தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A0111-6:4

  • 6.4 உதயண குமார காவியம்

    சீவக சிந்தாமணி, கந்தபுராணம் முதலான பேரிலக்கியங்களுக்குச் சுருக்கம் பாடுகிற மரபு காணப்படுகிறது. இவ்வகையில் கொங்குவேளிரின் பெருங்கதைக் காப்பியத்திற்குச் சுருக்க நூலாகப் பாடப்பட்டதே உதயணகுமார காவியம். இது சமண சமயப் பெண்பால் துறவியரில் ஒருவரான கந்தியர் என்பவரால் பாடப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதுவர். 369 பாடல்களைக் கொண்டது. பெருங்கதை அமைப்பையே கொண்டு இந்நூலும் உஞ்சை காண்டம், மகத காண்டம், இலாவண காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம் என ஐந்து காண்டங்களுடன் அமைகிறது. கூடுதலாகத் துறவுக் காண்டம் ஒன்றும் இதில் இடம் பெறுகின்றது. பெருங்கதையின் முதல் பகுதியும் இறுதிப் பகுதியும் நமக்குக் கிடைக்கவில்லை. பெருங்கதையில் கிடைக்கப் பெறாத கதைக் குறிப்புகளை ஓரளவு அறிந்து கொள்வதற்கு இந்நூல் துணை செய்கிறது. ஏனைய சிறுகாப்பியங்களுக்கு இருந்த நோக்கம், நெறி இந்நூலுக்கு இல்லை. பெருங்கதைக்குச் சுருக்க நூலாக அமைவதன்றி வேறு சிறப்புகள் இந்நூலுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. காப்பிய வருணனைக் கூறுகள் அவ்வளவு சிறப்பாக இல்லை. கதையை மட்டும் தெளிவாகக் கூறிச் செல்கிறது.

    6.4.1 இலக்கியச் சுவை

    உதயண குமார காவியம் இலக்கியச் சுவை இன்றிக் காணப்படுவதாக அறிஞர் கருதுவர். கதைச் சுருக்கத்தைச் சொல்வதால், வருணனைத் திறன் இன்றிக் காணப்படுகிறது எனலாம். காப்பியக் கதை அமைப்பிற்கு ஏற்பத்தான் கவிதை அமையும் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. வஞ்சிக் காண்டம் சிலப்பதிகாரத்தில் சுவை குறைந்து காணப்படுவதாகக் கருதுவதற்கும் அக்காண்டப் பாடுபொருளே காரணமாகும். அந்த வகையில்தான் இக்காவியமும் அமைகிறது. என்றாலும் முழுக்க முழுக்க இதன் கவிதைச் சிறப்பைத் தள்ளிவிட முடியாது. இதன் ‘விருத்தப்பா’ அமைப்பு சில இடங்களில் இலக்கிய நயமுடன் அமைவது குறிப்பிடத்தக்கது.

    மதயானையின் கம்பீரமான நடையை இதன் கவிதை நடையில் காண முடிகிறது.

    வடிப டும்முழக் கிடியென விடும்
    கொடியு டைமதில் கிடுகி டென்றிடும்
    விடுபற் கோட்டினில் வெட்டி விட்டிடப்
    படப டென்னவே பயண மானதே

    இங்குச் சொற்களை உடைத்துப் போட்டு, யானையின் கம்பீர நடையைக் கவிதையின் ஓசையில் கண் புலனாகக் கொண்டு வந்து விடுகிறார் ஆசிரியர்.

    (பொருள்: நிலம் வெடிக்குமாறு நடக்கும் மதயானையின் பிளிறல் இடிஇடிப்பது போல இருக்கும்; கொடிகளை உடைய மதில் கிடுகிடு என அசையும்; யானைப் பாகர் அதன் கொம்பினை வெட்டி அடக்க முயன்றும், அது அடங்காமல் படபட என விரைந்து ஓடலாயிற்று)

    இதே போன்று வாசவ தத்தையைப் பிரிந்த உதயணன் புலம்பலாக வரும் பாடல், மென்மையான ஓசையுடைய சொற்களால் அவலச் சுவையை வெளிப்படுத்துவதைக் காணலாம்.

    வீணைநற் கிழத்திநீ வித்தக உருவுநீ
    நாணிற் பாவை தானும்நீ நலந்திகழ் மணியும்நீ
    காண என்றன் முன்பதாய்க் காரிகையே வந்துநீ
    தோணிமுகம் காட்டெனச் சொல்லியே புலம்புவான்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:21:34(இந்திய நேரம்)