Primary tabs
-
4.4 எண்ணால் வரும் உயர்திணைப் பெயர்கள்
ஒன்று என்னும் எண்ணின் அடியாக ஒருவன், ஒருத்தி என்ற பெயர்கள் வரும்.
ஒருவன்- ஆண்பால்ஒருத்தி- பெண்பால்ஒருவன் என்பதை நோக்கிப் பெண் பாலாக ஒருவள் எனக் கூறக் கூடாது. அதே போல ஒருத்தி என்பதை நோக்கி ஆண்பாலாக ஒருத்தன் என்று கூறக் கூடாது.
ஒன்றுக்கு மேல் இரண்டு மூன்று முதலாகிய எண்களால் ஆண்பால் பெயரும், பெண்பால் பெயரும் வாரா. அதாவது இருவன், இருத்தி என்றாற் போன்ற பெயர்கள் வாரா.
ஒருவர், இருவர், மூவர் எனவரும்; இவை இருபாலாருக்கும் பொதுவாகும்.
ஒருவன் ஒருத்திப் பெயர்மேல் எண்ணில(நன்னூல் -288)
மேலும் இவ் ஒருவர் என்ற சொல், சொல் அளவில் பன்மையாய்ப் பொருள் அளவில் ஒருமையாய் இங்கு வந்துள்ளது.
ஒருவர் என வழங்கும் சொல், உயர்திணை ஆண்பால், பெண்பால் இரண்டிற்கும் பொதுவாய் அத்திணைக்குரிய பன்மை வாய்பாட்டு வினையைக் கொண்டு முடியும்.
எடுத்துக்காட்டு
ஆடவருள் ஒருவர் அறத்தின் வழி நிற்பார்
பெண்டிருள் ஒருவர் கணவன் வழி நிற்பார்இங்கே,
ஒருவர் நிற்பான்
ஒருவர் நிற்பாள்எனப் பகுதிக்கு ஏற்ப ஒருமைச் சொல்லைக் கொள்ளாது, ஒருவர் நிற்பார் என விகுதிக்கு ஏற்பப் பன்மைச் சொல்லையே கொண்டு முடிந்தது.
மேலும், உரையாசிரியர் கூறும் கருத்தை இங்கே காணலாம்.
உயர்த்திக் கூறும் பொருட்டு ‘ஆர்’ என்னும் விகுதி பெற்ற இருதிணைப் பொதுப்பெயரும், பால்பகா அஃறிணைப் பெயரும், சிறுபான்மை உயர்திணைப் பெயரும் பன்மைச் சொல்லோடு முடியும்.
எடுத்துக்காட்டு
சாத்தனார் வந்தார்
முடவனார் வந்தார்
முடக்கொற்றனார் வந்தார்
தந்தையார் வந்தார்இருதிணைப் பொதுப்பெயர்கள் பன்மைச் சொல் கொண்டு முடிந்தன.
நரியார் வந்தார்
பூனையார் வந்தார்பால்பகா அஃறிணைப் பொதுப் பெயர்கள் பன்மைச்சொல் கொண்டு முடிந்தன.
நம்பியார் வந்தார்
நங்கையார் வந்தார்
இறைவனார் வந்தார்
அகத்தியனார் வந்தார்உயர்திணைப் பெயர்கள் பன்மைச் சொல் கொண்டு முடிந்தன.