Primary tabs
2.4 இந்தியாவில் மின்வணிகம்
பொதுவாக எந்தவொரு தொழில்நுட்பத்திலும் இந்தியா பின்தங்கி விடுவதில்லை. குறிப்பாகக் கணிப்பொறித் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்த நாடுகளில் அறிமுகம் ஆகும் அதே காலகட்டத்தில் இந்தியாவிலும் அறிமுகமாகி விடுகின்றன. மென்பொருள் தொழில்நுட்பத்தில் இந்தியா வேறெந்த நாட்டுக்கும் சளைத்ததில்லை என்ற பெருமையும் உள்ளது. மின்வணிகமும் உலகில் அறிமுகமான அதே கால கட்டத்தில் இந்தியாவிலும் அறிமுகமாகிவிட்டது எனக் கூறலாம். என்றாலும் அதன் வளர்ச்சி வேகம் தொடக்க காலங்களில் மிகவும் மெதுவாகவே இருந்தது. அதற்குப் பல காரணங்கள் இருந்தன. மிக மெதுவான இணைய ஊடுருவலும் ஒரு காரணம் எனலாம். ஆனால் அண்மைக் காலத்தில் அகல்கற்றைத் தொழில்நுட்ப அறிமுகத்துக்குப்பின் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இணையப் பயனர் எண்ணிக்கையும் இணையம் வழியான மின்வணிகத்தின் வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. இந்தியாவில் மின்வணிக வளர்ச்சியையும் அவ்வளர்ச்சிக்குத் தடைக்கற்களாக விளங்கும் காரணங்களையும் இப்பாடப் பிரிவில் காண்போம்.
2.4.1 இந்தியாவில் மின்வணிக வளர்ச்சி
இந்தியாவில் மின்வணிக வளர்ச்சியை இரண்டு கோணங்களில் பார்க்க வேண்டும்:
-
மதிப்பேற்று பிணையங்களின் வளர்ச்சியும் அவற்றின் வழியே வணிக நிறுவனங்களுக்கு இடையே நடைபெறும் இடிஐ-யின் வளர்ச்சியும்.
-
இணையத்தின் வளர்ச்சியும், இணையம் வழியாக நடைபெறும் மின்வணிகச் சில்லரை விற்பனை (பி2சி) வளர்ச்சியும்.
1991-ஆம் ஆண்டில் இந்தியாவில் பொருளாதாரத் தாராளமயக் கொள்கை (Economic Liberalisation Policy) அறிமுகப்படுத்தப்பட்ட பின்பே இடிஐ வளர்ச்சிக்காக ஒரு திட்டமிட்ட திசைவழியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வணிக அமைச்சகத்தின் கீழ் ‘இடிஐ ஆலோசனைக் குழு’ (EDI Council) உருவாக்கப்பட்டது. ஐநாவின் எடிஃபேக்ட் தரப்பாடுகளை ஆலோசனைக் குழு ஏற்றுக் கொண்டது. இந்தியாவுக்கென எடிஃபேக்ட் குழுவும், செயற்குழுவும் அமைக்கப்பட்டது. அரசுத்துறையில் விதேஷ் சஞ்சார் நிகம் (VSNL), நேஷனல் இன்ஃபர்மேட்டிக்ஸ் சென்டர் (NIC) ஆகியவை இடிஐ தகவல் பரிமாற்றத்துக்கென மதிப்பேற்று பிணையங்களை நிறுவி மின்வணிகத் தகவல் பரிமாற்றத்துக்குத் தடம் அமைத்துக் கொடுத்தன. இவைதவிர தனியார் துறையினரும் இத்தகைய பிணையங்களை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. மஹிந்திரா நெட்வொர்க் சர்வீசஸ், சத்யம் இன்ஃபோவே, குளோபல் டெலிகாம் சர்வீசஸ் போன்ற பல தனியார் இடிஐ சேவைக் கட்டமைப்புகளும் இந்தியாவில் செயல்படத் தொடங்கின.
இரண்டாவதாக, இந்தியாவில் இணைய வளர்ச்சியும் மின்வணிகத்தின் பரவலுக்குப் பங்களிப்பைச் செலுத்தி வருகிறது. 1985-86 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் யுஎன்டிபீ (UNDP - United Nations Development Programme) உதவியுடன், இந்திய மின்னணுவியல் துறையின்கீழ் ‘எர்நெட்’ (ERNet - Education and Research Network) நிறுவப்பட்டது. தில்லி, கான்பூர், நாக்பூர், சென்னை, மும்பை நகரங்களில் உள்ள ஐஐடீ (IIT - Indian Institute of Technology) கல்வி நிறுவனங்கள், பெங்களூருவில் உள்ள இந்திய விஞ்ஞானக் கழகம் (Indian Institute of Science), மும்பையிலுள்ள தேசிய மென்பொருள் தொழில்நுட்ப மையம் ஆகியவை இந்தப் பிணையத்தில் இணைக்கப்பட்டன. எர்நெட் உலகளாவிய இணையத்தோடு பிணைக்கப்பட்டிருந்தது. நூறு அறிவியல் ஆய்வுக்கூடங்கள் உட்பட முந்நூறு அரசுத்துறை நிறுவனங்கள் எர்நெட்டின் சேவையைப் பெற்றன. நாடு முழுவதிலும் ஐந்நூறு கணுக் கணிப்பொறி மையங்கள் நிறுவப்பட்டன. இந்திய மாணவர்கள் 1985 முதலே இணையத்தின் பயனைப் பெற்று வந்தனர். அடுத்த கட்டமாக, இந்தியா முழுவதிலுமுள்ள நூற்றுக்கணக்கான மைய, மாநில அரசுத்துறை நிறுவனங்கள் ‘நிக்நெட்டில்’ (NICNet) இணைக்கப்பட்டன. நிக்நெட் இணையத்துடன் பிணைக்கப்பட்டு, அரசு நிர்வாகத்தினர் உலகம் முழுதும் தொடர்பு கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது.
இந்திய அரசின் விதேஷ் சஞ்சார் நிகம் 1995-ஆம் ஆண்டில் முதன்முதலில் ‘கியாஸ்’ (GIAS - Gateway Internet Access Service) என்னும் பெயரில் பொதுமக்களுக்கு இணையச் சேவையை அறிமுகப்படுத்தியது. 1997-ஆம் ஆண்டின் இறுதியில் புதிய தொலைதொடர்புக் கொள்கை (New Telecom Policy) அறிவிக்கப்பட்டது. அதன்படி தனியார் துறையினருக்கும் இணையச் சேவை வழங்க உரிமம் வழங்கப்பட்டது. ஏராளமான தனியார் இணையச் சேவையாளர்கள் (Internet Service Providers) பொதுமக்களுக்கு இணையச் சேவையை வழங்கலாயினர். இந்தியத் தொலைதொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகமும் (BSNL) இணையச் சேவையாளராக இருந்து வருகிறது. பிஎஸ்என்எல் 2005-ஆம் ஆண்டில் இந்தியாவில் அகல்கற்றைச் (Broadband) சேவையை அறிமுகப்படுத்தியது. அதன்பிறகு இந்தியாவில் இணையப் பயனர் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்தது.
இத்தகைய இணைய வளர்ச்சிப் போக்கின் காரணமாய் மின்வணிக நடவடிக்கைகளும் இந்தியாவில் மெல்ல மெல்ல வளரத் தொடங்கின. வளர்ச்சியடைந்த நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் மின்வணிகத்தின் வளர்ச்சி மெதுவானது என்றே சொல்ல வேண்டும். இந்தியாவில் மின்வணிகத்தை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் இல்லாமல் இருந்ததும் மெதுவான வளர்ச்சிக்கு ஒரு காரணமாகும். 2000-ஆம் ஆண்டில் இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் அக்குறைபாடு ஓரளவு நீங்கியது எனலாம். இன்னும் இந்தியத் தடயச் சட்டம், சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்கள், சுங்க வரி, வருமான வரி, விற்பனை வரிச் சட்டங்களும் மின்வணிகத்துக்குப் பாதுகாப்பளிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
இந்தியாவில் மின்வணிகம் 6 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இந்தியாவில் இன்னும் பல முக்கிய வணிக நிறுவனங்கள் இணையம்வழி விற்பனை செய்ய முன்வரவில்லை. இணைய வணிக வாடிக்கையாளர்களில் பெரும்பகுதி மும்பை, டெல்லி நகரைச் சேர்ந்தவர்கள். மும்பை 40%, டெல்லி 30% பேர் என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து வருபவை பெங்களூரு, சென்னை நகரங்கள் எனலாம். இணைய வணிக வாடிக்கையாளர்களில் 88% பேர் ஆண்கள். இந்தியாவில் துணிக்கடைகளிலும், நகைக்கடைகளிலும் அலைமோதும் பெண்கள் இணைய அங்காடிகளைத் திரும்பிப் பார்ப்பதில்லை போலும்! மேலும் இணைய வணிகத்தில் ஈடுபடுவோரில் 86% பேர் பட்டப்படிப்பு அளவுக்காவது படித்தவர்கள். ஆக, இந்தியாவில் கல்வியறிவும் மின்வணிகத் தேக்கநிலைக்கு ஒரு காரணம் எனலாம். இந்தியாவில் இணைய வணிகத்தில் விற்பனையாகும் பொருட்கள் அல்லது சேவைகள்: மின்னணுப் பொருட்கள், விமான, இரயில் பயணச் சீட்டுகள், திரைப்படச் சீட்டுகள், புத்தகங்கள், நகைகள், பரிசுப் பொருட்கள், இசைப்பாடல்கள், திரைப்படங்கள், தங்கும் விடுதி அறை முன்பதிவுகள்.
2.4.2 இந்தியாவில் மின்வணிகத்தின் தடைக்கற்கள்
உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சியோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் மின்வணிகத்தின் வீச்சு குறைவு என்றே கூற வேண்டும். அதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்:
- பி2சி இணைய வணிகத்துக்குக் கணிப்பொறியும் இணைய இணைப்பும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்தியாவில் கணிப்பொறி பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவு. கணிப்பொறி வைத்திருப்பவர்களிலும் இணைய இணைப்பு வைத்திருப்போர் மிகவும் குறைவு.
- இணைய வணிகத்தில் பணப் பரிமாற்றம் பெரும்பாலும் ‘கடன் அட்டை’ (Credit Card) மூலமே நடைபெறுகிறது. இந்தியாவில் கடன் அட்டை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. கணிப்பொறி, இணையம் பயன்படுத்தும் பலர் கடன் அட்டை பயன்படுத்துவதில்லை.
- இணைய அங்காடியில் ஒரு பொருளை வாங்கக் கடன் அட்டை மூலம் பணம் செலுத்திய பின்பு, பொருள் வந்து சேரவில்லை அல்லது பொருள் எதிர்பார்த்த தரத்தில் இல்லை எனில் எங்கு, யாரிடம் புகார் கொடுப்பது? இதற்குரிய தெளிவான சட்டங்கள் இந்தியாவில் இன்னும் உருவாக்கப்படவில்லை.
- இந்தியாவில் விற்பனை வரி, மாநில எல்லை வரி (Octroi) போன்றவை, ஒவ்வொரு மாநிலத்துக்கும் மிகவும் வேறுபடுகின்றன. வரிவிதிப்பு முறைகளில் உள்ள குழப்பங்களால் தொலைதூர வாடிக்கையளர்கள் இணையம்வழிப் பொருள்கள் வாங்கத் தயங்குகின்றனர்.
- இணைய வணிகம் தொடங்கத் தொடக்கச் செலவு அதிகம் என்பதால் பல நிறுவனங்கள் இணைய வணிகத்தில் ஈடுபடத் தயக்கம் காட்டுகின்றன
- . மின்வணிக நடைமுறை இந்திய மக்களின் மனோபாவத்துக்கு முற்றிலும் எதிரானதாக இருக்கிறது. இந்திய மக்கள் பொருட்கள் வாங்க நண்பர்கள் அல்லது உறவினர்கள் புடைசூழக் கடைக்குச் சென்று, வாங்க விரும்பும் பொருள்களைத் தொட்டுத் தடவி, உருட்டிப் பார்த்து, கடைக்காரரிடம் விளக்கம் கேட்டு, விவாதித்து, விலைகேட்டுப் பேரம் பேசி, ஒரு ரூபாயாவது குறைவாகக் கொடுத்து வாங்கினால்தான் திருப்தி அடைவர். இணைய வணிகத்தில் இதுவெல்லாம் சாத்தியமில்லை.
- காடைக்காரர் என்றாலே தரம் குறைந்த பொருட்களை ஏமாற்றித் தலையில் கட்டி விடுவார் என்கிற எண்ணம் இந்தியர் பலரிடம் உண்டு. நேரில் சென்று பார்த்து வாங்கினாலே ஏமாற்றி விடுவர் என்று எண்ணும் ஒருவர் கணிப்பொறி, இணையம் வழியாகப் பொருள் வாங்க முன்வருவாரா?
2.4.3 தமிழ்நாட்டில் மின்வணிகத்தின் முன்னோடிகள்
தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு தொழில் முன்னேற்றங்களில் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்ந்துள்ளது. அந்த வகையில் மின்வணிகத்திலும் தொடக்க காலத்திலேயே தமிழ்நாடு கால் பதித்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. சென்னை நகர வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருள் விற்பவை, இந்தியாவின் அனைத்து முக்கிய நகர வாடிக்கையாளருக்கும் பொருள் விற்பனை செய்பவை, வெளிநாட்டுத் தமிழர்களுக்கு விற்பனை செய்பவை எனப் பலவகையான இணைய அங்காடிகள் சென்னை நகரில் உருவாக்கப்பட்டன. இவ்வாறு தமிழ்நாட்டில் மின்வணிகத்தின் முன்னோடிகளாக உருவான இணைய அங்காடி வலையகங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: (1) இணைய வணிகத்துக்காகவே உருவாக்கப்பட்ட வலையகங்கள். (2) இணையம் வழியாகவும் விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களின் வலையகங்கள். (3) வணிகமல்லாத வேறு நோக்கங்களுக்காக நிறுவப்பட்டு, வெளிநாட்டுத் தமிழர்களுக்குச் சிலவகைப் பொருள்களை விற்பனை செய்யும் வலையகங்கள்.
முதலாவது வகையில் முதன்முதலில் சென்னை நகரை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்ட வலையகம் www.chennaibazaar.com. தொடக்கத்தில் இரண்டா யிரத்துக்கு மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்கு இருந்தன. இந்தியாவில் எந்த நகரத்தில் இருப்போரும் பொருட்கள் வாங்கலாம். வெளிநாட்டினர் இந்தியாவிலுள்ள உறவினர், நண்பர்களுக்கு இந்த வலையகம் மூலம் பரிசுப் பொருள்களை அனுப்பி வைக்க முடியும். தொடக்க காலங்களில் வங்கிக் காசோலை, வரைவோலை மூலமே பணம் செலுத்த முடியும். பிறகு, கடன் அட்டை மூலம் பணம் செலுத்த வகை செய்யப்பட்டது. தமிழ் மென்பொருள் தொகுப்புகளை விற்பதற்கெனத் தொடங்கப்பட்ட வலையகம் www.tamilsoftware.org ஆகும். தமிழ் சொல்செயலிகள், எழுத்துருக்கள், குழந்தைப் பாடல் குறுவட்டுகள் முதலியவை விற்பனை செய்யப்பட்டன.
இரண்டாவதாக, இணைய வணிகத்தில் முதன்முதலாக ஈடுபட்ட நிறுவனம் என திருமண அழைப்பிதழ் அட்டை விற்பனையில் முன்னோடி நிறுவனமான ‘ஒலிம்பிக் கார்ட்ஸ்’ நிறுவனத்தைக் கூறலாம். இந்நிறுவன வலையகத்தில் www.olymbiacards.com அழைப்பிதழ் அட்டைகளைத் தேர்வு செய்து வாங்கிக் கொள்ள வாய்ப்புத் தரப்பட்டது. இந்த வகையில் இன்னொரு நிறுவனம் ‘லியோ காபி’ ஆகும். தற்போது பல்வேறு முன்னணி வணிக நிறுவனங்கள் இணைய வணிகத்திலும் ஈடுபடுகின்றன. குறிப்பாகப் புத்தக வெளியீட்டு நிறுவனங்கள் அவை வெளியிட்டுள்ள புத்தகங்களை இணையம்வழி வாங்கிக் கொள்ளவும் வழிசெய்கின்றன. எடுத்துக்காட்டாக, ‘எனி இந்தியன்’ www.anyindian.com பதிப்பகத்தைக் கூறலாம்.
மூன்றாவது வகை வலையகத்துக்கு எடுத்துக்காட்டாக, www.tamilcinema.com என்னும் இணைய இதழ் வலையகத்தைச் சொல்லலாம். இந்த வலையகத்தைப் பெரும்பாலான வெளிநாட்டுத் தமிழர்கள் பார்வையிடுகின்றனர் என்ற காரணத்தால் அவர்கள் பயனுறும் வகையில் இந்த வலையகத்தின் ஓர் அங்கமாக ஒரு புத்தக அங்காடியும் செயல்பட்டது. 5000-க்கு மேற்பட்ட தமிழ் நூல்கள் விற்பனைக்குக் கிடைத்தன. தமிழ் வார மாத இதழ்களுக்குச் சந்தா செலுத்தவும் முடியும்.
-