Primary tabs
-
4.6 சமயம்
ஆங்கிலேயர் காலத்தில் பல்வேறு சமயப் பூசல்களும் அவ்வப்போது நடந்தன. கிறித்தவப் பாதிரியார்கள் ஆங்கிலேய அரசாங்கத்தின் ஆதரவில் தம் சமயப்பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்து சமயம் புதிய உருவத்தோடு வெளிவரும் வண்ணம் அதற்குச் சில சமய பெரியோர்கள் புத்துயிர் அளித்தனர். இவ்வாறு புத்துயிர் அளித்தவர்களில் இராஜாராம் மோகன் ராய், இரவீந்திரநாத் தாகூர், கேசவ சந்திர சென், தயானந்த சரசுவதி, இராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இவர்கள் இந்து சமயக் கோட்பாடுகளில் பல அடிப்படையான புரட்சிகரமான திருத்தங்கள் செய்தனர். சுவாமி விவேகானந்தர் வேதாந்தக் கருத்துகளை உலகறியச் செய்தார். தமிழகத்தைப் பொறுத்தவரையில் இராமலிங்க அடிகள் தோன்றிச் சமயத் துறையிலும், சமூகத் துறையிலும் பல புரட்சிகரமான மாறுதல்களைச் செய்தார். இவர் பல தீய சடங்குகளையும், மரபுகளையும் அறவே ஒழிக்க முயன்றார். மேலும் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்னும் இயக்கம் ஒன்றைத் தோற்றுவித்தார். தென்னார்காடு மாவட்டத்தில் வடலூர் என்னும் இடத்தில் கி.பி. 1872இல் ஞானசபை என்ற ஒன்றை அமைத்தார். இராமலிங்க அடிகள் திருவருட்பா என்னும் நூலை இயற்றினார். இந்நூலைத் தொழுவூர் வேலாயுத முதலியார் என்பவர் தொகுத்து வெளியிட்டார். மேலும் இராமலிங்க அடிகள் மனுமுறை கண்ட வாசகம் என்ற அழகிய உரைநடை நூல் ஒன்றைக் கி.பி. 1854இல் எழுதி வெளியிட்டார்.