தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

 • 6.6 தொகுப்புரை

  ‘ஐஞ்சிறு காப்பியங்கள்’ என்ற பாகுபாடு எழுந்ததற்கான காரணம் புலப்படவில்லை. இது வடமொழி மரபைப் பின்பற்றினாலும் சூளாமணியை இப்பகுதியில் அடக்கியது பொருந்தாத ஒன்றே. இங்குப் பேசப்படும் ஐந்தும் சமண சமயம் சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இவை ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு நோக்கங்கள் உண்டு என்பதைப் பார்த்தோம். சூளாமணி பெருங்காப்பிய அமைப்புடன் மூன்று தலைமுறையினரின் வாழ்க்கையை முழுமையாக விவரிக்கிறது. அருக சமயப் பிரச்சார நோக்கில் காப்பியம் எழுதப்பட்டாலும், இக்காப்பியம் கட்டமைப்பில் சீவகசிந்தாமணியை ஒத்தே அமைகின்றது என்பதைத் தெரிந்துகொண்டீர்கள்.

  யசோதர காவியம் நான்கு வகையான பிறப்புகளில் விலங்குப் பிறப்பின் துன்பங்களை மிக விரிவாகப் பேசுகிறது. மனிதப் பிறவியில் நாம் செய்கிற பாவங்களில் ஊன் உண்ணுதல், உயிர்க் கொலை, பரத்தமை ஒழுக்கம் இவற்றால் ஏற்படும் விலங்குகதித் துன்பத்தை விரிவாக எடுத்துரைக்கிறது என்பதை அறிந்தீர்கள். மேற்கண்ட பாவங்களிலிருந்து மனிதனை விலக்குவதே இக்காப்பியத்தின் நோக்கமாக அமைகின்றது என்பதையும் புரிந்து கொண்டீர்கள்.

  நீலகேசிக் காப்பியம், பிற காப்பியங்கள் போன்று பொய், களவு, கொலை, காமம் இவற்றை நீக்குவதைக் கருத்தாகக் கொண்டிருந்தாலும், இது தத்துவ வாதத்திற்கே முதன்மை தருகிறது. தமிழில் தோன்றிய முதல் தருக்க நூல் இதுவே எனப் பார்த்தோம். இதனை ஒரு சிறந்த ‘தத்துவ ஞானநூல்’ என்றால் அது மிகையாகாது. தமிழுக்குக் கிடைத்த ஒரு மிகப் பெரிய கொடையாகிய இந்நூல் இன்று வரை தமிழ் அறிஞர்களிடம், தமிழ் மாணவர்களிடம் முழுமையாக அறிமுகப்படுத்தப்படவில்லை. பொதுவாக சைன சமய இலக்கிய வாதிகள் பல்துறை அறிவுடையவர்களாக அமைவர் என்பதற்கு ‘நீலகேசி’ சிறந்த சான்றாக அமையும். உதயண குமார காவியமும், நாககுமார காவியமும் அவ்வளவு சிறப்புடையன அல்ல. இவை பெயரளவில் மட்டுமே தமிழர் இலக்கியத்தில் அறிமுகமாகியுள்ளன.

  தன் மதிப்பீடு : வினாக்கள் - II
  1.

  நீலகேசிக் காப்பியத்தின் தலையாய நோக்கம் யாது?

  2.

  ஆசீவக சமயச் சிந்தனையாக நீலகேசி கூறுவன யாவை?

  3.

  உதயண குமார காவியம் படைத்ததற்கான நோக்கம் யாது?

  4.

  நாக குமார காவிய ஆசிரியர் அருகக் கடவுளை எவ்வாறு போற்றுகிறார்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 22-07-2017 15:38:42(இந்திய நேரம்)