தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வினையின் அடிப்படையில் உருவாகும் பெயர்கள்

  • 1.4 வினையின் அடிப்படையில் உருவாகும் பெயர்கள்

    வினைச்சொற்களின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் பல தோன்றுகின்றன. அப்படித் தோன்றும் சொற்கள், பெயராக இருப்பினும், அடிப்படையில் வினையாக இருந்தவையே என்பதை அப் பெயர்கள் புலப்படுத்தும். வினைச் சொல்லின் அடிப்படையில் தோன்றும் பெயர்களை இருவகைப்படுத்தலாம்.

     

    இவற்றை எடுத்துக்காட்டுகள்வழி தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

    1.4.1 வினை அடிப்படையில் உருவாகும் பெயர்கள்

    ஒரு வினை அடிச்சொல் எந்த மாற்றத்திற்கும் உள்ளாகாமல் அப்படியே பெயராக வருதல் உண்டு. முன்பே கூறியவாறு, தமிழில் உள்ள அடிச்சொற்கள் பல பெயருக்கும், வினைக்கும் பொதுவாக உள்ளன என்னும் கருத்து இங்கு நினையத்தக்கது.

    (எ.கா)

    கட்டு
    இரண்டு கட்டுக் கீரை - பெயர்
     
    பூக்களை மாலை கட்டு - வினை

    சில சொற்களில் சிறுசிறு மாற்றங்களுடன் வினையிலிருந்து பெயர்ச்சொல் தோன்றக் காணலாம்.

    வினை
    பெயர்
    காண்
    கண்
    எழுது
    எழுத்து
    சேர்
    சேர்மானம்
    சுடு
    சுடர்
    குதி
    குதிரை

    1.4.2 தொழிற்பெயர்கள்

    ஒரு வினையிலிருந்து உருவாகி, அவ்வினையைக் குறிக்கும் பெயராகப் பயன்படுவது தொழிற்பெயர் ஆகும்.

    (வினை) ஆடு - ஆட்டம் (பெயர்)
    (வினை) வாடு - வாட்டம் (பெயர்)
    (வினை) நாடு - நாட்டம் (பெயர்)
    (வினை) ஓடு - ஓட்டம் (பெயர்)

    தொழிற் பெயர்களில் ஒரு வகை, தொழிலை மட்டுமே உணர்த்தும். அவை காலம் காட்டா. மேற்காட்டிய ஆட்டம், வாட்டம் முதலிய தொழிற்பெயர்கள் தொழிலை (ஆடுதல், வாடுதல்) மட்டுமே உணர்த்தும். உழவு, வரவு (வருகை), பொழிவு முதலியனவும் இத்தகையனவே.

    இன்னொரு வகைக்குச் (காலம் காட்டும் தொழிற் பெயர்களுக்கு) சான்று:

    தாங்கள் இங்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
    அவர் இவ்வாறு கூறியது நன்றாக இல்லை.
    இறந்த காலம்

    இத் தொடர்களில் வரும் ‘வந்தது’, ‘கூறியது’ என்னும் சொற்கள் முறையே, வந்த செயல், கூறிய செயல் என்பவற்றையே சுட்டுகின்றன. இவ்வாறு காலம் காட்டும் தொழிற்பெயர்கள் வேறு சிலவும் உண்டு.

    இனியும் கூட்டத்தில் பேசிக் கொண்டிருப்பது
    நன்றன்று.
    அதோ, மழை வந்து கொண்டிருப்பது தெரிகிறதா?

    நிகழ்காலம்

    1.4.3 வினையாலணையும் பெயர்கள்

    வினையாலணையும் பெயர்கள் என்பனவும் ஒரு வகையில் தொழிற்பெயர்கள் போன்றவையே. வினையால் அணையும் பெயர் என்பதுவே அச் சொல்லின் இயல்பைப் புலப்படுத்தும். வினைமுற்று, வினைசெய்த கருத்தாவைக் குறிக்க வருவது வினையாலணையும் பெயர் ஆகும்.

    வந்தான் (வந்தவன்) நல்லவன்.
    வந்தானைப் (வந்தவனைப்) பார்த்தேன்.
    வெந்ததை உண்கிறோம்.

    இத் தொடர்களில் உள்ள வந்தான், வெந்தது ஆகிய சொற்கள் வினையாலணையும் பெயர்களாகும். வினைமுற்றுச் சொற்கள் வினையாலணையும் பெயர்களாக வருகின்றன.

    இவை போன்று வினையாலணையும் பெயர்கள் குறிப்பு வினையிலிருந்தும் அமையும்.

    கரியவனைக் கண்டாயா?
    கரியானை வரச் சொல்.

    என்பன போன்றவை குறிப்பு வினைமுற்றுச் சொற்களில் இருந்து அமைந்தவையே. அஃறிணையிலும் இத்தகு பெயர்கள் அமையும்.

    இவ்வாறு, பல்வகையான சொற்கள் வினைச் சொல்லில் இருந்து உருவாகிப் பெயர்களாகப் பயன்படுகின்றன. எனினும் இவை யாவும் வினை இயல்புகளோடு இருப்பது நோக்கத்தக்கது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-08-2017 14:43:19(இந்திய நேரம்)