தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தமிழ்மரபு

  • 4.5 தமிழ் மரபு

    சீறாப் புராணத்தில் தமிழ்ப் பண்பாடு விளக்கப்பட்டுள்ளது. இசுலாமிய மரபுகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன. நானில வருணனையும், பாலை நில வருணனையும் காணப்படுகின்றன. போர்க்களக் காட்சிகள் தமிழகத்துப் போர்களோ எனக் கருதுமாறு பாடப்பெற்றுள்ளன. இயற்கை கடந்த நிகழ்ச்சிகள் மிகுதியாக உள்ளன. கற்பனைகளும் அணிகளும் நிறைந்து விளங்குகின்றன.

    இரு பண்பாட்டின் பாலம்

    உமறுப் புலவர் கம்பராமாயணத்தில் நல்ல புலமையும் ஈடுபாடும் கொண்டவர். சீவக சிந்தாமணியையும் நன்கு கற்றவர். இத்தகைய பின்புலத்தில் இசுலாம், தமிழ் ஆகிய இருபெரும் பண்பாடுகளையும் இணைத்து அழியாக் காப்பியம் பாடிய பெருமை உமறுப் புலவருக்கே உரியது. இரண்டு பண்பாடுகளைக் கலந்து பாடினாலும் இரண்டுமே தம் தம் தனித்தன்மையை இழந்து விடாதபடி பாடியிருப்பது மற்றொரு சிறப்பு. இவ்வாறு சீறாப் புராணத்தில் சிறப்பும் தனித்தன்மையும் பொருந்தி அமைந்துள்ளன.

    கடவுள் வாழ்த்து

    தமிழ்ப் புலவர்கள் காப்புப் பாடல் பாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உருவமற்ற ஓர் இறைக்கோட்பாடு இசுலாமியத்தின் அடிப்படை. இறைவனைப் போற்றுதல், முகம்மது நபி, பிற மதிப்பிற்குரிய சான்றோர்கள் ஆகியோரைப் போற்றுதல் என்னும் மரபில் தனித்தனியாக 17 பாடல்களில் கடவுள் வாழ்த்தை உமறுப் புலவர் பாடியுள்ளார்.

    4.5.1 தமிழ் மரபும் காளி வழிபாடும்

    பாலை நிலத்தைப் பாடும்போது காளியின் சித்திரத்தினைக் கண்முன் கொண்டு நிறுத்துகிறார். காளியைப் பாலை நிலத்துக்குரிய கடவுளாகவும் பேய்களை அவளுடைய படைகளாகவும் பாடுவது தமிழ் மரபு. இதனையே உமறுப் புலவர்,
     

    மூஇலை நெடுவேல் காளிவீற் றிருப்ப
         முறைமுறை நெட்டுடல் கரும்பேய்
    ஏவல்செய் துஉறைவது அலதுமா னிடர்கால்
         இடுவதற்கு அரிது ...

    (சுரத்தில் புனல் அழைத்த படலம் - 8  (687)

    என்று பாடுகிறார்.

    இந்தப் பாடலில் தமிழ்நாட்டில் கொற்றவை என்று போற்றி வணங்கப்படும் காளியைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதை நாம் காண முடிகிறது.

    4.5.2 தமிழ் மரபும் போரும்

    சீறாப் புராணத்தில் தமிழ்நாட்டுப் போர்க் கருவிகளையே சொல்லிப் போரைக் காட்டுகிறார் உமறுப் புலவர். பதுறுப் படலத்தில்,

    பரிசைகே டகம்வாள் சொட்டை
         பட்டயம் சுரிகை தண்டம்
    எரிசெய்வேல் சவளம் குந்தம்
         இடுசரத் தூணி வல்வில்
    வரிசையில் நிரையும் ஏந்தும்
         வயவரும் பரியும் மற்றும்
    விரல்இட மின்றி எங்கும்
         நெருங்கின படையின் வெள்ளம்

    (பதுறுப் படலம் - 24 (3375)

    (பரிசை = கவண்கல் போன்றவற்றைத் தடுப்பதற்குரிய தட்டி; கேடகம் = வாள் முதலியவற்றைத் தடுப்பது; பட்டயம் = பட்டாக்கத்தி; சரிகை = சூரிக் கத்தி; சவளம் = ஈட்டி; குந்தம் = குந்தளம்; இடுசரத் தூணி = அம்புகள் நிறைந்த கூடு; வயவர் = வீரர்;  பரி = குதிரை)

    எனப் பரிசை, கேடகம், வாள், சொட்டை, பட்டயம், சுரிகை, தண்டம், வேல், சவளம், குந்தம், சரத்தூணி, வில் முதலிய தமிழ்நாட்டுப் படைக்கருவிகளைப் பட்டியலிட்டுள்ளார்.

    வீரனின் ஆயுதம்

    வாளை இழந்த வீரனைத் தாக்கினான் மற்றொரு வீரன். வாளால் அவன் கையை வெட்டி வீழ்த்தினான். வெட்டுண்டு விழுந்த தனது கையை எடுத்தான். அதையே ஆயுதமாகக் கொண்டு தன்னை வெட்டிய வீரனை அடித்து வீழ்த்தினான் என்று உமறுப் புலவர் பதறுப் படலத்தில் பாடியுள்ளார்.

    வெற்றி வாள்கணை பொருதுஅழிந்
         திடலும்வெம் சினத்தின்
    முற்றி நின்றனன் கண்டு ஒரு
         திறலவன் முன்னி
    இற்று வீழ்ந்திடத் தோளினை
         வாளினால் எறிந்தான்
    அற்ற தோள்எடுத்து அவன்தனைச்
         சிதைத்தனன் அவனே

    (பதுறுப் படலம் - 146  (3497)

    (கணை = அம்பு; பொருது = போரிட்டதால்; வெம்சினம் = கடுமையான கோபம்; திறலவன் = வீரன்; முன்னி = நெருங்கி; இற்று வீழ்ந்திட = துண்டித்து வீழ்ந்திடுமாறு)

    இவ்வாறு கை வெட்டப்பட்ட வீரர்களின் வீரச் செயல்கள் பற்றி உரைக்கிறார் உமறுப் புலவர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 26-07-2017 17:33:55(இந்திய நேரம்)