தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முன்னிலைப் பன்மை ஏவல் வினைமுற்று

  • 3.4 முன்னிலைப் பன்மை ஏவல் வினைமுற்று

    முன்னிலையில் உள்ள பலரை நோக்கிக் கட்டளைப் பொருளில் வரும் வினைச் சொற்கள் முன்னிலை ஏவல் பன்மை வினைமுற்றுகள் எனப்படும். இவை இர், ஈர், மின் எனும் விகுதிகளைப் பெற்று வரும்.

    உண்ணிர்
    =
    (உண்ணுங்கள்)
    உண்ணீர்
    =
    (உண்ணுங்கள்)
    காப்பீர்
    =
    (காத்து இருங்கள்)
    காண்மின்
    =
    (காணுங்கள்)
    சென்மின்
    =
    (செல்லுங்கள்)

    என்பன போன்று இவ்விகுதிகள் வினைப் பகுதியோடு சேர்ந்து வரும்.

    செய்யும் என்னும் வாய்பாட்டில் அமைந்த வினைச்சொற்களும் முன்னிலைப் பன்மை ஏவலுக்குப் பயன்படுகின்றன.

    நீர் செய்யும்,
    கேளும்
    நீர் வாரும்,
    எழுதும்
    நீர் உண்ணும்,
    சொல்லும்

    என்பன போன்று இச்சொற்கள் அமையும். இக்காலத்தில் செய்யும் எனும் சொல்லோடு கள் விகுதி சேர்த்துச் செய்யுங்கள் என்பது போல் வருவதே பெரும்பான்மை.

    நீங்கள் செய்யுங்கள்
    நீங்கள் தாருங்கள்
    நீங்கள் பாருங்கள்

    என்பன போல இச் சொற்கள் ஆளப்படுகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 29-07-2017 19:06:51(இந்திய நேரம்)