தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A0111-நீலகேசி

    • 6.3 நீலகேசி

      தமிழில் தோன்றிய முதல் தருக்க நூல் இதுவெனக் கூறலாம். இது குண்டலகேசிக்கு மறுப்பாக எழுந்த நூலாகும். பழையனூர் நீலியே குண்டலகேசியாகப் பிறந்து சமண சமயத்தினும் பௌத்த சமயமே மேலோங்கியது என உணர்த்துவது குண்டலகேசிக் காப்பியம். அதே பழையனூர் நீலியே நீலகேசியாகப் பிறந்து குண்டலகேசியை வாதில் வென்று சமணமே உயர்ந்த சமயம் என நிறுவுகிறது நீலகேசிக் காவியம். குண்டலகேசி, நீலகேசி, அஞ்சனகேசி, காலகேசி போன்ற நூல்கள் தருக்க நூல்களாகவே அமைந்துள்ளன. தருக்கவியல் சிந்தனையை மணிமேகலைக் காப்பியம் பின்னைய காதைகளில் பேசினாலும், அதனை முழுமையாகப் பேசுவது நீலகேசி மட்டுமே. பின்னர் இத்தருக்கச் சிந்தனை சிவஞான சித்தியார், சிவஞான போதம் முதலான சைவ சித்தாந்த நூல்களில் சிறப்பாகப் பேசப்படுகிறது. என்றாலும் இத்தகைய சித்தாந்த நூல்களுக்கு நீலகேசியே மூலாதாரம் என்பது தெளிவு.

      6.3.1 நீலகேசி - பெயர்க்காரணம்

      நீலகேசி என்பது ‘கேசி’ என்று முடியும் பெண்பால் பெயர்களுள் ஒன்று. கேசி அழகிய கூந்தலை உடையவள்; நீலகேசி - அழகிய கருங்கூந்தலை உடையவள் என்பது பொருள்.

      நீல நிறத்தனவாய் நெய்கனிந்து போதுஅவிழ்ந்து
      கோலம் குயின்ற குழல்வாழி நெஞ்சே

      (வளையாபதி 3: 1-2)

      என்ற வளையாபதிப் பாடல் ‘நீலகேசி’ சொல்லுக்கு விளக்கமாக அமையும். மகாபாரத்தில் திரௌபதி கூந்தலை அவிழ்த்து விட்டுச் சூளுரைத்ததுபோல இங்கு நீலகேசி, சமய வாதத்தில் இறங்கி, தர்க்க ரீதியாகப் பிற சமயத்தாரோடு வாதிட்டுத் தன் சமயத்தை நிலைநாட்டிய பின்னரே கூந்தலை முடிப்பது எனச் சபதம் செய்து வென்றதையே நீலகேசி உணர்த்துகிறது.

      6.3.2 காப்பியக் கட்டமைப்பு

      நீலகேசி 894 பாடல்களைக் கொண்டது; இவை விருத்தப்பாக்களில் அமைந்தவை. தரும உரைச் சருக்கம், குண்டலகேசி வாதச் சருக்கம், அருக்க சந்திர வாதச் சருக்கம், மொக்கல வாதச் சருக்கம், புத்தவாதச் சருக்கம், ஆசீவக வாதச் சருக்கம், சாங்கியவாதச் சருக்கம், வைசேடிக வாதச் சருக்கம், வேதவாதச் சருக்கம், பூதவாதச் சருக்கம் எனப் பத்துச் சருக்கங்களைக் கொண்டது. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்று இக்காப்பியமும் பெண்ணையே தலைமைப் பாத்திரமாகக் கொண்டு திகழ்கின்றது. அருகன் துதி, சித்தர் - ஆச்சாரியர் - உபாத்தியாயர் - சாதுக்கள் துதி, அவையடக்கம், பதிகம் எனப் பாயிரப் பகுதி ஒன்பது பாடல்களில் அமைகின்றது. காப்பியம் நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு கூறித் தொடங்குகிறது. இந்நூல் நீலம், நீலகேசித் தெருட்டு, நீலகேசித்திரட்டு என்னும் வேறு பெயர்களாலும் வழங்கி வருகின்றது.

      6.3.3 பௌத்த சமய வாதம்

      பாஞ்சால நாட்டின் புண்டர வருத்தனம் என்னும் நகரில் கதை தொடங்குகிறது. இங்கு ஆட்சி செய்தவன் சமுத்திர ராசன். இந்நகரின் சுடுகாட்டுப் பகுதியே பாலாலயம் என்ற சுடுகாடு. பேய்க்கணம் சூழ இங்குக் குடி கொண்ட தெய்வமே பிடாரி. இத்தெய்வ அருளால் ஆண்மகவு பெற்ற நங்கைக்காக நன்றிக் கடன் செலுத்த நகர மக்கள் ஆட்டைப் பலி கொடுக்க வருகின்றனர். அங்குத் தவம் செய்து கொண்டிருந்த சமண முனிவர் முனிச்சந்திரன் “தெய்வங்களுக்கு உயிர்ப் பலியிடுதல் தீவினை” என அறிவுறுத்தினார். அதோடு அவர் அருளுரை ஏற்ற நகர மக்கள் அவர் ஏவல்படியே மண்ணால் ஆட்டு உருவம் செய்து பலி கொடுத்துத் தம் விரதம் முடிக்கின்றனர். இதனால் தமக்கு ஊன் உணவு கிடைக்கப் பெறாத பேய்க்கணம் முனிவரை அகற்ற வலிமை வாய்ந்த ‘நீலகேசி’ என்ற பேயை அழைத்து வருகின்றான். முனிச்சந்திரனின் தவ ஆற்றலை அறிந்த நீலகேசி புறத்தே நின்று அச்சுறுத்தியும், மாயாஜாலம் காட்டியும், கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறது. பல்வேறு உருவங் கொண்டு முனிவரை வீழ்த்தவும் முயற்சி செய்கிறது. பின் அழகிய காமலோகை என்னும் பெண் உருக் கொண்டு காமத்தால் மயக்க முற்படுகிறது. எதற்கும் சிறிதும் அஞ்சாத முனிச்சந்திரன் தன் ஒதி ஞானத்தால் அவள் யார் என்பதை உணர்ந்து அவளை நல்லறப்படுத்துகிறார். மேலும் அவர், நீலகேசிக்கு மக்கள், தேவர், நரகர், விலங்கு எனும் நான்கு வகைப் பிறப்பால் வரும் தீமைகளை எடுத்துரைக்கிறார். அதோடு சமணத் தத்துவங்களை எல்லாம் அவளுக்குப் போதிக்கிறார்.

      ‘உயிர் முதலிய உள்பொருள்களை மனம் மற்றும் பொறிகளால் காணுதல்; நினைவு, மீட்டுணர்வு, ஊகம், கருத்து, நூல் என்னும் அளவைகளால் உணர்தல்,  இவை நன்ஞானம், உலக மூடம், பாசண்டி மூடம், தெய்வ மூடம் இவற்றை அழித்து, காமம், அச்சம், அவா, உலகியல், பிற சமயக்கணக்கர், போலித் தலைவர் இவற்றை நீக்கி, ஞானம், பூசை, குலம், சாதி, பலம், இருத்தல், தவம், உடல் இவற்றால் தோன்றும் எட்டுவகைச் செருக்கை நீக்கி, நிலைத்தல், நற்காட்சி. நன்ஞானம், நற்காட்சியோடு நன்றின்பால் செல்வது நல்ஒழுக்கம்.

      இவ்வாறு சமண அறம் உரைத்த முனிச்சந்திர முனிவர் இந்நல் அறங்களை உலகிற்குப் பரப்புமாறு நீலகேசியைப் பணிக்கிறார். அவளும் அவ்வண்ணமே காம்பிலி நாடு சென்று பௌத்த சமயக் கொள்கையில் நிறைந்த புலமையும் சிறந்த வாதத் திறமையும் கொண்ட குண்டலகேசியுடன் சமய வாதம் செய்து, பௌத்த சமயக் கொள்கை ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று; ஜின தருமமே உயர்ந்தது என நிலைநாட்டிக் குண்டலகேசியைத் தன் சமயக் கொள்கையை ஏற்கச் செய்கிறாள். அடுத்துக் குண்டலகேசியின் ஆசிரியர் அருக்க சந்திரனை உஞ்சை மாநகரில் சந்தித்து அவரையும் வாதில் வெல்கிறாள். பின் அருக்க சந்திரனின் ஆசிரியர் மொக்கலனைப் பதுமபுரத்தில் சந்தித்து வாதிட்டு வெல்கிறாள். அவர் நீலகேசியை ஞானாசிரியராகக் கொண்டு சமண சமயத்தைத் தழுவுகிறார். இறுதியாகக் கபிலபுரம் சென்று பௌத்த சமயத்தை நிறுவிய புத்தரையே சந்தித்து வெல்கிறாள். இவ்வாறு நூலின் பாதிக்கு மேற்பட்ட பகுதி பௌத்த சமய மறுப்பாகவே அமைகிறது. புத்த சாதகக் கதைகளிலுள்ள குறைபாடு, சமயத் தத்துவத்தில் காணப்படும் முரண்பாடு மற்றும் பௌத்த சமயத் துறவிகளின் ஆடம்பரமான வாழ்க்கை ஆகியவற்றைச் சுட்டியே சமய வாதம் நிகழ்கிறது.

      6.3.4 பிற சமய வாதம்

      பௌத்த சமய மறுப்பாக எழுந்த நீலகேசி பௌத்த சமயக் கோட்பாடுகளை முழுமையாக விவாதித்து, அவற்றினும் மேலானவை சமண சமயக் கோட்பாடுகள் என எடுத்துரைப்பது. ஆசிரியரின் சமயப் புலமைக்கு இது சான்றாகிறது. பௌத்த சமயம் மட்டுமன்றி ஆசீவகம், சாங்கியம், வைசேடிகம், வேதம், லோகாயுதம் ஆகிய அறிவார்த்தமான சமயச் சிந்தனைகளையும், அவ்வச் சமயக் கணக்கரொடு வாதம் செய்து சமணத்தின் சிறப்பினையும் எடுத்துரைக்கும் நீலகேசி ஆசிரியரின் பிற சமயப் புலமை மேலும் விளங்குகிறது.

      நீலகேசி கபிலையில் புத்தனை வென்று, தமிழகத்தில் உறையூரை அடைந்து அங்குள்ள அருகக் கடவுளை வணங்கி மீண்டும் வடநாடு செல்கிறாள். அங்குச் ‘சமதண்டம்’ நகரை அடைந்து ஆசீவக சமயத் தத்துவ ஞானி பூரணனைச் சந்தித்துச் சமய வாதத்தில் ஈடுபடுகிறாள். இங்குச் சாங்கியத்தைத் தோற்றுவித்த ‘மற்கலி’ பற்றியும், அவர்தம் வேதமான ‘நவகதிர்’ நூல் பற்றியும் விவாதம் நிகழ்கிறது. இங்கு ஆசீவகரின் நிலம், நீர், தீ, காற்று, உயிர் ஆகிய அணுக்கோட்பாடும், உள்ளது கெடாது, இல்லது தோன்றாது, ஆவது ஆகும், ஆகுமாறே ஆகும், ஆகும் அளவே ஆகும், ஆகும் காலத்தே ஆகும் என்னும் கோட்பாடுகளும் தருக்க ரீதியாக மறுக்கப்படுகின்றன.

      அடுத்து அத்தினாபுரத்தில் சமயச் சொற்போர் நிகழ்த்தும் பராசரன் என்னும் சாங்கியத் தத்துவ வாதியுடன் விவாதிக்கிறாள் நீலகேசி. இங்குச் சாங்கியத் தத்துவத்தில் ‘பரமாத்மா’ பற்றிய கோட்பாடு விவாதிக்கப்படுகிறது. அவன் செயலற்றவன், குணமற்றவன், உள்பொருளாய் உள்ளவன், வேற்றுமை இல்லாதவன், பற்றில்லாதவன், அழிவற்றவன், காண்பானும் நுகர்வானும் ஆவான் என்பவை விவாதத்தில் நீலகேசியால் மறுக்கப்படுகின்றன. பின் பராசரன் கொள்கையைச் சிதைத்து அவனைச் சமணத்தைத் தழுவச் செய்து, வைசேடிக சமய ஆசிரியன் உலக சித்து என்பவனை வெல்ல அவனது தவப் பள்ளி அடைகிறாள். இங்குத் திரவியம், குணம், தொழில், பொது, சிறப்பு, கூட்டம் என்னும் வைசேடிக தத்துவங்களில் பின்னைய மூன்றும் மறுக்கப்பட்டு உலக சித்து சமண சமயம் சார்கிறான்.

      உலக சித்தை வென்ற நீலகேசி பூதியன் என்னும் வேதியனைக் காகந்தி நகரில் எதிர் கொண்டு, வேத சமயத்தை குறிப்பாக வேதம் அநாதி; அது ஆதியும் அந்தமும் இல்லாத சுயம்பு என்பதை அநாதியாகக் கிடக்கும் மலத்தைச் சுட்டி மறுக்கிறாள். பின் வேதியரின் சாதீயக் கோட்பாடும், அவர்தம் வேள்விக் கொலையும், ஊன் உண்ணும் வழக்கமும் பழிக்கப்படுகின்றன. இது ஒருவகையில் ஆரியர் எதிர்ப்புக் குரலாக வெளிப்படுகிறது. இறுதியாகக் கடவுளும் மறுபிறப்பும் இருவினைப் பயனும் இல்லை என்கின்ற பூதவாதச் சிந்தனையாளரான பிசாசிகனுடன் வாதிட்டு, வென்று அவனுக்கும் சமண நல்லறம் ஓதி அவனைத் திருத்துகிறாள். இங்ஙனம் நீலகேசியின் காப்பியக் கட்டமைப்பு முழுக்க முழுக்கச் சமய வாதமாக அமைகின்றது. தமிழில் தோன்றிய முதல் ‘தருக்க இலக்கியம்’ இது எனலாம்.

      6.3.5 காப்பிய நோக்கம்

      நீலகேசிக் காப்பியம் முழுக்க முழுக்கப் பல சமயத் தத்துவங்களின் உண்மைத் தன்மையை விவாதிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஏன்? எதற்காக இப்படி ஒரு நூலை ஆசிரியர் எழுதியுள்ளார்? தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய மு. அருணாசலம் உட்பட இக்காப்பியம் சுவையற்றது; கற்பனையானது என்று, எதிரான, முரணான கருத்தையே சொல்கின்றனர். ஆனால் உண்மை அது அல்ல. இதன் தத்துவம் பலருக்கும் விளங்காத ஒன்று என்பதாலே இக்காப்பியம் போற்றப்படவில்லை. ஆனால் இந்தியத் தத்துவம் படித்தோர் இதனைப் போற்றுவர். ஆசிரியர் தம் காலத்தில் நிலவியிருந்த அனைத்துச் சமயச் சிந்தனைகளையும் எடுத்துரைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார்.

      தெய்வங்களுக்கு உயிர்ப்பலி இடுதல் தீமையே என்பதை எடுத்துரைக்கிறது. இறைவன் அருளிய அறநெறியில் ஐயுறல் கூடாது; பேராசை தவிர்க்க வேண்டும்; மெய்த்துறவோரை மதித்தல் வேண்டும்; நட்பு, புகழ் இவற்றால் மயங்குதல் கூடாது; பிறர் குற்றங்களை அகற்ற வேண்டும்; முறை தவறி நடப்பாரைத் திருத்த வேண்டும்; யாவரிடமும் மெய்யான அன்பு செலுத்த வேண்டும்; மாந்தர்தம் அறியாமை போக்க வேண்டும் என்று பல உலக நீதிகளை இந்த நூல் எடுத்துரைக்கிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 24-07-2017 17:14:17(இந்திய நேரம்)