தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வியங்கோள் வினைமுற்று

  • 3.5 வியங்கோள் வினைமுற்று

    வியம் என்பதற்கு ஏவல் அல்லது கட்டளை என்று பொருள். வியத்தை (அல்லது) ஏவுதலைக் கொள்வது ஆகையால் இச்சொல் வியங்கோள் எனப்பட்டது. வியங்கோள் வினைமுற்று மிகப் பழங்காலத்தில் இருந்தே வழக்கில் இருந்து வருகிறது. இது எவ்வெப் பொருள்களில் வரும், இதற்குரிய விகுதிகள் யாவை என்பன குறித்து இனித் தெரிந்து கொள்வோம். இறுதியில் வியங்கோளுக்கும் ஏவல் வினைக்கும் உள்ள வேறுபாடுகளையும் தெரிந்து கொள்ளலாம்.

    3.5.1 வியங்கோள் பொருள்கள்

    வியங்கோள் வினை பெரும்பாலும் நான்கு பொருள்களில் பயன்படுத்தப்பெறுகிறது. அவை வாழ்த்தல், வைதல், வேண்டல், விதித்தல் ஆகியவையாம். இச்சொல் இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் உரியதாகப் பயன்படுத்தப்பெறுகிறது.

    வெல்க, வாழ்க
    -
    வாழ்த்தல் பொருள்
    வீழ்க, ஒழிக
    -
    வைதல் பொருள்
    வருக, உண்க
    -
    விதித்தல் பொருள்
    அருள்க, கருணைபுரிக
    -
    வேண்டல் பொருள்

    இவற்றை முன் குறிப்பிட்டவாறு வாழ்க நான், வாழ்க நீ, வாழ்க அவன் என்பன போன்று ஐம்பால் மூவிடத்திற்கும் பயன்படுத்தலாம்.

    3.5.2 வியங்கோள் வினைமுற்று விகுதிகள்

    , என்கிற இரு உயிர்மெய் எழுத்துகளும் ரகர ஒற்றை இறுதியில் பெற்ற இய, இயர் என்பன போன்ற விகுதிகளும் வியங்கோளில் மிகுதியும் வரும்.

    வருக, வாழிய, வாழியர் என்பன அதற்குச் சான்றுகள்.

    • எதிர்மறை வியங்கோள்

    உடன்பாட்டுப் பொருளில் வியங்கோள் வருவது போன்று எதிர்மறைப் பொருளிலும் இது கையாளப் பெறுவதுண்டு.

    வாரற்க,
    கூறற்க,
    செல்லற்க
    வாரல்,
    செல்லல்,
    பகரேல்

    என்பன போன்று இச்சொற்கள் அமையும்.

    இந்நிலையில் ஏவலுக்கும் வியங்கோளுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் இரண்டும் ஒன்றுபோல் உள்ளதால் குழப்பமும், மயக்கமும் ஏற்படும்.

    3.5.3 ஏவல் - வியங்கோள் வேறுபாடுகள்

    ஏவல் :

    1. கட்டளைப் பொருளில் மட்டும் வரும்.

    2. முன்னிலைக்கு மட்டும் உரியது

    3. ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு.

    வியங்கோள் :
    1. வாழ்த்தல், வைதல், விதித்தல், வேண்டல், என்னும் பொருள்களில் வரும்.

    2. தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் மூவிடங்களுக்கும் உரியது.

    3. ஒருமை, பன்மை வேறுபாடு இல்லை.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:56:35(இந்திய நேரம்)