்வணிகத்தை மூன்றாக வகைப்படுத்தலாம்: (1) மதிப்பேற்று பிணையங்கள் வழியாக நடைபெறும் ’மின்வணிகம்’ (e-commerce). (2) இணையம் வழியாக ’இணைய வணிகம்’ (i-commerce). (3) செல்பேசி வழியாக நடைபெறும் ‘நடமாடும் வணிகம்’ (m-commerce).
-
மின்வணிகத்தில் பணம் செலுத்தும் முறைகளுள் சில: (1) காசோலை அல்லது வரைவோலை (Cheque or Demand Draft). (2) வினியோகத்தின்போது பணம் (Cash on Delivery). (3) கடன் அட்டை (Credit Card). (4) பற்று அட்டை (Debit Card). (5) பண அட்டை (Cash Card). (6) இணைய வங்கிச் சேவை (Internet Banking). கடன் அட்டை மூலம் பணம் செலுத்தும் முறையே முதலிடம் (60%) வகிக்கிறது.
-
வங்கிக் கணக்கிலோ, கையிலோ பணம் இல்லாத போதும் கடன் அட்டை மூலம் பொருட்களை வாங்கலாம். வங்கிக் கணக்கில் பணம் இருந்தால் மட்டுமே பற்று அட்டை மூலம் பணம் செலுத்த முடியும். வங்கிக் கணக்கில் பணம் இருக்கும்வரை பொருள் வாங்க முடியும். குறிப்பிட்ட தொகையை முன்பாகவே செலுத்தி (pre-paid) பண அட்டையை வாங்கிக் கொள்ள வேண்டும். முன்செலுத்திய தொகை அளவுக்கே மின்வணிகத்தில் பணம் செலுத்தலாம். அட்டையில் பணம் தீர்ந்தவுடன் அட்டை வழங்கிய வங்கியின் ஏடீஎம்மில் குறிப்பிட்ட தொகையை ஏற்றிக் கொள்ளலாம்.
-
இணைய வங்கிச் சேவை என்பது ஏறத்தாழ பற்று அட்டை மூலம் பணம் செலுத்தும் முறையைப் போன்றதுதான். ஆனால் அட்டை விவரங்கள் எதுவும் தேவையில்லை. வங்கிக் கணக்கில் பணம் இருக்கும்வரை பொருள் வாங்க முடியும்.
-
மின்வணிகத்தின் பரிணாம வளர்ச்சி மின்னணுத் தகவல் பரிமாற்றத்திலிருந்துதான் (சுருக்கமாக இடிஐ) தொடங்கியது எனலாம். வணிக நிறுவனங்கள் தமக்கிடையே வணிக நடவடிக்கையோடு தொடர்புடைய ஆவணங்களைக் கணிப்பொறித் தகவலாக மாற்றி முன்வரையறுக்கப்பட்ட வடிவமைப்பில் கணிப்பொறிப் பிணையங்கள் வழியாக பரிமாறிக் கொள்வதே ‘இடிஐ’ என அழைக்கப்படுகிறது.
-
வணிக நடவடிக்கையில் மூன்று முக்கிய கூறுகளுள் தகவல் பரிமாற்றமும், பணம் செலுத்துகையும் கணிப்பொறிப் பிணையங்கள் வழியாகவே நடைபெற முடியும். மூன்றாவது கூறான பொருள் வினியோகம் பெரும்பாலும் கணிப்பொறி வழியே நடைபெறுவதில்லை. ஆனாலும் இணையம் வழியாகவே வாங்கிக் கொள்கின்ற பொருள்களும் உள்ளன. மின்னூல்கள், நிகழ்படங்கள், பாடல்கள், மென்பொருள்கள், வாழ்த்து அட்டைகள், சட்டம், மருத்துவம் மற்றும் பிற ஆலோசனைகள் இவற்றைப் பிணையம் வழியாகவே பதிவிறக்கிக் கொள்ளலாம்.
-
மின்னணுத் தகவல் பரிமாற்றத்தின் வளர்ச்சிக்கு மூன்று முக்கிய கூறுகள் உதவியுள்ளன: (1) வணிக ஆவணங்களின் உலகளாவிய இடிஐ தரப்பாடுகள் (2) இத்தகைய வணிக ஆவணங்களைக் கணிப்பொறிகளில் கையாள்வதற்கென தனிச்சிறப்பான ‘இடிஐ மென்பொருள்’ தொகுப்புகள். (3) உலகளாவிய முறையில் வணிகத் தகவல் பரிமாற்றத்துக்கெனவே அரசு மற்றும் தனியார் துறைகளில் செயல்படும் தனிச்சிறப்பான மதிப்பேற்று பிணையங்கள்
-
இடிஐ ஆவணங்களின் தரப்பாடுகளை அமெரிக்காவின் ’அன்சி’, ஐநா மன்றத்தின் ‘எடிஃபேக்ட்’, ஐஎஸ்ஓ ஆகிய அமைப்புகள் சேர்ந்து உருவாக்கியுள்ளன. இடிஐ தகவல்களைக் கணிப்பொறிப் பிணையங்களில் கையாள்வதற்கான தரப்பாடுகளை சிசிஐடீடீ அமைப்பு உருவாக்கியுள்ளது.
-
மின்னணுத் தகவல் பரிமாற்றத்துக்கான மதிப்பேற்று பிணையங்களுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை அமெரிக்காவின் ஐபிஎம் குளோபல் நெட்வொர்க், ஜெனரல் எலெக்ட்ரிக்கல் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ், இங்கிலாந்தின் பிரிட்டிஷ் டெலிகாம். இந்தியாவில் மைய அரசின் நிக் (NIC - National Informatics Centre) நிறுவனத்தின் ‘நிக்நெட்’, விதேஷ் சஞ்சார் நிகத்தின் (தற்போது டாட்டா டெலிசர்வீசஸ்) ஜிஇடிஐஎஸ், இந்தியத் தொலைதொடர்பு நிறுவனத்தின் ஐ-நெட் ஆகியவை மின்னணுத் தகவல் பரிமாற்றத்தின் முன்னோடிகளாகும்.
-
மின்னணுத் தகவல் பரிமாற்றத்தில் வணிக விவரங்களை ஒரேயொரு முறைமட்டும் உள்ளீடு செய்தால் போதுமானது. ஒரே விவரத்தை மீண்டும் மீண்டும் உள்ளிடுவதால் ஏற்படும் பிழைகள் தவிர்க்கப்படுகின்றன. தாள் வடிவிலான தகவல்களைச் சேமிக்கவும், பராமரிக்கவும் ஆகும் செலவோடு ஒப்பிடுகையில் இடிஐ தகவல் பரிமாற்றத்துக்குச் செலவு குறைவு. செலவுகள் குறைவதால் மறைமுகமாகப் பொருளின் அடக்கவிலை குறைகிறது. அதன் காரணமாய்ப் பொருளின் விற்பனை விலையும் குறைய வாய்ப்புண்டு.
-
மின்னணுத் தகவல் பரிமாற்றம் பிழையற்றது, துல்லியமானது, விரைவானது. இதன் காரணமாக வணிக உறவுகள் சுமூகமாக அமைகின்றன. சரியான நேரத்தில் தகவல்கள் உடனுக்குடன் கிடைத்து விடுவதால் வருங்கால வணிகத் திட்டங்களையும், யுக்திகளையும் விற்பனை முன்கணிப்புகளையும் மிகத் துல்லியமாகச் செய்ய முடிகிறது.
-
மின்வணிக வளர்ச்சியை நான்கு கட்டங்களாகப் பிரிக்கலாம். (1) மதிப்பேற்று பிணையங்கள் வழியான பி2பி (2) இணையம் வழியான பி2பி (3) இணையம் வழியான பி2சி (4) செல்பேசி வழியான பி2சி மின்வணிகம்.
-
தொடக்க காலங்களில் மின்வணிகம் இடிஐ மூலமாகவே முளைவிட்டது. ஏறத்தாழ பத்து ஆண்டுகளில் வளர்ந்து பெருகியது. 1995-ஆம் ஆண்டுவரை மின்வணிகம் என்றாலே மதிப்பேற்று பிணையங்கள் வழியாக நடைபெற்ற மின்னணுத் தகவல் பரிமாற்றம் மட்டுமே.
-
மின்வணிகத்தின் வளர்ச்சிக்கு இணையப் பயனர்களே அடிப்படை என்ற போதிலும் ஒரு நாட்டிலுள்ள இணையப் பயனர்களின் எண்ணிக்கையை மின்வணிக வளர்ச்சியின் அளவுகோலாகக் கொள்ள முடியாது. நாட்டின் மக்கள் தொகையில் இணையப் பயனர்கள் வகிக்கும் சதவீதத்தைக் கொண்டு ஒரளவு அந்த நாட்டின் மின்வணிக வளர்ச்சியை மதிப்பிடலாம். உலக அளவில் இணையப் பயனர் எண்ணிக்கையில் இந்தியா நான்காவது இடம் வகித்த போதும் மின்வணிக வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. உலக அளவில் அமெரிக்காவே மின்வணிகத்தில் முதலிடம் வகிக்கிறது.
-
இணைய அங்காடிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். (1) பொருட்களை நேரடியாக இணையம்வழி விற்பனை செய்யும் நிறுவன வலையகங்கள். (2) பல விற்பனை நிறுவனங்களின் தொடுப்புகளைக் கொண்ட மின்வணிக வலையகங்கள்.
-
உலகில் இணையம்வழி விற்பனையாகும் பொருட்களில் புத்தகமே முதலிடம் வகிக்கிறது. அடுத்ததாக, துணிமணிகள், காலணிகள் நிகழ்படம், டிவி, விளையாட்டுகள், விமானப் பயணச் சீட்டுகள், மின்னணுச் சாதனங்கள்.
-
மின்வணிகத்தில் இன்னொரு குறிப்பிடத்தக்க கூறு இணையம்வழி விளம்பரங்கள். கோடிக் கணக்கான பணம் இணைய விளம்பரத்தில் செலவழிக்கப்படுகிறது. 2008-ஆம் ஆண்டில் இத்தொகை 55.5 பில்லியன் டாலர் ஆகும். 2012-ஆம் ஆண்டில் அமெரிக்கா மட்டுமே 51 பில்லியன் டாலர் செலவிடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்கப் பொருளாதாரத் தேக்கநிலை காரணமாக மின்வணிக வளர்ச்சியில் ஓரளவு தொய்வு ஏற்பட்டாலும் வருங்காலத்தில் கணிசமாக அதிகரிக்கும். 2012-ஆம் ஆண்டில் இணையம்வழி விற்பனை ஒரு டிரில்லியன் டாலரைத் தாண்டும் எனவும் வணிக நிறுவனங்களுக்கு இடையேயான (பி2பி) பணப் பரிமாற்றம் இதையும் தாண்டும் எனவும் முன்கணிக்கப்பட்டுள்ளது.
-
இணையத்தின் வழியாகப் பாதுகாப்பான தகவல் பரிமாற்றம் என்பது பெரும் சவாலாக விளங்குகிறது. இணையம் வழியாக முக்கியமான வணிகத் தகவல் பரிமாற்றம் நடைபெறும்போது மூன்றாவது நபர் ஒட்டுக் கேட்க முடியும். இணைய வணிகத்தில் பயன்படுத்தப்படும் கடன் அட்டையின் ரகசிய விவரங்களைத் தீங்கெண்ணம் கொண்டோர் திருடிப் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புண்டு.
-
பாதுகாப்பு நடவடிக்கையாக இணையம்வழி அனுப்பப்படும் வணிகத் தகவல்கள் மறையாக்கம் செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றன. மறைவிலக்கம் செய்யப்பட்டுப் பெறப்படுகின்றன. மறையாக்க, மறைவிலக்க நெறிமுறைகளில் உலகம் முழுவதிலும் ஒரே மாதிரியான நடைமுறைகளே பின்பற்றப்படுகின்றன. இதற்கு எஸ்எஸ்எல்சி (SSLC - Secure Socket Layer Certificate) என்னும் சேவை பயன்படுகிறது.
-
மின்வணிக ஒப்பந்தங்களுக்குத் துடிமக் கையொப்பம் என்னும் ரகசியக் குறியீட்டு முறை பயன்படுகிறது. மறைக்குறியீட்டியல் (Cryptography) என்னும் தொழில்நுட்பம் இதற்குப் பயன்படுகிறது. துடிமக் கையொப்பமிட்ட ஒப்பந்தங்களை அங்கீகரிக்கப் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
-
வலையகத்தின் பெயரை வணிகப்பெயர் அல்லது வணிகச் சின்னமாகக் கருத முடியுமா? இருக்கின்ற சட்டங்களில் இதற்குத் தீர்வு இல்லை. மின்வணிக நடவடிக்கையின் செயல்பாட்டெல்லை பற்றிய சிக்கலைத் தீர்க்கவும் தெளிவான சட்டங்கள் இல்லை. ஒரு மின்வணிகப் பரிமாற்றம் எந்த நாட்டில் நடைபெற்றதாக எடுத்துக் கொள்வது என்பது தீர்க்கப்படாத கேள்வியாகும். மென்பொருள் பதிவிறக்கம் போன்ற விற்பனைகளில் எந்த நாட்டின் விற்பனை வரிச் சட்டத்தின்படி வரி விதிப்பது? இருக்கின்ற சட்டங்களில் தீர்வு இல்லை.
-
மின்வணிகம் உலகில் அறிமுகமான அதே காலகட்டத்தில் இந்தியாவிலும் அறிமுகமாகிவிட்டது. அதன் வளர்ச்சி வேகம் மிகவும் மெதுவாகவே இருந்தது. மிக மெதுவான இணைய ஊடுருவலும் ஒரு காரணம். அகல்கற்றைத் தொழில்நுட்ப அறிமுகத்துக்குப்பின் இணையப் பயனர் எண்ணிக்கையும் இணையம் வழியான மின்வணிகத்தின் வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. இந்தியாவில் மின்வணிகம் 6 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இணைய வணிக வாடிக்கையாளர்களில் பெரும்பகுதி மும்பை, டெல்லி நகரைச் சேர்ந்தவர்கள். அடுத்து வருபவை பெங்களூரு, சென்னை நகரங்கள்.
-
இந்தியாவில் மின்வணிகத்தின் வீச்சு குறைவாக இருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்தியாவில் கணிப்பொறி பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவு. கணிப்பொறி வைத்திருப்பவர்களிலும் இணைய இணைப்பு வைத்திருப்போர் மிகவும் குறைவு. இந்தியாவில் கல்வியறிவும் மின்வணிகத் தேக்கநிலைக்கு ஒரு காரணம். இந்தியாவில் கடன் அட்டை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. மின்வணிக நடைமுறை இந்திய மக்களின் மனோபாவத்துக்கு முற்றிலும் எதிரானதாக இருக்கிறது. இந்திய மக்கள் வாங்க விரும்பும் பொருள்களைத் தொட்டுத் தடவி, கடைக்காரரிடம் விளக்கம் கேட்டுப் பேரம் பேசி, ஒரு ரூபாயாவது குறைவாகக் கொடுத்து வாங்கினால்தான் திருப்தி அடைவர். இணைய வணிகத்தில் இதுவெல்லாம் சாத்தியமில்லை.
-
மின்வணிகத்தில் தொடக்க காலத்திலேயே தமிழ்நாடு கால் பதித்துள்ளது. முதன் முதலில் சென்னையில் தொடங்கப்பட்ட இணைய அங்காடி வலையகம் www.chennaibazaar.com. தமிழ் மென்பொருள் தொகுப்புகளை விற்பதற்கெனத் தொடங்கப்பட்ட வலையகம் www.tamilsoftware.org. இணைய வணிகத்தில் முதன் முதலாக ஈடுபட்ட வணிக நிறுவனம் திருமண அழைப்பிதழ் அட்டை விற்பனையில் முன்னோடி நிறுவனமான ‘ஒலிம்பிக் கார்ட்ஸ்’ நிறுவனம் www.olymbiacards.com ஆகும். ‘எனி இந்தியன்’ www.anyindian.com பதிப்பகம் இணையம் வழியாகவும் புத்தக விற்பனை செய்கிறது. www.tamilcinema.com என்னும் இணைய இதழ் வலையகத்தின் ஓர் அங்கமாக வெளிநாடுவாழ் தமிழர்களைக் கருத்தில் கொண்டு ஒரு புத்தக அங்காடியும் செயல்பட்டது.
-