தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சீறாப்புராணம்

  • 4.1 சீறாப் புராணம்

    சீறாப் புராணம் = சீறாவைக் கூறும் புராணம். சீறத் என்பது சீறத்துன்னபி என்ற அரபுத் தொடரின் சுருக்கம் ஆகும். இதற்கு நபிகள் நாயகத்தின் வரலாறு என்று பொருள். சீறா என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின் தமிழ் வடிவம். புராணம் என்பது பழமையான வரலாறு எனப் பொருள்படும். திருநபி அவர்களின் வரலாற்றைக் கூறும் புராணம் என்பது இதன் பொருள்.

    4.1.1 ஆசிரியர்

    சீறாப் புராணத்தை உமறுப் புலவர் (கி.பி.1642-1703) என்பவர் இயற்றினார். உமறுப் புலவர் பிறந்த ஊர் கீழக்கரை என்றும், நாகலாபுரம் என்றும் இரு வேறு கருத்துகள் உண்டு. உமறுப் புலவரின் ஆசான் கடிகை முத்துப் புலவர் ஆவார். உமறுப் புலவர் மார்க்க மேதை செய்கு சதக்கத்துல்லா அப்பாவிடம் காப்பியம் இயற்றக் கருப்பொருள் பெற்றார். வடநாட்டுப் புலவர் வாலை வாருதியை எட்டையபுரம் அவைக்களத்தில் தன் புலமையால் வென்றார்.

    நண்பர்கள்

    உமறுப் புலவர் அக்காலத்தில் வாழ்ந்த படிக்காசுப் புலவர். நமசிவாயப் புலவர், கந்தசாமிப் புலவர் ஆகியோரின் நெருங்கிய நண்பர்.

    ஆதரித்தவர்கள்

    இவரை ஆதரித்த வள்ளல்கள் இருவர். ஒருவர் சீதக்காதி, இன்னொருவர் பரங்கிப் பேட்டை அபுல்காசிம் மரைக்காயர்.

    4.1.2 காப்பிய அமைப்பு

    இக்காப்பியம் மூன்று காண்டங்களைக் கொண்டது. அவை:

    1)   விலாதத்துக் காண்டம்
    2)   நுபுவ்வத்துக் காண்டம்
    3)   ஹிஜ்ரத்துக் காண்டம்

    என்பவை ஆகும்.

    விலாதத்துக் காண்டம்

    சீறாப் புராணத்தின் முதல் காண்டம் விலாதத்துக் காண்டம் ஆகும். விலாதத் என்ற அரபுச் சொல்லுக்குப் பிறப்பு என்பது பொருள். இதில் நபிகள் நாயகத்தின் பிறப்பும், இளமையும், தொழில் முயற்சியும் முதலில் கூறப்படுகின்றன. பின்னர், கதீஜா நாயகியாரின் உறவு, அவர்கள் திருமணம், பாத்திமா பிறப்பு ஆகிய செய்திகள் கூறப்படுகின்றன.

    இது இருபத்து நான்கு படலங்களைக் கொண்டு உள்ளது.

    நுபுவ்வத்துக் காண்டம்

    இது இரண்டாவது காண்டம். நுபுவ்வத் என்ற அரபுச் சொல்லின் பொருள் தீர்க்க தரிசனம் என்பதாகும். இது நபிகள் நாயகம் நபித்துவம் என்னும் நபிப் பட்டம் பெற்றதைப் பாடுகிறது. வானவர் தலைவர் ஓதிய திருக்குர்ஆன் வேத உரைகள் நபிகள் நாயகத்திற்கு வெளிப்படுத்தப்பெற்றதும், அதனை நபிகள் நாயகம் மக்களுக்கு எடுத்துரைத்து அறிவுரை கூறியதும் கூறப்படுகின்றன. மேலும் தீமைகள் செய்து வந்த குறைசிகள் எனும் குலத்தவரின் கொடுமைகளும் இக்காண்டத்தில் கூறப்பட்டுள்ளன. முஸ்லீம்களின் பொறுமையைப் பற்றியும், இசுலாம் உறுதி பெற்றது பற்றியும் இக்காண்டம் தெரிவிக்கிறது.

    இதில் இருபத்தொரு படலங்கள் உள்ளன.

    ஹிஜ்ரத்துக் காண்டம்

    இது மூன்றாவது காண்டம். ஹிஜ்ரத் என்ற அரபுச் சொல்லுக்கு இடம் பெயர்தல் என்பது பொருள்.

    மக்காக் குறைசிகள், நபிகள் நாயகத்திற்குக் கொடுமைகள் பல செய்தனர். நபிகள் நாயகம் மக்காவை விட்டு, மதீனாவிற்கு வரவேண்டுமென்று அங்குள்ள மக்கள் அழைத்தனர். அந்த அழைப்பை நபிகள் நாயகம் ஏற்றார். இசுலாமிய அறநெறிகளை வளர்க்க மக்காவை விட்டு மதீனா நகர் சென்றார். அங்கு இசுலாமிய அறநெறி வளர்த்த வரலாறும் இக்காண்டத்தில் விவரிக்கப்படுகிறது. ஆனால் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு முடிவுபெறவில்லை. உறனிக் கூட்டத்தார் படலத்துடன் முடிகிறது. நபிகள் நாயகத்தின் ஐம்பத்தேழாவது வயதுவரை நடந்த நிகழ்ச்சிகளோடு சீறாப் புராணம் நிறைவு அடைகிறது. இது நாற்பத்தேழு படலங்களால் ஆனது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 26-07-2017 16:40:08(இந்திய நேரம்)