Primary tabs
2.2 மின்னணுத் தகவல் பரிமாற்றம் (Electronic Data Interchange - EDI)
அந்தக் காலத்தில் தகவல் பரிமாற்றத்துக்கு அஞ்சல் நிலையங்களையே நம்பி இருந்தோம். அஞ்சல் நிலையங்கள் மூலமாக நடைபெறும் தகவல் பரிமாற்றம் கடிதப் போக்குவரத்து வடிவில் நடைபெறுகிறது. அடுத்து வந்தது தந்திவழித் தகவல் பரிமாற்றம். இது மின்சாரக் குறிகையை (Electric Signal) அடிப்படையாகக் கொண்டது. அடுத்துத் தொலைபேசி இணைப்பகம் வழியாக நடைபெறும் தகவல் பரிமாற்றம். தொலைபேசி ஊடகத்தில் தகவல் மின்காந்த அலைகளாய்ப் பயணித்த போதும், இருவருக்கிடையே பேச்சு மூலமான தகவல் பரிமாற்றமே நடைபெறுகிறது. இந்த வரிசையில் இறுதியாக வருவது கணிப்பொறிப் பிணையங்கள் வழியான மின்னணுத் தகவல் பரிமாற்றம் (Electronic Data Interchange). சுருக்கமாக ‘இடிஐ’ (EDI) எனலாம். பொதுவாகக் கணிப்பொறிப் பிணையங்கள் வழியான அனைத்துத் தகவல் பரிமாற்றங்களையும் ‘இடிஐ’ என அழைக்கலாம் என்ற போதிலும், குறிப்பிட்ட வகையான தகவல் பரிமாற்றத்துக்கே ‘இடிஐ’ என்ற பெயர் புழக்கத்தில் வழங்கி வருகிறது. ‘இடிஐ’ என்பது எதைக் குறிக்கிறது, அதன் வளர்ச்சி எப்படிப்பட்டது, அதன் பயன்கள் யாவை என்பது பற்றியெல்லாம் இப்பாடப் பிரிவில் அறிந்து கொள்வோம்.
2.2.1 இடிஐ என்றால் என்ன?
மின்வணிகத்தின் பரிணாம வளர்ச்சி மின்னணுத் தகவல் பரிமாற்றத்திலிருந்துதான் தொடங்கியது எனலாம். மின்னணுத் தகவல் பரிமாற்றம் (சுருக்கமாக ’இடிஐ’) என்றால் என்ன? இரண்டு வணிக நிறுவனங்கள் தமக்கிடையே ஒரு வணிக நடவடிக்கையோடு தொடர்புடைய வணிக ஆவணங்களைக் கணிப்பொறித் தகவலாக மாற்றி முன்வரையறுக்கப்பட்ட வடிவமைப்பில் கணிப்பொறிப் பிணையங்கள் வழியாக பரிமாறிக் கொள்வதே ‘இடிஐ’ என அழைக்கப்படுகிறது. ஒரு வணிக நடவடிக்கை எவ்வாறு நடைபெறுகிறது எனப் பார்ப்போம்.
ஒரு வணிக நிறுவனம் இன்னொரு வணிக நிறுவனத்திடம் சில பொருட்களை வாங்க விரும்புகிறது. இதற்கான கோரிக்கைக் கடிதத்தை அனுப்பி வைக்கிறது. விற்கும் நிறுவனம் அப்பொருள்களின் விலைக்குறிப்பை (Quotation) வாங்கும் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கும். விலை ஏற்கும்படி இருந்தால் அப்பொருட்களை வாங்குவதற்கான கொள்முதல் கோரிக்கையோடு (Purchase Order), உரிய தொகையைக் காசோலை அல்லது வரைவோலையாக விற்பனை நிறுவனத்துக்குச் சமர்ப்பிக்கும். அப்பொருட்களை லாரியிலோ, இரயிலிலோ அனுப்பி வைத்த கையோடு பொருட்களின் விலைப்பட்டியலையும் (Invoice) பொருள் வினியோகச் சீட்டையும் (Delivery Challan) விற்கும் நிறுவனம் அனுப்பி வைக்கும். காசோலை அல்லது வரைவோலை விற்கும் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுப் பணம் அதன் கணக்குக்கு மாற்றப்படும். வாங்கும் நிறுவனம் பழுதின்றிப் பொருள்களைப் பெற்றுக் கொண்டதாகப் பொருள் வினியோகச் சீட்டின் நகலில் கையொப்பமிட்டு விற்கும் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கும்.
மேற்கண்ட வணிக நடவடிக்கையில் மூன்று முக்கிய கூறுகள் அடங்கியுள்ளன: (1) விற்பனை தொடர்பான தகவல் பரிமாற்றம். (2) பணம் செலுத்துகை. (3) பொருள் வினியோகம். இவற்றுள் தகவல் பரிமாற்றம் வெகு காலமாக அஞ்சல் வழியாகவே நடைபெற்று வந்தது. அதற்கு ஆகும் காலம் எவ்வளவு எனச் சற்றே கணக்கிட்டுப் பாருங்கள். மேற்கண்ட தகவல் பரிமாற்றங்களை இரு நிறுவனங்களின் கணிப்பொறிப் பிணையங்களையும் உள்ளடக்கிய ஒரு மூன்றாவது பொதுப் பிணையம் மூலமாக மிக எளிதாக, மிக விரைவாகப் பிழையின்றி நிறைவேற்றி முடிக்க முடியும். இத்தகைய தகவல் பரிமாற்றத்துக்கு நாம் ஏற்கெனவே நன்கறிந்த ‘மதிப்பேற்று பிணையங்கள்’ (Value Added Networks) பயன்படுகின்றன. இவ்வாறு மதிப்பேற்று பிணையங்கள் வழியாக இரு நிறுவனங்களுக்கிடையே நடைபெறும் தகவல் பரிமாற்றமே ‘இடிஐ’ என அழைக்கப்பட்டது. தற்காலத்தில் இத்தகைய வணிகத் தகவல் பரிமாற்றங்கள் இணையம் வழியாகவும் நடைபெறுகின்றன.
தகவல் பரிமாற்றத்தைப் போலவே பணப் பரிமாற்றமும் இரு நிறுவனங்களும் கணக்கு வைத்துள்ள இருவேறு வங்கிப் பிணையங்களையும் உள்ளடக்கிய ஒரு பொதுப் பிணையம் (பணம்செலுத்து நுழைவாயில் - Payment Gateway) வழியாக மிக எளிதாக நிறைவேற்றி முடிக்க முடியும். இத்தகு பணப் பரிமாற்றம் மின்னணுப் பணப் பரிமாற்றம் (Electronic Fund Transfer) எனப்படும். இதுபற்றி அடுத்த பாடத்தில் (பாடம் 4.3) விரிவாகப் படிக்க இருக்கிறோம்.
வணிக நடவடிக்கையின் மூன்றாவது கூறான பொருள் வினியோகம் பெரும்பாலும் கணிப்பொறி வழியே நடைபெறுவதில்லை. அஞ்சல் அல்லது வாகனங்கள் மூலமே நடைபெறும். கணிப்பொறிப் பிணையம் வழியாகவே வாங்கிக் கொள்கின்ற பொருள்களும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. மின்னூல்கள் (e-books), நிகழ்படங்கள் (videos), இசைப்பாடல்கள், மென்பொருள்கள், வாழ்த்து அட்டைகள், சட்டம், மருத்துவம் மற்றும் பிற ஆலோசனைகள் இவற்றைப் பிணையம் வழியாகவே பதிவிறக்கிக் கொள்ள முடியும். ஆக, முழு வணிக நடவடிக்கையும் கணிப்பொறி, பிணையம் வழியாகவே நடைபெற்று முடிவதும் சாத்தியமே.
2.2.2 மின்னணுத் தகவல் பரிமாற்றத்தின் வளர்ச்சி்
உலகம் தழுவிய அளவில் மின்னணுத் தகவல் பரிமாற்றத்தின் வளர்ச்சிக்கு மூன்று முக்கிய கூறுகள் உதவியுள்ளன:
-
வணிக நடவடிக்கையில் பயன்படுத்தப்படும் வணிக ஆவணங்கள் குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்ட முறையில் வடிவமைக்கப்பட உலகளாவிய ‘இடிஐ தரப்பாடுகள்’ (EDI Standards) உருவாக்கப்பட்டுள்ளன.
-
இத்தகைய வணிக ஆவணங்களைக் கணிப்பொறிகளில் கையாள்வதற்கென தனிச்சிறப்பான ‘இடிஐ மென்பொருள்’ (EDI Software) தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
-
உலகளாவிய முறையில் வணிகத் தகவல் பரிமாற்றத்துக்கெனவே தனிச்சிறப்பான மதிப்பேற்று பிணையங்கள் (Value Added Networks) அரசு மற்றும் தனியார் துறைகளில் செயல்படுகின்றன.
இடிஐ ஆவணங்களின் தரப்பாடுகளை அமெரிக்காவின் அன்சி (ANSI - American National Standards Institute), ஐநா மன்றத்தின் ‘எடிஃபேக்ட்’ (EDIFACT - EDI for Administration, Commerce and Transport), ஐஎஸ்ஓ (ISO - International Organisation for Standardization) ஆகிய அமைப்புகள் சேர்ந்து உருவாக்கியுள்ளன. இடிஐ தகவல்களைக் கணிப்பொறிப் பிணையங்களில் கையாள்வதற்கான தரப்பாடுகளை சிசிஐடீடீ (CCITT - Consultative Committee for International Telegraphy and Telephony) அமைப்பு உருவாக்கியுள்ளது. வெவ்வேறு வணிக நிறுவனங்கள் கையாளும் வெவ்வேறு வடிவிலான வணிக ஆவணங்களை முன்வரையறுக்கப்பட்ட குறிப்பிட்ட வடிவமைப்பில் மாற்றித் தகவல் தடங்களில் அனுப்பி வைக்கும் பணியை இடிஐ மென்பொருள்கள் செய்கின்றன.
மின்னணுத் தகவல் பரிமாற்றத்துக்கான மதிப்பேற்று பிணையங்கள் உலகம் முழுவதிலும் இயங்கி வருகின்றன. அமெரிக்காவின் ஐபிஎம் குளோபல் நெட்வொர்க், ஜெனரல் எலெக்ட்ரிக்கல் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ், இங்கிலாந்தின் பிரிட்டிஷ் டெலிகாம் இவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. இந்தியாவில் மைய அரசின் நிக் (NIC - National Informatics Centre) நிறுவனத்தின் ‘நிக்நெட்’ (NICNet), விதேஷ் சஞ்சார் நிகத்தின் (தற்போது டாட்டா டெலிசர்வீசஸ்) ஜிஇடிஐஎஸ் (GEDIS), இந்தியத் தொலைதொடர்பு நிறுவனத்தின் ஐ-நெட் (தற்போது எம்எல்எல்என்) ஆகியவை மின்னணுத் தகவல் பரிமாற்றத்தின் முன்னோடிகளாகும்.
2.2.3 மின்னணுத் தகவல் பரிமாற்றத்தின் பயன்கள்
வணிக நடவடிக்கையின் தகவல் பரிமாற்றம் மரபு வழியில் தட்டச்சிட்ட தாள்கள் வடிவில் அஞ்சல் வழியாக நடைபெறுவதைக் காட்டிலும் கணிப்பொறி வழியாக நடைபெறுவதில் பல்வேறு பயன்கள் ஏற்படுகின்றன. அவற்றுள் சில
- முற்றிலும் கணிப்பொறி வழியிலான தகவல் பரிமாற்றம் விரைவாக (உடனுக்குடன்) நடந்து முடிகிறது. கால விரயம் தவிர்க்கப்படுகிறது.
- அனைத்தும் கணிப்பொறித் தகவல்கள் என்பதால் தரவுகளின் துல்லியம் (accuracy) காப்பாற்றப்படுகிறது.
- விவரங்களை ஒரேயொரு முறைமட்டும் உள்ளீடு செய்தால் போதுமானது. விலைக்குறிப்பு, கொள்முதல் கோரிக்கை, விலைப்பட்டியல், வினியோகச் சீட்டு ஆகியவற்றில் பொருள்களின் பெயர், விலை ஆகியவற்றையும், பணப் பரிமாற்றம், வங்கிக் கணக்கில் தொகையை விடுவித்தல்/வரவுவைத்தல் ஆகியவற்றில் தொகைகளை மீண்டும் மீண்டும் உள்ளிடுவது அல்லது தட்டச்சிடுவது தவிர்க்கப்படுகிறது.
- ஒரே விவரத்தை மீண்டும் மீண்டும் உள்ளிடுவதால் ஏற்படும் பிழைகள் தவிர்க்கப்படுகின்றன.
- தாள் வடிவிலான தகவல்களைச் சேமிக்கவும், பராமரிக்கவும் செலவு அதிகமாகும். அதனோடு ஒப்பிடுகையில் இடிஐ தகவல் பரிமாற்றத்துக்குச் செலவு குறைவு.
- செலவுகள் குறைவதால் மறைமுகமாகப் பொருளின் அடக்கவிலை குறைகிறது. அதன் காரணமாய்ப் பொருளின் விற்பனை விலையும் குறைய வாய்ப்புண்டு.
- பிழையற்ற, துல்லியமான, விரைவான தகவல் பரிமாற்றத்தின் காரணமாக வணிக உறவுகள் சுமூகமாக அமைகின்றன.
- சரியான நேரத்தில் தகவல்கள் உடனுக்குடன் கிடைத்து விடுவதால் வருங்கால வணிகத் திட்டங்களையும், யுக்திகளையும் விற்பனை முன்கணிப்புகளையும் மிகத் துல்லியமாகச் செய்ய முடிகிறது.
-