Primary tabs
-
2.3 மின்வணிகத்தின் வளர்ச்சியும் சிக்கல்களும்
கணிப்பொறிப் பிணையங்களின் வளர்ச்சிக் கட்டத்தில் ‘மதிப்பேற்று பிணையங்கள்’ ஒரு முக்கிய பரிமாணம் எனலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நாடு முழுதும் பரந்த மதிப்பேற்று பிணையக் கட்டமைப்புகளை நிறுவின. தனிப்பட்ட முறையில் விரிபரப்புப் பிணையக் கட்டமைப்பை நிறுவ முடியாத வணிக நிறுவனங்கள் மேற்கூறிய மதிப்பேற்று பிணையக் கட்டமைப்புகளைப் பயன்படுத்திக் கொண்டன. அவ்வாறு ஒரு மதிப்பேற்று பிணையத்தில் அங்கமாயிருந்த இரு வணிக நிறுவனங்கள் தமக்குள்ளே வணிகத் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள மதிப்பேற்று பிணையக் கட்டமைப்பு உறுதுணையாய் இருந்தது. மின்வணிகம் என்பது இவ்வாறுதான் உருக்கொண்டது. அவ்வாறு உருக்கொண்ட மின்வணிகம் இணையத்தின் வருகைக்குப்பின் மாபெரும் வளர்ச்சி கண்டது. செல்பேசித் தொழில்நுட்பம் மின்வணிக வளர்ச்சிக்கு மேலும் ஊக்கம் அளித்தது. ஆனாலும் மின்வணிக வளர்ச்சிக்குச் சவாலாக விளங்கும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. இணையத்தின் வழியாகப் பாதுகாப்பான தகவல் பரிமாற்றம் என்பது பெரும் சவாலாக விளங்குகிறது. அதுமட்டுமின்றி நாள்தோறும் புதிய புதிய சட்டச் சிக்கல்களும் எழுகின்றன. ஏற்கெனவே உள்ள சட்டங்கள் மின்வணிகச் சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் போதுமானதாக இல்லை. இவைபற்றியெல்லாம் விரிவாக இப்பாடப் பிரிவில் காண்போம்.
2.3.1 மின்வணிகத்தின் வளர்ச்சி
மின்வணிகத்தின் வளர்ச்சியை நான்கு கட்டங்களாகப் பிரிக்கலாம். (1) மதிப்பேற்று பிணையங்கள் வழியாக வணிக நிறுவனங்களுக்கு இடையே நடைபெறும் மின்னணுத் தகவல் பரிமாற்றம். (2) மொத்த வணிகம் தொடர்பாக வணிக நிறுவனங்களுக்கு இடையே இணையம்வழி நடைபெறும் வணிகத் தகவல் பரிமாற்றம். (3) இணையம்வழி நடைபெறும் சில்லரை விற்பனையும் அது தொடர்பாக வணிக நிறுவனம், நுகர்வோருக்கிடையே நடைபெறும் பணப் பரிமாற்றமும் மற்றும் பிற தகவல் பரிமாற்றங்களும். (4) செல்பேசி வழியே நடைபெறும் வணிக நடவடிக்கைகள்.
தொடக்க காலங்களில் மின்வணிகம் இடிஐ மூலமாகவே முளைவிட்டது. ஏறத்தாழ பத்து ஆண்டுகளில் அது வளர்ந்து பெருகியது. 1995-ஆம் ஆண்டுவரை மின்வணிகம் என்றாலே மதிப்பேற்று பிணையங்கள் வழியாக நடைபெற்ற மின்னணுத் தகவல் பரிமாற்றம் மட்டுமே என்றுதான் சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றித் தொடக்ககால மின்வணிகம் இரு வணிக நிறுவனங்களுக்கு இடையிலான வணிக நடவடிக்கையாகவே இருந்தது. இணையத்தில் வைய விரிவலையின் (World Wide Web) ஆதிக்கம் ஏற்பட்டபின் மின்வணிகத்தில் இணையம் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கிவிட்டது. வாடிக்கையாளர்கள் பங்குபெறும் மின்வணிகம் அதன்பிறகே வளர்ச்சி பெற்றது.
இணையப் பயனர்களின் எண்ணிக்கை:
மின்வணிகத்தின் வளர்ச்சிக்கு இணையப் பயனர்களே அடிப்படை என்ற போதிலும் ஒரு நாட்டிலுள்ள இணையப் பயனர்களின் எண்ணிக்கையை மின்வணிக வளர்ச்சியின் அளவுகோலாகக் கொள்ள முடியாது. உலகில் இணையப் பயனர்களின் மொத்த எண்ணிக்கை 158 கோடி. இது உலக மக்கள் தொகையில் 23.6% ஆகும். உலக நாடுகளில் இணையப் பயனர்களின் எண்ணிக்கையில் முதல் பத்து இடங்களை வகிக்கும் நாடுகள் (அடைப்புக் குறிகளுக்குள் மக்கள் தொகையில் சதவீதம்):
- சீனா - 29 கோடியே 80 லட்சம் (22.4%)
- அமெரிக்கா - 22 கோடி (72.5%)
- ஜப்பான் - 9 கோடியே 40 லட்சம் (73.8%)
- இந்தியா - 8 கோடியே 10 லட்சம் (7.1%)
- பிரேசில் - 6 கோடியே 75 லட்சம் (34.4%)
- ஜெர்மன் - 5 கோடியே 52 லட்சம் (67%)
- இங்கிலாந்து - 4 கோடியே 32 லட்சம் (70.9%)
- ஃபிரான்சு - 4 கோடி (64.6%)
- ரஷ்யா - 3 கோடியே 80 லட்சம் (27%)
- தென்கொரியா - 3 கோடியே 68 லட்சம் (76.1%)
இணையப் பயனர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தரவரிசை இப்படி இருந்த போதிலும் மின்வணிக வளர்ச்சி என்று பார்த்தால் நிலைமை முற்றிலும் வேறானது. உலக அளவில் அமெரிக்காவே மின்வணிகத்தில் முதலிடம் வகிக்கிறது. நாட்டின் மக்கள் தொகையில் இணையப் பயனர்கள் வகிக்கும் சதவீதத்தைக் கொண்டு ஒரளவு அந்த நாட்டின் மின்வணிக வளர்ச்சியை மதிப்பிடலாம். அந்த வகையில் எண்ணிக்கையில் இந்தியா நான்காவது இடம் வகித்தாலும் மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது கண்கூடு. வணர்ந்த நாடுகளில் மின்வணிகம் அந்நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆனால் வளரும் நாடுகளில் இன்னும் குழந்தைப் பருவத்திலேயே உள்ளது. வரும் ஆண்டுகளில் குறிப்பாகச் சீனாவில் மின்வணிக வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே பிரேசில், ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளிலும் மின்வணிக வளர்ச்சி கணிசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இணையப் பயனர்களில் மின்வணிகம் செய்வோர்:
இணையப் பயனராய் இருந்தாலும் மின்வணிகத்தில் ஈடுபடுவதற்கு வேறுபல சாதகமான சூழ்நிலைகளும் இருக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலைகள் நாட்டுக்கு நாடு மாறுபடும். உலகின் மொத்த இணையப் பயனர்களில் 85% பேர் இணையம்வழி பொருட்கள் அல்லது சேவைகளை வாங்குவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 40% அதிகரித்துள்ளது. கடன் அட்டை மூலம் பணம் செலுத்தும் முறையே முதலிடம் (60%) வகிக்கிறது. இணையப் பயனர்களில் இணைய வணிகத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையின் (சதவீத) அடிப்படையில் உலக அளவில் முதல் ஐந்து இடங்களை வகிக்கும் நாடுகளாவன: (1) தென்கொரியா (99%). (2) இங்கிலாந்து (97%). (3) ஜெர்மனி (97%). (4) ஜப்பான் (97%). (5) அமெரிக்கா (94%).
இணையம்வழி வாங்கப்படும் பொருட்கள்:இணைய அங்காடிகளில் கைக்குட்டை முதல் கணிப்பொறி வரை வாங்க முடியும் என்றாலும் சில குறிப்பிட்ட பொருட்கள் அதிக அளவில் வாங்கப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை: (1) புத்தகம் (41%). (2) துணிமணிகள்/காலணிகள் (36%). (3) நிகழ்படம்/டிவி/விளையாட்டுகள் (24%). (4) விமானப் பயணச் சீட்டுகள் (24%). (5) மின்னணுச் சாதனங்கள் (23%). அடைப்புக் குறிகளுக்குள் இருப்பவை இணையப் பயனர்களில் அப்பொருட்களை வாங்கியவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றன. மின்வணிகத்தில் இன்னொரு குறிப்பிடத்தக்க கூறு இணையம்வழி விளம்பரங்கள் ஆகும். இணையப் பயனர்கள் விரும்பிப் பார்க்கும் வலையகங்களில் வணிக நிறுவனங்கள் ஏராளமான அளவில் விளம்பரம் செய்யத் தொடங்கியுள்ளன. கோடிக் கணக்கான பணம் இணைய விளம்பரத்தில் செலவழிக்கப்படுகிறது. 2008-ஆம் ஆண்டில் இத்தொகை 55.5 பில்லியன் டாலர் ஆகும். 2012-ஆம் ஆண்டில் அமெரிக்கா மட்டுமே 51 பில்லியன் டாலர் செலவிடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
உலகில் இணையம்வழி விற்பனையாகும் பொருட்களில் புத்தகமே முதலிடம் வகிக்கிறது. முதன்முதலில் இணையம்வழி விற்பனையான பொருளும் புத்தகமே. கோடிக் கணக்கில் புத்தகம் விற்பனை செய்கின்ற மிகப்பெரும் இணைய அங்காடிகள் உள்ளன. அவற்றுள் மிகவும் செல்வாக்குப் பெற்றது அமெரிக்காவின் மிகப்பெரும் சில்லரை விற்பனை அங்காடியான அமேசான் (Amazon) ஆகும். அமேசான் இணைய அங்காடி 1994-இல் ஜெஃப் பீஸோஸ் என்பவரால் வாஷிங்டன் மாநிலம் சியாட்டில் நகரில் நிறுவப்பட்டது. புத்தகம் மட்டுமே விற்பனை செய்துவந்த அமேசான் தற்போது டிவிடி, இசைக் குறுவட்டு, எம்பீ3, கணிப்பொறி மென்பொருள், நிகழ்பட விளையாட்டு, மின்னணுப் பொருட்கள், உணவுப் பொருட்கள், பொம்மைகள் ஆகியவற்றையும் விற்பனை செய்கின்றது. 2006-ஆம் ஆண்டில் இதன் விற்றுவரவு 10.7 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற இணைய அங்காடிகள்:: இணைய அங்காடிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். (1) பொருட்களை நேரடியாக இணையம்வழி விற்பனை செய்யும் நிறுவனங்கள். இந்த அங்காடிகளின் வலையகத்தில் அந்த வணிக நிறுவனத்தின் பொருட்களை மட்டுமே வாங்க முடியும். புகழ்பெற்ற இணைய விற்பனை நிறுவனங்கள் சில: இ’பே (eBay), அமேசான், சேல்சஃபாரி, வால்மார்ட், டார்ஜெட், நெட்ஃபிலிக்ஸ், பெஸ்ட் பை (Best Buy). சர்க்யூட் சிட்டி, சியர்ஸ், ஜேசிபென்னி. (2) இணைய விற்பனை நிறுவனங்களின் தொடுப்புகளைக் கொண்ட மின்வணிக வலையகங்கள். இந்த வலையகம் மூலம் பல்வேறு இணைய விற்பனை நிறுவனங்களின் பொருட்களை ஒரே இடத்தில் வாங்கிக் கொள்ள முடியும். இத்தகைய அங்காடிகளை ‘இணைய மால்’ (Internet Mall) என்று அழைக்கின்றனர். புகழ்பெற்ற இணைய மால்கள் சில: ஷாப்பர்ஸ் பஜார், யாகூ ஷாப்பிங், அட்வான்ஸ்லேண்ட் ஷாப்பிங் மால், ஸ்ப்ரீ, மால்பார்க், ஸ்கூல்பாப், ஸ்டோர் டைரக்ட், ஃப்ரூகிள், ஃப்ரீ ஷாப், குவிக்ஸ்டார்.
வருங்காலத்தில் மின்வணிகம்:அமெரிக்கப் பொருளாதாரத் தேக்கநிலை காரணமாக மின்வணிக வளர்ச்சியில் ஓரளவு தொய்வு ஏற்பட்டாலும் வருங்காலத்தில் மின்வணிக வளர்ச்சி கணிசமாக அதிகரிக்கும். இணையம்வழி வங்கிச் சேவைகள் மிகவும் செல்வாக்குப் பெற்று வருகின்றன. இணையப் பயனர்களில் ஏறத்தாழ 30% பேர் அத்தகைய சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். வருங்காலத்தில் இன்னும் அதிகரிக்கும். மின்வணிகத்தில் வளர்ந்துவரும் இன்னொரு துறை பொழுதுபோக்கு. நிகழ்பட விளையாட்டு (video game), சூதாட்டம் (gambling), நிகழ்நிலை நிகழ்படம் (online video), இசை போன்றவை முக்கிய இடம் வகிக்கும். ஆசியா பசிஃபிக் மண்டலம்தான் செல்பேசி வழியாகப் பணம் செலுத்துவதில் முதலிடம் வகிக்கிறது. உலகிலுள்ள அத்தகைய மொத்த வாடிக்கையாளர்களில் 85% பேர் ஆசியா பசிஃபிக் நாடுகளைச் சேர்ந்தவர்கள். வரும் ஆண்டுகளில் இணையம்வழி விளம்பரம் மிகுந்த வளர்ச்சி பெறும். விளம்பரத்துக்குச் செலவிடும் மொத்தத் தொகையில் இது 20% ஆக இருக்கும். 2012-ஆம் ஆண்டில் இணையம்வழி விற்பனை ஒரு டிரில்லியன் டாலரைத் தாண்டும் எனவும் வணிக நிறுவனங்களுக்கு இடையேயான (பி2பி) பணப் பரிமாற்றம் இதையும் தாண்டும் எனவும் முன்கணிக்கப்பட்டுள்ளது.
2.3.2 பாதுகாப்பான தகவல் பரிமாற்றம்
இரண்டு வணிக நிறுவனங்களுக்கு இடையே வணிக ஆவணங்களின் பரிமாற்றம் அஞ்சல் வழியே நடைபெறுகிறது எனில் அனுப்பியவர்களின் கையொப்பத்தைச் சரிபார்த்துக் கொள்ள வசதி இருக்கிறது. கணிப்பொறிப் பிணையங்கள் வழியே மேற்கொள்ளப்படும் தகவல் பரிமாற்றங்களில் தகவலை அனுப்பியவர், தான் அனுப்பவில்லை என்றோ, தகவலைப் பெற்றவர் தனக்குத் தகவல் கிடைக்கவில்லை என்றோ மறுதலிக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதுமட்டுமின்றிக் கணிப்பொறியில் கையாளும் தகவல்களில் தடையமே இல்லாமல் மாற்றங்கள் செய்துவிடவும் முடியும்.
இரண்டு வணிக நிறுவனங்களுக்கு இடையே இணையம் வழியாக முக்கியமான வணிகத் தகவல் பரிமாற்றம் நடைபெறும்போது மூன்றாவது நபர் ஒட்டுக் கேட்க முடியும். ஒரு வணிக நிறுவனம் தன்னுடைய அக இணைய அல்லது புற இணைய அமைப்பை இணையம்வழிச் செயல்படுத்துகிறது எனில் அந்நிறுவனத்தின் பிணையத்துக்குள் அனுமதி இல்லாதவர்கள் அத்துமீறி நுழைய வாய்ப்புண்டு. இணைய அங்காடியில் தாம் வாங்கும் பொருளுக்குப் பணம் செலுத்தக் கடன் அட்டையின் விவரங்களைக் குறிப்பிடுகிறார். அந்த ரகசிய விவரங்களைத் தீங்கெண்ணம் கொண்டோர் திருடிப் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புண்டு.
கணிப்பொறியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொள்முதல், விற்பனை, விலைப்பட்டியல் விவரங்கள், வாடிக்கையாளர் விவரங்கள் பல்வேறு காரணங்களால் பாழ்பட்டுப்போக வாய்ப்புண்டு. பிணைய அமைப்பில் அல்லது பயன்படுத்தும் மென்பொருளில் குறைபாடுகளோ, பயன்படுத்தும்போது பிழைகளோ ஏற்படலாம். மின்கோளாறு காரணமாகத் தகவல் சேமிக்கப்பட்டுள்ள நிலைவட்டுப் பழுதடையலாம். நச்சுநிரல் காரணமாகக் கணிப்பொறியில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்கள் பாதிக்கப்படலாம்.
மின்வணிகத் தகவல் பரிமாற்றத்தில் இருக்கக்கூடிய மேற்குறிப்பிட்ட அனைத்துச் சவால்களையும் எதிர்கொள்ளப் பல்வேறு நவீனத் தொழில்நுட்ப முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இணையம்வழி அனுப்பப்படும் வணிகத் தகவல்கள் மறையாக்கம் (Encryption) செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றன. மறைவிலக்கம் (Decryption) செய்யப்பட்டுப் பெறப்படுகின்றன. மறையாக்க, மறைவிலக்க நெறிமுறைகளில் உலகம் முழுவதிலும் ஒரே மாதிரியான நடைமுறைகளே பின்பற்றப் படுகின்றன. இப்பணியைச் சிறப்புறச் செய்து முடிக்கத் தனிச்சிறப்பான நிறுவனங்கள் உள்ளன. அந்நிறுவனங்களின் சேவையை மின்வணிக நிறுவனங்கள் கட்டணம் செலுத்திப் பெறுகின்றன. அச்சேவை எஸ்எஸ்எல்சி (SSLC - Secure Socket Layer Certificate) என்று அழைக்கப்படுகிறது. எஸ்எஸ்எல்சி பாதுகாப்பு பற்றிய தகவலை மின்வணிக நிறுவனங்களின் வலையகத்தில் காணலாம். எஸ்எஸ்எல்சி குறிப்பிட்ட காலக்கெடுவுகளில் புதுப்பிக்கப்பட வேண்டும். குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில், உங்கள் கணிப்பொறியிலிருந்து மின்வணிக வலையகத்தில் நுழையும்போது, அவ்வலையகம், புதுப்பிக்கப்பட்ட எஸ்எஸ்எல்சியைக் கொண்டுள்ளதா என்பதை நீங்கள் பயன்படுத்தும் வலை உலாவி (Web Browser) பரிசோதித்து, எச்சரிக்கைச் செய்தியைத் தரும்.
2.3.3 சட்டச் சிக்கல்கள்
மரபுவழி வணிக நடைமுறையில் இல்லாத, எதிர்பாராத சிக்கல்கள் மின்வணிகத்தில் ஏற்படுகின்றன. அவற்றின் முடிச்சுகளை அவிழ்ப்பதற்குப் போதுமான சட்ட நடைமுறைகள் நம்மிடம் இல்லை. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்துக்கு ஏற்பச் சட்டங்களைப் புதுப்பித்துக் கொள்ளவோ புதிதாக இயற்றவோ நம்மால் முடிவதில்லை.
மரபுவழி வணிக நடைமுறைகளில் தாள்வழித் தகவல் பரிமாற்றமே நடைபெறும். வணிக ஒப்பந்தங்கள் மீறப்பட்டு வழக்கு ஏற்படும்போது சான்றுகள் காட்டித் தீர்வுகள் காண்பது எளிது. ஆனால் மின்வணிகத் தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் கணிப்பொறி வழியாகவே நடைபெறுகின்றன. கணிப்பொறி ஆவணத்தில் இடப்பட வேண்டிய கையொப்பம் ‘துடிமக் கையொப்பம்’ (Digital Signature) எனப்படுகிறது. துடிமக் கையொப்பம் என்பது ஒருவகையான ரகசியக் குறியீட்டு முறையாகும். மறைக்குறியீட்டியல் (Cryptography) என்னும் தொழில்நுட்பம் இதற்குப் பயன்படுகிறது. துடிமக் கையொப்பமிட்ட ஒப்பந்தங்களை அங்கீகரிக்கப் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் ஒப்பந்தச் சட்டங்களில் இதற்கான வழிமுறைகள் இல்லை.
1996-ஆம் ஆண்டு டிசம்பர் 16-இல் ஐ.நா. மன்றத்தில் மின்வணிகம் பற்றிய வழிகாட்டு நெறிமுறைகள் (UNCITRAL - UN Commission on International Trade Law) தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன. அதையொட்டி 1998 ஜூலை 10-இல் சிங்கப்பூர் அரசு மின்னணுப் பரிமாற்றச் சட்டத்தை (Electronic Transactions Act) நிறைவேற்றியது. 1999 நவம்பரில் அமெரிக்க செனட் துடிமக் கையொப்பத்திற்கு அங்கீகாரம் வழங்கிச் சட்டம் இயற்றியது. பல நாடுகளில் இன்னும் இதுபோன்ற சட்டங்கள் இயற்றப்படவில்லை.
இணையம்வழி நடைபெறும் மின்வணிகத்தில் வேறுபல சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒவ்வொரு வணிக நிறுவனத்துக்கும் வணிகப் பெயரும் (Trade Name), வணிகச் சின்னமும் (Trade Mark) உள்ளன. இவற்றை நெறிமுறைப்படுத்த எல்லா நாடுகளிலும் சட்டங்கள் உள்ளன. இணையத்தில் ஒருவர் தாம் விரும்பும் பெயரில் வலையகத்தைப் பதிவு செய்துகொள்ள முடியும். ஏற்கெனவே அப்பெயரில் ஒரு வலையகம் இருக்கக் கூடாது என்பதே நிபந்தனை. நூறு ஆண்டுகளுக்கு மேலாக வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனத்தின் பெயர்களில்கூட சிலர் வலையகங்களைப் பதிவு செய்து வைத்திருந்தனர். அந்த நிறுவனம் தன் பெயரில் வலையகம் நிறுவ முடியாமல் போனது. பல கோடி டாலர்கள் கொடுத்து அப்பெயரை வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இத்தகைய மோசடிகளைத் தடுப்பது எப்படி? வலையகத்தின் பெயரை வணிகப்பெயர் அல்லது வணிகச் சின்னமாகக் கருத முடியுமா? வலையகப் பெயரும் வணிகச் சின்னமே எனப் பல வழக்குகளில் விவாதிக்கப்பட்ட போதிலும் இருக்கின்ற சட்டங்களை வைத்து இதுபோன்ற வழக்குகளில் வெற்றிபெற முடியவில்லை. பல நாடுகளில் இது தொடர்பான தீர்க்கமான சட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
அடுத்ததாக, மின்வணிக நடவடிக்கைகளின் செயல்பாட்டெல்லை (Jurisdiction) பற்றிய சிக்கல். ஒரு நாட்டைச் சேர்ந்த வணிக நிறுவனம் வேறொரு நாட்டு இணையச் சேவை நிறுவனத்தில் வலையகம் நிறுவி மின்வணிகத்தில் ஈடுபடலாம். மூன்றாவது நாட்டைச் சேர்ந்த ஒருவர் அந்த வலையக அங்காடியில் பொருள் வாங்கலாம். அதற்கான பணப் பரிமாற்றம் நான்காவதாக ஒரு நாட்டின் வங்கி மூலமாக நடைபெறலாம். இந்த வணிகப் பரிமாற்றம் எந்த நாட்டில் நடைபெற்றதாக எடுத்துக் கொள்ளப்படும். இதில் அந்நியச் செலவாணிச் சட்டம் தலையிடுமா? எந்த நாட்டின் அந்நியச் செலவாணிச் சட்டம் தலையிடும்? இந்த வணிகப் பரிமாற்றத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு, வழக்குத் தொடுக்க நேர்ந்தால் எந்த நாட்டு நீதி மன்றத்தில் வழக்குத் தொடுப்பது?
சில பொருட்களின் விற்பனை நடவடிக்கை முழுக்கவும் இணையம் வழியாகவே நடந்து முடிந்து விடுகிறது எனப் பார்த்தோம். மென்பொருள்கள், நிகழ்படங்கள், திரைப்படங்கள், பாடல்கள், வரைகலைப் படங்கள், வாழ்த்து அட்டைகள், ஆலோசனைகள் இவற்றை இணைய அங்காடியில் வாங்குவதோடு, இணையம் வழியாகவே நமது கணிப்பொறியில் பதிவிறக்கிக் கொள்கிறோம். இந்த விற்பனையை வரி விதிப்புக்குள் கொண்டு வருவது எப்படி? எந்த நாட்டில் உள்ள எந்தக் கணிப்பொறியில் பதிவிறக்கம் செய்யப்பட்டது என்பதைக் கண்டறிவது கடினமான பணி. எந்த நாட்டின் விற்பனைவரிச் சட்டத்தின்படி வரி விதிப்பது? மேலும் ஒருவர் தான் யாரென்று சொல்லிக் கொள்ளாமலே இந்த வணிக நடவடிக்கையில் ஈடுபட முடியும். யார் என்று சொல்லாமலே ஒருவர் வணிக ஒப்பந்தத்தில் ஈடுபட்டால் அது செல்லுபடி ஆகிற ஒப்பந்தமாக (valid contract) கருதப்படுமா? அந்த நடவடிக்கையில் ஏற்படும் சிக்கல்களுக்கு இப்போதிருக்கும் ஒப்பந்தச் சட்டங்கள் (Contact Laws) செல்லுமா?
இணைய வணிக நிறுவனங்கள் பொதுவாகத் தம் வாடிக்கையாளர் பற்றிய சொந்த விவரங்களைப் படிவங்கள் மூலமாகப் பெறுகின்றன. அப்படிப் பெற்ற சொந்த விவரங்களை அந்த நிறுவனம் தீங்கான வழியில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதனைத் தடுக்கச் சட்ட ரீதியான வழிமுறைகள் இருக்க வேண்டும். அதற்கான முன்முயற்சியாக ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகள் ‘எக்லிப்’ (ECLIP - Electronic Commerce Legal Issues Platform) என்ற ’மின்வணிகச் சட்டச் சிக்கல் குழுவை’ அமைத்தது. இணைய வணிகத்தில் ஈடுபடும் ஒருவர் தன் தனிப்பட்ட (Privacy) தன்மையைப் பாதுகாத்துக் கொள்ளும் நடைமுறைகளுக்குச் சட்ட வடிவம் கொடுத்தது. ஆனாலும் இன்னும் பல நாடுகளில் இதுபோன்ற சட்டங்கள் இயற்றப்படவில்லை. ஆக, மின்வணிக நடைமுறைகளைப் பொறுத்தவரை இன்னும் தீர்க்கப்படாத சட்டச் சிக்கல்கள் பல உள்ளன. அவை ஒவ்வொன்றாகத் தீர்க்கப்படும்போது மின்வணிகம் இன்னும் முழு வீச்சில் முன்னேற்றம் காணும். நுகர்வோர் எவ்விதத் தயக்கமும் அச்சமும் இன்றி மின்வணிகத்தில் பெருமளவில் ஈடுபடுவர்.