Primary tabs
-
4.5 தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும்
தொழிற்பெயர் பற்றியும், வினையாலணையும் பெயர் பற்றியும் முந்தைய ‘பெயர்ச்சொல்’ பற்றிய பாடத்தில் அறிந்துள்ளோம்.
ஒருபொருள் செய்யும் தொழிலைக் குறித்து வரும் பெயர்ச்சொல் தொழிற்பெயர் எனப்படும்.
எடுத்துக்காட்டு:
வருதல், இருத்தல், உண்ணல், உறங்கல்
ஒரு வினைமுற்றுச் சொல், தன்னுடைய வினைமுற்றுப் பொருளைக் காட்டாது, அவ்வினையைச் செய்தவனையோ அல்லது செய்த பொருளையோ குறிக்கும் பெயர்ப் பொருளில் வருவது வினையாலணையும் பெயர் எனப்படும்.
எடுத்துக்காட்டு
படித்தவர் தேர்வில் வெற்றி பெற்றனர்
படித்தவர் என்பது படித்த செயலைக் குறிக்காமல், அதைச் செய்த மாணவரைக் குறித்துப் பெயராகி வந்தது. ஆகவே, 'படித்தவர்' - வினையாலணையும் பெயராகும்.
தொழிற் பெயர்கள் படர்க்கை இடத்திற்கே உரியவை ஆகும். வினையாலணையும் பெயர்கள் தனித்தனி மூன்றிடத்திற்கும் (தன்மை, முன்னிலை, படர்க்கை) உரியவையாம்.
எடுத்துக்காட்டு
வருகை, மறதி - தொழிற்பெயர்கள் இவை படர்க்கை இடத்திற்கே உரியன.
வருகை நன்று, மறதி தீது- என வரும்.
உண்டேன், உண்டாய், உண்டானை என்ற வினையாலணையும் பெயர்கள் முறையே தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூவிடங்களுக்குத் தனித்தனியே உரியனவாகும்.
உண்டேனை (உண்ட என்னை)- தன்மைஉண்டாய்க்கு (உண்ட உனக்கு)- முன்னிலைஉண்டானை (உண்டவனை)- படர்க்கை
● தொழிற் பெயர்க்கும் வினையாலணையும் பெயர்க்கும் வேறுபாடு
தொழிற் பெயர், வினையாலைணையும் பெயர் ஆகிய இரண்டும் வினையிலிருந்து பிறக்கும் பெயர்கள் என்ற ஒற்றுமை உடையன.
எனினும், தொழிற்பெயர் தொழிலுக்குப் பெயராய் வந்து படர்க்கை இடத்திற்கே உரியது ஆகும்.
வினையாலணையும் பெயர், தொழிலை உடைய பொருளுக்குப் பெயராய் வந்து மூன்று இடங்களுக்கும் தனித்தனியே உரியதாக வரும்.
வினையின் பெயரே படர்க்கை; வினையால்
அணையும் பெயரே யாண்டுமாகும்.(நன்னூல் -286)
(வினையின் பெயர் = தொழிற்பெயர்; வினை= தொழில்)