தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- வலங்கை – இடங்கைப் பூசல்கள்

  • 4.3 வலங்கை – இடங்கைப் பூசல்கள்

    வலங்கை – இடங்கை வகுப்பினரிடையே ஏற்பட்டிருந்த பூசல் 19ஆம் நூற்றாண்டில் கொலையிலும் கொள்ளையிலும் முடிந்ததுண்டு. அப்பூசல்கள் அனைத்தும் இரு வகுப்பினரும் அனுபவித்து வந்த சில உரிமைகளைப் பற்றியனவாகவே எழுந்துள்ளன. சென்னையில் சர் ஆர்ச்சிபால்ட் காம்ப்பெல் (Sir Archibald Compbell) என்பவர் கவர்னராகப் பதவி ஏற்ற பிறகு வலங்கை-இடங்கைப் போராட்டங்கள் நிகழ்ந்தன.

    இடங்கையினர் அனைவரும் தொழிலாளர்கள்; கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அவர்களுடைய வாணிகத்தில் உதவி வந்தவர்கள். ஒரு சமயம் வலங்கையினர் எஸ்பிளனேட் மைதானத்தைக் குறுக்கிட்டுக் கோட்டைக்குச் சென்றபோது தப்பட்டை அடித்துக் கொண்டும், கரண்டிகளைத் தூக்கிக்கொண்டும், மணியடித்துக் கொண்டும் நடந்தார்கள். அவ்வாறு செல்வதற்கு ஏற்கெனவே ஏற்பட்டிருந்த ஓர் ஒப்பந்தம் அவர்கட்கு இடந்தரவில்லை. எனவே, அவர்கள் நடத்தையை எதிர்த்து இடங்கையினர் கவர்னருக்கு முறையிட்டுக் கொண்டனர். எஸ்பிளனேட் மைதானம் அனைவருக்கும் பொது என்றும், ஒருவரையொருவர் முந்திக்கொண்டு செல்லும் உரிமை ஏதும் கிடையாது என்றும் அரசாங்கம் ஆணை பிறப்பித்த பின் பூசல் சற்று ஓய்ந்தது.

    திருவொற்றியூர்க் கோயில் இடங்கைத் தேப்பெருமாள் செட்டியின் நிருவாகத்தில் நடைபெற்று வந்தது. அது எல்லாக் குலத்தினருக்கும் பொதுவாக இருந்தது. ஆனால் வலங்கையினர் பறையரைக் கொண்டு இடங்கையினரை அடிக்கச் சொன்னார்கள் என்று தேப்பெருமாள் செட்டியார் என்பவர் அரசாங்கத்திடம் முறையிட்டார். இத்தகைய சிறுசிறு கலகங்கள் ஆண்டுதோறும் நிகழ்ந்து வந்தன.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1.
    வட இந்தியாவில் காணப்பட்ட எந்த வழக்குகள் தமிழகத்தில் காணப்படவில்லை?
    2.
    எந்தச் சட்டம் சிறு குழந்தைகள் திருமணத்தை எதிர்த்தது?
    3.
    ஏதேனும் மூன்று குலப்பிரிவுகளைக் கூறுக.
    4.
    தீட்சிதர்களுக்கான பழமொழி யாது?
    5.
    யார் காலத்தில் வலங்கை-இடங்கைப் பூசல்கள் நிகழ்ந்தன?
புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2017 17:20:57(இந்திய நேரம்)