தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.4 எட்டாம் வேற்றுமை அல்லது விளிவேற்றுமை

  • 6.4 எட்டாம் வேற்றுமை அல்லது விளிவேற்றுமை

    எட்டாம் வேற்றுமைக்குத் தனியாக உருபு இல்லை. படர்க்கைப் பெயரை முன்னிலையாக விளிப்பது அதன் பொருள் ஆகும். விளித்தல் என்பதற்கு அழைத்தல் அல்லது கூப்பிடுதல் என்பது பொருள். எட்டாம் வேற்றுமை விளிப்பொருளில் வருவதால் இது விளிவேற்றுமை எனப் பெயர் பெற்றது.

    எடுத்துக்காட்டாக, ‘இராமா! வா’ என விளிக்கும்போது (அழைக்கும் போது) இராமன் என்னும் படர்க்கைப்பெயர் முன்னிலைப் பொருளுக்கு உரியது ஆகின்றது.

    பெயர்ச்சொற்கள் விளிக்கப்படும்பொழுது பெயரின் இறுதியில் சில மாறுதல்கள் ஏற்படும். அவை, ஈறு திரிதலும் (இறுதிஎழுத்து மாறுதல்), ஈறு குன்றலும் (குறைதல்), ஈறு மிகுதலும், இயல்பாக வருதலும், ஈற்றுஅயல் எழுத்துத் திரிதலும் ஆகும். (ஈற்றயல் எழுத்து = இறுதி எழுத்துக்கு முந்தைய எழுத்து.)

    எடுத்துக்காட்டு

    தந்தை
    - தந்தாய் !
    தங்கை
    - தங்காய் !

    ஈறுதிரிதல் (‘ஐ’
    என்னும் இறுதி
    எழுத்து ஆய் எனத் திரிந்தது)

    அன்னை
    - அன்னாய்!

    மன்னன் வருக!
    - மன்! வருக
    நண்பன்
    - நண்!

    ஈறுகுன்றல் (‘ன்’ என்ற இறுதி
    எழுத்துக் குறைந்தது)

    புலவன்
    - புல!

    அரசன்
    - அரசனே
    இறைவன்
    - இறைவனே

    ஈறுமிகுதல் (ஏகாரம் மிகுந்து வந்தது)

    மகன்
    - மகனே

    தம்பி
    - தம்பி!
    தோழி
    - தோழி!

    இயல்பாக வந்தது.
    (மாற்றம் இன்றி வருவது)

    மாமி
    - மாமி!

    மக்கள்
    - மக்காள்
    வணிகர்
    - வணிகீர்

    ஈற்றுஅயல் (இறுதி
    எழுத்துக்கு முந்தைய
    எழுத்து) நீண்டது

    புலவர்
    - புலவீர்

    விளிவேற்றுமையில் ஏற்படும் மாறுதல்களை மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் தெளிவுபடுத்துகின்றன. இவை முதல் வேற்றுமைபோல இயல்பான பெயராக இல்லை. திரிந்து வந்துள்ளன.

    படர்க்கை ஐம்பாலும் (ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்) விளிஏற்கும் என்பதால் இவ்வுருபிற்கும் எழுவாய் உருபிற்கும் சொல்லால் வேற்றுமை இல்லை என்றாலும் பொருளால் வேற்றுமை உண்டு.

     

    அப்பா வந்தார்
    - எழுவாய் வேற்றுமை
    அப்பா தாருங்கள்
    - விளிவேற்றுமை

    இவ்வாறு எழுவாய் வேற்றுமையிலிருந்தும் சிறிது வேறுபட்டு நிற்பதால் இதனை இறுதியில் வைத்து எட்டாம் வேற்றுமையாக இலக்கண நூலார் அமைத்தனர்.

    எட்டன் உருபே எய்து பெயர் ஈற்றின்
    திரிபு குன்றல் மிகுதல் இயல்பு அயல்
    திரிபுமாம் : பொருள் படர்க்கை யோரைத்
    தன்முகமாகத் தான்அழைப் பதுவே

    (நன்னூல் : 303)

     
  • அண்மைவிளியும்  சேய்மைவிளியும்
  • இவ்விளிவேற்றுமை அண்மைவிளி, சேய்மைவிளி என இரு வகைப்படும்.

    அருகில் உள்ளவரை அழைப்பது அண்மை விளி; தொலைவில் உள்ளவரை அழைப்பது சேய்மை விளி.

    (அண்மை = அருகு, சேய்மை = தொலைவு)

    எடுத்துக்காட்டு

    இராமன்
    - இராம!

    அண்மைவிளி

    அம்மா
    - அம்ம!
    இராமன்
    - இராமா, இராமனே,
    இராமாவோ
    சேய்மைவிளி

    இராமாவோ என்பது புலம்பலில் வரும் விளி.

    6.4.1 விளி ஏற்கும் பெயர்கள்

    விளி ஏற்கும் பெயர்களுள் உயர்திணைப்பெயர், அஃறிணைப்பெயர், பொதுப்பெயர் என்று பிரித்து அவை விளி கொள்ளும் முறையை இலக்கண நூலார் விளக்குவர்.

    6.4.2 விளி ஏலாப் பெயர்கள் (விளி கொள்ளாப் பெயர்கள்)

    தன்மைப் பெயர்கள் விளி கொள்ளா.
    முன்னிலைப் பெயர்கள் விளி கொள்ளா.

    படர்க்கைப் பெயர்களுள் நுமன், நுமன், நுமர் ஆகிய கிளைப்பெயர்கள் விளி கொள்ளா. எவன், எவள், எவர், எது, எவை போன்ற வினாப்பெயர்களும்,

    அவன், அவள், அவர், அது, அவை
    இவன், இவள், இவர், இது, இவை
    உவன், உவள், உவர், உது, உவை

    ஆகிய சுட்டுப் பெயர்களும், தான், தாம் என்ற படர்க்கைப் பெயர்களும், மற்றையான், பிறன் போன்ற பிறபெயர்களும் விளி கொள்ளாத பெயர்கள் ஆகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 25-07-2017 16:46:49(இந்திய நேரம்)