தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வினைச்சொல் - விளக்கமும், பகுப்பும்

  • 1.1 வினைச்சொல் - விளக்கமும் பகுப்பும்

    ஒரு பொருளின் தொழிலைக் குறிக்கும் சொல்லுக்கு வினைச்சொல் என்று பெயர்.

    அம்மா அழைக்கிறாள்
    பாப்பா வருகிறாள்

    என்னும் தொடர்களில் அம்மா, பாப்பா என்னும் பெயர்கள் உயிர் உள்ளவர்களைக் குறிக்கும்.

    நிலம் அதிர்ந்தது.
    நீர் ஓடுகிறது.

    என்னும் தொடர்களில் உள்ள நிலம், நீர் என்னும் பெயர்கள் உயிரற்ற பொருள்களைக் குறிக்கும். ஆகவே, உயிர்ப்பொருள், உயிரற்ற பொருள் ஆகியவற்றின் தொழிலையே வினை என்கிறோம். பொருளின் புடை பெயர்ச்சியே வினை எனச் சுருக்கமாகக் கூறலாம். புடை பெயர்ச்சி என்பது அசைவு என்பதாகும்.

    தமிழ்மொழியில் அடிச்சொற்கள் பல பெயர், வினைகளுக்குப் பொதுவாகவே உள்ளன. அலை, காய், பூ முதலியவற்றைச் சான்றாகக் கூறலாம்.

    அலை வருகிறது
    அலையைப் பார்

    இத் தொடர்களில் அலை என்பது பெயர்ச் சொல்லாகும்.

    வெயிலில் அலையாதே
    ஏன் அலைகிறாய்

    இத் தொடர்களில் அலை என்பது வினைச் சொல்லாகும். இவ்வாறு பெயருக்கும், வினைக்கும் பொதுவான சொற்கள் தமிழில் மிகுதியாக உள்ளன என்பதை மட்டும் இப்பொழுது நினைவிற் கொள்க.

    • வினைப்பகுப்பு

    வினைச்சொல் காலத்தைக் காட்டும்; வேற்றுமை உருபை ஏற்காது.

    வினைச்சொல்லைத் தமிழில் தெரிநிலைவினை, குறிப்புவினை என இரண்டாகப் பகுத்திருக்கிறார்கள். தொழிலையும், அது நிகழும் காலத்தையும் வெளிப்படையாகக் காட்டும் வினைகளைத் தெரிநிலை வினை என்றனர். இவ்வாறு வெளிப்படையாகக் காலத்தைக் காட்டாமல் குறிப்பால் காலத்தைக் காட்டுகின்ற சொற்களைக் குறிப்பு வினை என்றனர்.

    எடுத்துக்காட்டு

    அவன் வந்தான்    - தெரிநிலைவினை
    அவன் பணக்காரன் - குறிப்புவினை

    இங்கே முதல் தொடரில் வந்துள்ள வந்தான் என்பது, வருதல் என்ற தொழிலையும், அத்தொழில் நிகழ்ந்த இறந்த காலத்தையும் வெளிப்படையாகக் காட்டுவதால் தெரிநிலை வினை ஆயிற்று.

    இரண்டாவது தொடரில் வந்துள்ள பணக்காரன் என்பது, காலத்தைக் காட்டவில்லை. எனினும் அவன் நேற்றுப் பணத்தை உடையவனாக இருந்தான் என்றோ, இன்று பணத்தை உடையவனாக இருக்கிறான் என்றோ, நாளை பணத்தை உடையவனாக இருப்பான் என்றோ பொருள் தருகிறது.  இத்தொடரில் நேற்று, இன்று, நாளை போன்ற சொற்களின் துணைகொண்டு மட்டுமே காலத்தைக் குறிப்பாக அறிய முடியுமாதலால் ‘பணக்காரன்’ என்பது குறிப்பு வினை ஆயிற்று.

    1.1.1 தெரிநிலை வினை

    செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறு பொருள்களைத் தெரிநிலைவினை காட்டும் என்பர் நன்னூலார்.

    செய்பவன் கருவி நிலம் செயல் காலம்
    செய்பொருள் ஆறும் தருவது வினையே

    (நன்னூல்:319)

    என்பது நன்னூல் நூற்பா.

    வரைந்தான் என்னும் வினைச்சொல்லைச் சான்றாக எடுத்துக் கொள்வோம். இதனால் அறியப்படும் ஆறு செய்திகளையும் கீழே காண்க.

    வரைந்தவன்
    -
    (செய்வன்) ஓவியன்
    வரைய உதவியது
    -
    (கருவி) தூரிகை
    வரைந்த இடம்
    -
    (நிலம்) ஓவியக்கூடம்
    வரைதல்
    -
    (செயல்) ஓவிய வரைவு
    வரையப்பட்டது
    -
    (செய்பொருள்) ஓவியம்
    வரைந்த காலம்
    -
    (காலம்) இறந்தகாலம்

    இந்த ஆறு கருத்துகளையும் ஒரு வினைச்சொல் உணர்த்துவதை நினைவிற் கொள்ள வேண்டும்.

    வினைச் சொற்களை முற்றுவினை, எச்சவினை என இரண்டாகப் பிரிக்கலாம். எச்சவினையைப் பெயரெச்சம், வினையெச்சம் எனப் பிரிக்கலாம்.

    வந்தான்
    -
    வினைமுற்று
    வந்து
    -

    வினையெச்சம் (வந்து என்பதற்குப் பிறகு ஒரு வினைச்சொல் வந்தால்தான் கருத்து நிறைவு பெறும். எ-டு. வந்து போனான்)

    வந்த
    -

    பெயரெச்சம் (வந்த என்பதற்குப் பிறகு ஒரு பெயர்ச்சொல் வந்தால்தான் கருத்து நிறைவு பெறும்.   எ-டு. வந்த பையன்)

    ஒரு தெரிநிலை வினைமுற்றுச் சொல்லில் பகுதியால் செயலும், விகுதியால் வினை செய்தவரும், இடைநிலையால் காலமும் வெளிப்படையாகப் புலப்படும்.

    (எ.கா) செய்தான் - தெரிநிலை வினைமுற்று

    செய்
    -
    பகுதி
    -
    செய்தல் என்னும் வினையைக் குறித்தது.
    ஆன்
    -
    விகுதி
    -
    உயர்திணை ஆண்பாலைக் குறித்தது.
    த்
    -
    இடைநிலை
    -
    இறந்தகாலம் குறித்தது.

    பெயரெச்சம் வினையெச்சங்களைப் பற்றி இத் தொகுப்பில் பின் ஒரு பாடத்தில் படிக்க உள்ளீர்கள். இப்பொழுது குறிப்பு வினையைக் குறித்துக் காண்போம்.

    1.1.2 குறிப்புவினை

    குறிப்புவினை என்பது பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறனுள் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு தோன்றி, வினை உணர்த்துவதாக அமையும். இது, பேசுவோரின் குறிப்பிற்கேற்பக் காலத்தைக் குறிப்பாக உணர்த்தும்.

    அவன் பொன்னன்
    -
    பொருட்பெயர் (பொன் = பொருள்,
    பொன்னை உடையவன்)
    அவன் கச்சியான்
    -
    இடப்பெயர் (கச்சி = இடம், கச்சி
    என்னும் ஊரைச் சேர்ந்தவன்; கச்சி - காஞ்சி மாநகர்)
    அவன் ஆதிரையான்
    -
    காலப் பெயர் (ஆதிரை = நாள்,
    நட்சத்திரம். ஆதிரை நட்சத்திரத்தில் பிறந்தவன்)
    அவன் ஆறுமுகன்
    -
    சினைப்பெயர் (முகம் - சினை,
    ஆறுமுகங்களைக் கொண்டவன்)
    அவன் கரியன்
    -
    குணப்பெயர் (கருமை= நிறப்பண்பு, கரிய நிறம் உடையவன்)
    அவன் தச்சன்
    -
    தொழிற்பெயர் (தச்சு = தொழில்)

    பிற திணை பால்களுக்குரிய குறிப்பு வினைமுற்றுச் சொற்களும் இவ்வாறே அமையும். தனியே பொன்னன், கரியன் எனும் பெயர்கள் குறிப்புவினைகள் ஆகா. தொடரில் இவை பயனிலையாக வரும்பொழுதே குறிப்புவினைமுற்றுகள் ஆகும். ‘பொன்னன் வந்தான்’ என்பதில் ‘பொன்னன்’ எழுவாயாக உள்ளது. ‘அவன் பொன்னன்’ என்பதில் ‘பொன்னன்’ பயனிலையாக உள்ளது. எனவே, இடமறிந்து குறிப்புவினை எது என அறிய வேண்டும்.

    குறிப்புவினைச் சொற்கள் பெரும்பாலும் வடிவத்தில் பெயர்ச் சொற்களாகவே தோன்றுவதால், அவை தொடரில் வரும் இடத்தை வைத்தே குறிப்புவினையா என்பதை முடிவு செய்யவேண்டும். தனியே இச் சொற்களைச் சொன்னால் இவை பெயரே ஆகும்.

    குறிப்புவினை என்பதும் வினைக்குறிப்பு என்பதும் ஒரே பொருள்படும் சொற்களே ஆகும். குறிப்புவினைச் சொல் வடிவால் காலம் காட்டுவதில்லை. எனவே, காலம் காட்டாது என முடிவு செய்திடலாகாது. பேசுவோர், கேட்போர் குறிப்பிற்கேற்ப, காலத்தை அது குறிப்பாக உணர்த்தும் என்பது நினைவில் இருக்க வேண்டும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 25-07-2017 18:56:12(இந்திய நேரம்)